பழைய ஓய்வூதியம்..அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் நல்ல விஷயம்.. எப்போது நடக்க வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதில் என்ன சிக்கல் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தாத போதிலும், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஏன் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியம் திட்டம் அரசு ஊழியர்களுக்கு முக்கியமானது தெரியுமா? இதுபற்றி பார்ப்போம்.
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவு என்றால் அது பழைய ஓய்வதியம் திட்டம் தான். அந்த திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துமா அல்லது அப்படியே விட்டுவிடுமா என்ற அரசு ஊழியர்கள் மத்தியில் ஒரு சந்தேகம் இருக்கிறது. இதனை அவர்கள் பல போராட்டங்களிலும், பல முறை கோரிக்கையாகவும் வைத்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஏனெனில் அரசு பழைய ஓய்வதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்தபோதிலும் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. செப்டம்பரில் தான் அறிக்கை வந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அரசு அதற்கு நிதியை விடுவிக்க வேண்டும். அரசு நிர்வாக ரீதியாக சில முடிவுகளை இதற்காக எடுக்கவேண்டியதிருக்கும். எனினும் இந்த திட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அரசு அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக அரசு ஊழியர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
2003ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை பொறுத்தவரை அவர்கள் வாங்கிய கடைசி சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கும் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் கணிசமான அரசு ஊழியர்கள் இப்போதும் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இந்த திட்டப்படி குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்த அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் கடைசி சம்பளத்தின் அடிப்படையில் உத்தரவாதம் செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பணியில் இருந்து விலகுபவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கினை ஒப்படைத்து அதற்கான தொகையை முன்கூட்டியே பெறுவது, குடும்ப ஓய்வூதியம் ஆகிய பலன்கள் இருந்தது.
ஆனால் அதற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டப் படி, அரசு ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத் தொகையை பங்களிப்பு அடிப்படையில் சேமித்து, ஓய்வு பெறும் போது ஒரு தொகையாகப் பெற்று வருகிறார்கள். இதில் பெரிய பலன் இல்லை. அதேபோல் மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், முழு ஓய்வூதியம் பெற 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்று நிபந்தனை உள்ளதால் அதுவும் அரசு ஊழியர்களுக்கு பெரிதாக பலன் தராது என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் இப்போது அரசு ஊழியர், ஆசிரியர்களில் 2.29 லட்சம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும், 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை சற்று உயர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால், ஆயுள் காப்பீட்டு ஓய்வூதிய நிதியில் அரசு சேமித்து வைத்துள்ள ஊழியர்களின் தொகையில் இருந்து கணிசமான தொகையை வைத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது.
சுமார் 8 ஆயிரம் பேருக்கு ஆண்டுதோறும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று அரசு ஊழியர்கள் கூறுகிறார்கள். அரசு பழைய ஓய்வூதியம் தொடர்பாக கமிட்டி அமைத்திருந்தது.இந்த கமிட்டி வரும் செப்டம்பரில் அறிக்கை தரப்போகிறது. அதன்பிறகு பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கும் என்றே அரசு ஊழியர்கள் நம்புகிறார்கள். அனோகமாக இந்தஆண்டு இறுதியில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் சில அரசு ஊழியர்கள்.












Click it and Unblock the Notifications