மாமல்லபுரத்தில் 90 கோடியில் பிரம்மாண்டம்.. பேருந்து நிலையம் எப்போது திறப்பு.. அமைச்சர் தகவல்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக ரூ.90.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் ட்ரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தின் கீழ்தளத்தில் வாகன நிறுத்துமிடம், தரைதளத்தில் 40 புறநகர் பேருந்துகள் 8 மாநகர பேருந்துகள் நிறுத்துமிடம், பயணச்சீட்டு வழங்குமிடம், முதல் தளத்தில் எம்டிசி அலுவலகம், உணவகம், ஓய்வறை உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கிறது. பணிகள் முழுமையாக நிறைவு பெற்று டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலேயே அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் என்றால்..அது ஊட்டியோ, கொடைக்கானலோ கிடையாது.. மகாலிபுரம் தான்.. மகாபலிபுரம் தமிழ்நாட்டின் சிற்பக்கலைக்கு பெயர் போன புகழ் பெற்ற சுற்றுலா நகரம் ஆகும். பல்லவர்களின் வரலாற்று அடையாளமாக உள்ள மகாபலிபுரம் தமிழர்களின் கலைவடிவத்தை உலகிற்கே சொல்லும் அற்புதமான இடமாக இருக்கிறது.

மகாபலிபுரத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள், கோயில்கள், கடற்கரை, சிற்பங்கள் ஆகியவற்றை ரசிக்கிறார்கள். குறிப்பாக கடற்கரைக் கோயில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து, இந்தியன் சீஷெல் அருங்காட்சியகம், முதலைக் காப்பகம், குகைக் கோயில்கள், கலங்கரை விளக்கம், முட்டுக்காடு, மற்றும் கோவளம் என பல்வேறு இடங்கள் உள்ளன. இவற்றை ரசிக்க பலரும் வருகிறார்கள்,
மகாபலிபுரத்தில் தற்போது இரண்டு பேருந்து நிலையங்கள் இருக்கின்றன. மகாபலிபுரத்தில் டவுன் பஸ் பேருந்து நிலையம் கிழக்கு ராஜா தெருவில் அமைந்திருக்கிறது. இது மகாபலிபுரத்தில் இருந்து சென்னை வரை செல்லும் டவுன் பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து செல்கின்றன. அடுத்ததாக கிழக்கு கடற்கரைச் சாலையில் மெயின் பேருந்து நிலையம் இருக்கிறது. சென்னை மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து தான் செல்கின்றன. .
இந்நிலையில் மகாபலிபுரத்தில் ஒரு புதிய, பெரிய பேருந்து நிலையம் ஒன்று தமிழக அரசால் கட்டப்பட்டு வருகிறது. இது 6.9 ஏக்கர் பரப்பளவில் 48 பேருந்து நிறுத்தங்களுடன் அமைக்கப்படுகிறது. ரூ.90.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் ட்ரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காட்சிகளின் படி பார்த்தால், மாமல்லபுரத்தின் கீழ்தளத்தில் வாகன நிறுத்துமிடம், தரைதளத்தில் 40 புறநகர் பேருந்துகள் 8 மாநகர பேருந்துகள் நிறுத்துமிடம், பயணச்சீட்டு வழங்குமிடம், முதல் தளத்தில் எம்டிசி அலுவலகம், உணவகம், ஓய்வறை உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. பணிகள் முழுமையாக நிறைவு பெற்று டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். மகாபலிபுரத்தில் அமையும் புதிய பேருந்து நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications