‛‛மனம்மாறிய கல்வித்துறை’’.. கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்
சென்னை: கோடை விடுமுறை முடிந்த பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பது எப்போது? என்பது தொடர்பாக மே 27ம் தேதி வரை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இந்த ஆலோசனை கூட்டத்தின்போது கல்வித்துறை மனம் மாறலாம் எனவும், முன்கூட்டியே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் முன்கூட்டியே பள்ளிகளுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

அதன்படி தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல் 1 முதல் 3ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையும், 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரையும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
அதன்பிறகு ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. பொதுவாக கோடை விடுமுறை என்பது மே மாதம் 1ம் தேதியில் இருந்து தான் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விடப்படும். ஆனால் லோக்சபா தேர்தல் காரணமாக இந்த முறை சீக்கிரமாக கோடை விடுமுறை வழங்கப்பட்டது.
இதற்கிடையே தான் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பது தொடர்பான தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலை உள்ளது. அதோடு மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி என்ன? என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. பொதுவாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜுன் முதல் வாரத்தில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. லோக்சபா தேர்தல் முடிவு என்பது ஜுன் 4ம் தேதி வெளியாகிறது.
இதனால் பள்ளி திறப்பு ஜுன் 2வது வாரத்துக்கு தள்ளிப்போகலாம் என்ற தகவல் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் கோடை வெப்பம் என்பது தமிழகத்தில் வெளுத்து வாங்கியது. இதனால் குழந்தைகளின் நலன் கருதி பள்ளி திறப்பை தள்ளிவைக்கலாமா? என்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் முதற்கட்டமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தான் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக மே 27 ம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பிறகு பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி கல்வித்துறை மனம் மாறலாம் என கூறப்படுகிறது.
அதாவது இந்த மாத தொடக்கத்தில் நடந்த ஆலோசனையில் கோடை வெப்பத்தால் பள்ளி திறப்பை ஜுன் 2வது வாரத்துக்கு கொண்டு செல்லலாம் என பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் தற்போது கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் ஜுன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்க அதிகாரிகள் பரிந்துரை செய்யலாம் என கூறப்படுகிறது. அதாவது ஜுன் 4ல் லோக்சபா தேர்தல் முடிவடைந்த உடன் மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாள் பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‛‛இந்த மாத தொடக்கத்தில் கோடை வெயில் அதிகமிருந்தது. இதனால் ஜூன் 2வது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிட்டோம். ஆனால் கோடை மழை பெய்து வெயில் தணிந்துள்ளது. இதனால் ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பள்ளிகளை திறக்க பரிசீலித்து வருகிறோம். அதோடு மீண்டும் பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் தொடக்கப்பட்டுள்ளது. மே 27 ல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு மீண்டும் பள்ளி திறப்பு குறித்த தேதியை அறிவிக்க உள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications