ஓடும் காரில் மசாஜ்.. ஏலக்காய் வியாபாரி கணவர்.. நாகர்கோவில் பங்களாவில் தொங்கும் பூட்டு! மதுமிதா எங்கே
சென்னை: நாகர்கோவில் அருகே பிரம்மாண்ட பங்களா வீடு.. இன்ஸ்டாகிராமில் கட்டுக்கட்டாக பணம், விதவிதமான தங்க நகைகள் என தொடர்ந்து ரீல்ஸ்.. குழந்தைக்கு பணக்கட்டுகளால் அபிஷேகம் செய்வது போன்ற வீடியோக்கள் என பிரபலமானவர் யூடியூபர் மதுமிதா.. ஆனால் இப்போது இவரை தேடும் வேலையில் போலீசார் இறங்கியிருக்கிறார்கள். விசாரணைக்காக போலீசார் வீட்டுக்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்ததுதான் இதற்கு காரணம்..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணத்தில் உள்ள வி.ஐ.பி. கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் மதுமிதா. 28 வயதான இவர் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இவரது கணவர் வினோத்குமார் ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறார். 2 பேருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது..

வினோத்குமார் சிவகாசியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.. மதுமிதா தனது சொந்த ஊர் கோவை என்று தெரிவித்திருந்த நிலையில், வினோத்குமார் வியாபார விஷயமாக கோவைக்கு வந்தபோது 2 பேருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்துக்குப் பிறகு 2 பேரும் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள தம்மத்துக்கோணம் வி.ஐ.பி. கார்டனில் பெரிய பங்களா வீட்டில் வசித்து வந்தனர்..
மதுமிதாவின் விஐபி கார்டன் பங்களா
மதுமிதாவுக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 5 லட்சம் பேர் ஃபாலோயர்களாக உள்ளனர். 2020-ம் ஆண்டு முதல் யூடியூபிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை அவர் அப்லோடு செய்திருக்கிறார்..
மதுமிதா வெளியிட்ட ரீல்ஸ்களில் பணமும் நகைகளும் முக்கியமாக இடம் பெற்றிருந்தன.. 500 ரூபாய் நோட்டு கட்டுகளை காட்டுவது, ஏராளமான நகைகளை அணிந்து போஸ் கொடுப்பது, பணத்தை கொட்டி அதன் மீது படுத்திருப்பது, குழந்தைக்கு பணக்கட்டுகளால் அபிஷேகம் செய்வது என அவர் வெளியிட்ட பல ரீல்ஸ்கள் கவனம் பெற்றன. இந்த ரீல்ஸ்கள்தான் பின்னர் அவரது பின்னணி குறித்து போலீசார் விசாரிக்கவும் ஒரு காரணமாக அமைந்தது..
கடந்த செப்டம்பர் 24-ம் தேதி மதுமிதா வீட்டில் 118 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 98 பவுன் நகைகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது..
போலீசாருக்கு வந்த சந்தேகம்
ஆனால் இவ்வளவு பெரிய கொள்ளை நடந்த பிறகும் மதுமிதாவின் சோஷியல் மீடியா செயல்பாடு நின்றுவிடவில்லை.. கொள்ளை சம்பவத்துக்கு பிறகும் 20-க்கும் மேற்பட்ட ரீல்ஸ்களை அவர் பதிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் பணம், நகைகள் தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டதுதான் போலீசாரின் கவனத்தை ஈர்த்தது..
இதையடுத்து மதுமிதாவின் முந்தைய பின்னணி குறித்தும் போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர்.. மதுமிதா ஏற்கனவே நெல்லை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பணியாற்றியதாக தகவல் வெளியானது. அங்கு அவர் பிசியோதெரபி சிகிச்சை செய்வதாக அறிமுகமானதாகவும் கூறப்பட்டது. இதற்கான ஆதாரங்களை போலீசார் தேடி வந்தனர்..
ஏலக்காய் வியாபாரி கணவர்
அதே நேரத்தில், மதுமிதாவின் குடும்பம் குறித்தும் போலீசாருக்கு சில கேள்விகள் எழுந்தன.. ஏலக்காய் வியாபாரம் செய்யும் வினோத்குமார், சிவகாசியை சேர்ந்தவர் என்ற நிலையில், நாகர்கோவில் வந்து தம்மத்துக்கோணத்தில் இவ்வளவு பெரிய பங்களா வீட்டில் வசித்து வந்தது எப்படி? என்ற கேள்வியும் எழுந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, வினோத்குமார் வியாபார விஷயமாக கோவைக்கு வந்தபோது மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாகி திருமணத்தில் முடிந்ததாக தகவல் கிடைத்தது..
இந்நிலையில் நெல்லையை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து என்பவர் அளித்த புகார் இந்த விவகாரத்தில் புதிய ட்விஸ்டை ஏற்படுத்தியது..
கடந்த 2022-ம் ஆண்டு நெல்லையில் உள்ள ஒரு ஸ்பா சென்டரில் மதுமிதாவை சந்தித்ததாக அந்த ஒப்பந்ததாரர் கூறியுள்ளார். அதன்பிறகு மதுமிதா அவருடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததாகவும், ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்று சொல்லி நெல்லை கே.டி.சி. நகர் பகுதிக்கு வரவழைத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்..
ஓடும் காரில் மசாஜ்
அப்போது ஒப்பந்ததாரர் காரில் சென்றபோது, மதுமிதா மசாஜ் செய்வது போல் நடந்து கொண்டு அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது..
இந்த வழக்கு பின்னர் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மதுமிதாவிடம் விசாரணை நடத்த திருநெல்வேலி போலீசார் முடிவு செய்தனர்..
இதற்காக நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் வி.ஐ.பி. கார்டனில் உள்ள மதுமிதாவின் பங்களா வீட்டுக்கு போலீசார் சென்றனர்.. ஆனால், அங்கே வீடு பூட்டப்பட்டிருந்தது. மதுமிதாவோ, அவரது குடும்பத்தினரோ அங்கு இல்லை..
திருநெல்வேலி போலீஸ்
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகாமல் மதுமிதா குடும்பத்துடன் தலைமறைவாகியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவரது செல்போனுக்கும் போலீசார் தொடர்பு கொள்ள முயன்றபோது, அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுமிதா எங்கு சென்றுள்ளார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்..
இதற்கிடையே, குழந்தையின் காலாண்டு விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றிருப்பதாக மதுமிதா ஏற்கனவே ஒரு வீடியோ வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது. பள்ளி திறந்த பிறகும் அவர் வீடு திரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் உண்மையிலேயே எங்கு சென்றிருக்கிறார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது..
மதுமிதா திரும்பி வந்த பிறகுதான், 2022-ம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் செயின் திருட்டு புகார் தொடர்பாக திருநெல்வேலி போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது..
மதுமிதா எங்கே
ஒருபக்கம் வீட்டில் நடந்த 118 பவுன் நகை கொள்ளை.. அதில் 4 பேர் கைது செய்யப்பட்டு 98 பவுன் நகைகள் மீட்பு.. மறுபக்கம் 2022-ம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் 5 பவுன் செயின் திருட்டு புகார்.. இதற்கு நடுவில் கொள்ளைக்கு பிறகும் தொடர்ந்து வெளியான 20-க்கும் மேற்பட்ட ரீல்ஸ்கள்.. இப்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில் மதுமிதா தலைமறைவு..
இவ்வளவு பணம், நகைகளுடன் அவர் வெளியிட்ட ரீல்ஸ்களின் பின்னணி என்ன? அவரது முந்தைய தொழில் வாழ்க்கை எப்படி இருந்தது? 2022-ம் ஆண்டு புகாரில் உண்மையில் என்ன நடந்தது? இப்போது மதுமிதா எங்கே இருக்கிறார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் போலீஸ் விசாரணை முடிந்த பிறகுதான் முழுமையான பதில் கிடைக்கும்..


Click it and Unblock the Notifications
