குடும்ப அட்டைதாரர்களே.. புது ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிட்டீங்களா.. 2 சிலிண்டர் இருந்தாலும் சிக்கல்
சென்னை: தமிழ்நாட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு, புதிய ரேஷன் கார்டுகளுக்கு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன.. கடந்த மே 2021 முதல் இப்போதுவரை 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும், புதிய ரேஷன் கார்டுகள் கேட்டும், பெரும்பாலானோர் விண்ணப்பிக்க துவங்கிவிட்டனர்.. மாதம்தோறும் சராசரியாக, 40,000 பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆனால், புதிய ரேஷன் கார்டுகளை யாருக்கும் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், எப்படியும் 3 மாதங்கள் கழித்துதான் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றும் 2 மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன.
கார்டுகள்: இதற்கு காரணம், ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்து வருகிறார்களாம்.. இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் எக்கச்சக்கமாக பெருகிவிட்டதாம். இதனால், தங்களுக்கு வந்து சேரும் விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதையெல்லாம் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
விண்ணப்பம்: ஆனால், புதிய கார்டு வேண்டி, தனி சமையல் அறையுடன் வசிப்போர், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள், புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படையான விஷயம். அதனால்தான், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, தகுதியான நபருக்கு குறித்த காலத்தில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்றும், ரேஷன் கடைகளுக்கு அனைத்து தானியங்களையும் அனுப்ப வேண்டும் என்றும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்காக, உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், உங்கள் முகவரி உள்ளிட்ட விபரங்களை அதிகாரிகள் உறுதி செய்து, ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி விண்ணப்பித்தும்கூட, உரிமைத்தொகை பணிகள் நடப்பதால், இதுவரை ரேஷன் உரியவர்களுக்கு கார்டுகள் கிடைக்கவில்லை என்ற குமுறல்கள் வெடித்து வருகின்றன.
புதிய ரேஷன் கார்டு: இதுகுறித்து, தமிழக மைய தலைவர் டி.சடகோபன் சொல்லும்போது, "தகுதியான நபருக்கு கூட, புதிய ரேஷன் கார்டு தர தாமதம் செய்யப்படுகிறது. புதிய ரேஷன் கார்டு கேட்டு, பலரும் விண்ணப்பித்து வரும் நிலையில் வழங்கப்படுவதில்லை..
இதுகுறித்து, உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் கேட்டால், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக, புது கார்டு வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால், அதை, உயரதிகாரிகள் மறுக்கிறார்கள்.. புதிய கார்டு கேட்டு தினமும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
வேண்டுகோள்: ஒரு திட்டத்திற்காக, அத்தியாவசிய உணவு தேவைக்கான, ரேஷன் கார்டு வழங்குவதை நிறுத்தக் கூடாது.. கார்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்க, புது கார்டுக்கு விண்ணப்பம் செய்வதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications