மயிலாப்பூர், கோடம்பாக்கம்.. சென்னையில் எந்த ஏரியாக்களில் கொரோனா தீயாக பரவுகிறது.. வெளியான லிஸ்ட்
சென்னை: கொரோனா நோய் பரவல் மீண்டும் தீ போல பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் அதேபோன்ற டிரெண்ட் நிலவுகிறது.
அதிலும், சென்னையில் நேற்று 496 பேருக்கு, நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில்தான் இந்த பாதிப்புகள் அதிகம் இருக்கிறது.
சென்னையிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா கிளஸ்டர்கள் என்று கூறப்படும் கொத்து, கொத்தான, வேகமான பரவல் இருப்பது உறுதியாக தெரிகிறது.

ராதாகிருஷ்ணன் ஆய்வு
இதையடுத்து, சென்னையில் பரிசோதனை முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாரிமுனையில் நேற்று பரிசோதனை முகாம்களை ஆய்வு செய்தார், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன். பின்னர் நிருபர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், பரிசோதனைகள் 50 ஆயிரம் என்ற சராசரியில் இருந்தது. அதை 75 ஆயிரமாக உயர்த்திவிட்டோம்.

தொடர்பு உள்ளவர்கள்
யாருக்காவது தொற்று கண்டறியப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சோதிப்பது, நோய்த்தொற்று பகுதிகளைத் தட்டி வைத்து அடைக்காமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளே இருப்பவர்கள் வெளியில் போவதை தடுப்பது, வெளியில் இருப்பவர்களை உள்ளே வராமல் தடுத்து நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

முகக் கவசம்
கொரோனா காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற பழக்கம் நமக்கு வர வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளோம். யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அலுவலகம் போகாதீர்கள். மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும். பரிசோதனை செய்ய தயங்காதீர்கள்.

சானிடைசர் கை கழுவுங்கள்
அடிக்கடி கைகழுவ வேண்டும், வெளியே இருந்தால், கிருமி நாசினியை கைகளில் அவ்வப்போது போட வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் ஏதோ கடமைக்கு சமூக இடைவெளியை பராமரிக்கிறார்கள். அதுதான் பிரச்சினை.

சென்னையில் எங்கு அதிகம்
சென்னையில் அதிக அளவில் கிளஸ்டர் என்ற அளவுக்கு கொரோனா பரவல் இருக்கும் பகுதிகள் உள்ளன. 12ம் தேதி பெரம்பூர் மற்றும், வானகரத்தில் கிளஸ்டர் இருந்தது. பெருங்குடி, மடிப்பாக்கம் ஏரியாக்களில் அதிக பரவல் உள்ளது. தண்டையார்பேட்டை, கொடுங்கையூரில் கடந்த ஆண்டு அதிக பாதிப்பு இருந்தது. இப்போதும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மடிப்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் கூடுதலாக தொற்றுகள் உள்ளன. காய்ச்சல் இருந்தால், கொரோனா அறிகுறி இருந்தால், பாராசிட்டமால் மாத்திரையை போட்டுவிட்டு தாமதிக்காதீர்கள். அது உடல்நிலையை ரொம்பவே பாதித்து விடும். உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

தடுப்பூசி போடுங்கள்
யார் யாருக்குத் தகுதி உள்ளதோ அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். ஒருவருக்கு நோய் உறுதியானால் உடனடியாக உடன் இருப்பவர்களை அல்லது அவர்களை தொடர்பு கொண்டவர்களை பரிசோதிக்க வேண்டும். 30 பேரை பரிசோதித்தால் 5லிருந்து 10 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வர வாய்ப்பு உண்டு. முகக்கவசத்தை கழுத்தில் அணியாமல், முகத்தில் சரியாக மூடி அணிய வேண்டும். அதை 10 நாட்கள் தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்று வேகமாக பரவாது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications