"அந்த 1 வார்த்தை".. திமிறிய பாஜக.. பணிந்த எடப்பாடி.. மேலிடத்தையே ஈர்த்து.. பழனிசாமி சாதிச்சிட்டாரே
நினைத்ததை செய்து காட்டி இந்த இடைத்தேர்தலில் அதிர வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி
சென்னை: கடந்த சில மாதங்களாகவே, கூட்டணி விஷயத்தில் சமாளித்து வந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, தங்கள் நிலைப்பாட்டை வலிய பதிவு செய்துவிட்டார். "பாஜகவுடன்தான் வரும் தேர்தலிலும் கூட்டணி" என்பதை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதேசமயம், இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி எடுத்த முயற்சிகளுக்கு போதிய பலன் கிடைத்து விட்டதாகவும் ரத்தத்தின் ரத்தங்கள் பெருமிதம் கொள்கிறார்கள். அந்த முயற்சிகளை அலசியும் விவாதித்தும் வருகிறார்கள். அதன் சுருக்கம்தான் இது:
பொதுவாக ஒரு தேர்தல் நடக்கிறதென்றால், யார் வேட்பாளர் என்று முடிவு செய்வதில் குழப்பம் இருக்கும்... ஆனால், இந்த முறைதான், கட்சிக்கு யார் தலைமையே என்ற குழப்பம் ஏற்பட்டது.
ஓபிஎஸ் ஒருபக்கம் போட்டியிட போவதாகவும், எடப்பாடி பழனிசாமி மறுக்கம் போட்டியிட போவதாகவும் சொல்லவும் பாஜக, அதற்கு மேல் குழம்பி விட்டது.

சமாதானம்
இதற்கு நடுவில்தான், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது... ஓபிஎஸ்ஸூம் தேர்தல் ஆணையம் சென்றார்.. எடப்பாடி கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டார்.. ஓபிஎஸ்ஸூம் அப்படியே ஆதரவு கோரினார்.. ஆனால், அப்போதுகூட, இருவரிடம் நேரடி ஆதரவு தருவதாக பாஜக சொல்லவேயில்லை.. இரட்டை இலைக்கு ஆதரவு என்று மட்டுமே பதிலாக கூறியிருந்தது.. இதற்கு நடுவில் இரு தரப்பினரையும் பாஜக சந்தித்து சமாதானம் செய்ய முயன்றது..

பொன்னையன்னா
"நாங்கள் நாங்கள் பலமாகத்தான் இருக்கிறோம். குறிப்பாக, ஓபிஎஸ்ஸை தன் பக்கம் வைத்துக் கொண்டு, இடைத்தேர்தல் நேரத்தில் கரெக்ட்டாக உள்ளே நுழைந்தது பாஜக... ஆனால், மேலிட பிளான்களை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அடித்து ஆட ஆரம்பித்தார்.. "நாங்கள் பலமாகத்தான்" இருக்கிறோம் என்றார்.. இதற்கு அடுத்தபடியாக பின்னாடியே வந்தார் பொன்னையன்.. "உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்துவிட்டது.. பாஜக வட இந்தியாவில் கூட்டணி கட்சிகளை எவ்வாறு வீழ்த்தி ஆட்சிக்கு வந்தனர் என அனைவருக்கும் தெரியும். எச்சரிக்கையாக இருக்கிறோம் என்று பொன்னையன் சொன்னதை கேட்டு, அதிர்ந்து போனது பாஜக கூடாரம். இந்த விஷயத்தில் பாஜகவின் சாதுர்யத்தை எதிர்கொண்டார் எடப்பாடி.

தினகரன் டுவிஸ்ட்
அதேபோல, இரட்டை இலை வழக்கில், உச்சநீதிமன்றம் இரு தரப்பு வாதத்தைக் கேட்டு, ஒன்றுசேர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று வேட்பாளரை அறிவிக்க உத்தரவிட்டது. இது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை தந்தது.. எடப்பாடிக்கு பின்னடைவாகவும் இந்த உத்தரவு பார்க்கப்பட்டது. எனினும், தமிழ் மகேன் உசேன் தலைமையில் அதிமுக வேட்பாளர் பெயர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இலை சின்னம் முடங்க கூடாது என்பதற்காக வேட்பாளரை திரும்ப பெறுவதாக ஓபிஎஸ் அறிவித்தார்... இதில், யாரும் எதிர்பாராத வகையில் போட்டியிடப் போவதில்லை என்று தினகரனும் அறிவித்தார். ஆக, இலையை பெறும் விஷயத்திலும், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமே ஜெயித்தது.

ராஜதந்திரம்
அதேசமயம், டெல்லி தலைவர்களை லாவகமாக எதிர்கொண்டதும், எடப்பாடியின் ராஜதந்திரமாக பார்க்கப்படுகிறது.. 2 மாதங்களுக்கு முன்பு, தமிழகத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் வரவேற்ற அதே எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா வந்தபோது வரவேற்க செல்லவில்லை... "பிரதமர் என்ற அடிப்படையில் மோடியை வரவேற்க சென்றேன், கட்சி தலைவர்களை கட்டாயம் வரவேற்க வேண்டியதில்லை" என்று இதற்கு விளக்கத்தையும் தந்திருந்ததை பார்த்து, பாஜக மேலிடம் சற்று அதிர்ந்துதான் போனது... தனக்கான செல்வாக்கை எங்கே எப்படி நிரூபிக்க வேண்டுமோ, அதை சிறப்பாக கையாள்கிறார் எடப்பாடி என்றும் பேசப்பட்டது.

ஹாட்ரிக்
கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல வேண்டியது வரலாம் என்ற எடப்பாடியின் ஜாக்கிரதை உணர்வுதான், இப்படியெல்லாம் பாஜகவை எதிர்க்க துணிந்த காரணமாக இருக்கிறது என்றார்கள். பாஜகவின் விருப்பங்களுக்கு முழுமையாக எடப்பாடி பழனிசாமி அடி பணியாமல் எதிர்ப்புகளை அடிக்கடி காட்டினாலும், அவரால் பாஜகவை முழுமையாக எதிர்க்க முடியவில்லை என்பதே உண்மை.. இதைதான் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜகவுடனானான கூட்டணி தொடர்கிறது.. வரப்போகும் எம்பி தேர்தலிலும் இதே கூட்டணி என்றும் உறுதி செய்துள்ளார்..

கசப்புகள்
இதன்மூலம், இத்தனை மாத காலமாக, பாஜகவுடன் நிலவி வந்த கருத்து மோதல்கள், பிணக்குகள், கசப்புகள், வருத்தங்கள் எல்லாமே நொறுங்கி விழுந்து விட்டன என்றும், மேலிட தலைவர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.. இதேசமயம், ஓபிஎஸ்ஸின் அரசியல் இனி எப்படி பார்க்க போகிறது? பாஜக மீது வருத்தம் கொண்டு, கண்டன தீர்மானம் நிறைவேற்றம் அளவுக்கு ஓபிஎஸ் தரப்பு சென்றுள்ள நிலையில், ஓபிஎஸ்ஸை மேலிட பாஜக இனி எப்படி அணுக போகிறது என்பதெல்லாம் எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளது..

கிரேட் ப்ளான்
ஓபிஎஸ் தமிழக பாஜவுடன் மனக்கசப்பை வெளிப்படுத்தி உள்ள அதே சூழலில், எடப்பாடி பழனிசாமி கூட்டணியை உறுதி செய்து பாஜகவுடன் நெருங்கி உள்ளதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், தினகரன், சசிகலா ஆகியோரின் நிலைப்பாடுகளும் என்னவாக இருக்க போகிறது என்று தெரியவில்லை.. எனினும், எப்படி பார்த்தாலும், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நிலவிவந்த குழப்பங்கள், சர்ச்சைகளை கடந்து, தான் நினைத்ததை சாதித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications