தெருநாய்கள் பிரச்சனையே கிடையாது.. போலீஸ் போட்டு கண்காணிக்கிறார்கள்.. எந்த நாட்டில் தெரியுமா?
சென்னை: இந்தியாவில் தெரு நாய்கள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. நாய்களால் ஏற்படும் காயங்கள், ரேபிஸ் தொற்று மற்றும் வாகன விபத்துகள் ஆகியவை பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகின்றன. இந்த சிக்கலுக்கு நிரந்தரமான தீர்வுகள் என்ன? பிற நாடுகள், எப்படிப் பராமரிக்கின்றன? தெருநாய்கள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க முடியுமா என்பதை இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டில் தெருநாய்க்கடி புகார்கள் அதிகரித்து இருப்பது மக்களை கவலை அடைய வைத்துள்ளது. தெருநாய்கள் துரத்துவதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றனவாகவும், அவை கடிப்பதால் ரேபிஸ் பாதிப்பும் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தெருநாய் பிரச்சனை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போவதாகப் பல்வேறு தரப்பினரும் புகார் அளித்து வருகின்றனர்.

தெருநாய்கள் பிரச்சனை
உச்ச நீதிமன்றம் வரை இந்த பிரச்சனை சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நகர வீதிகளில் தெருநாய்கள் கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் வீதிக்கு வீதி கூட்டம் கூட்டமாக அலைவது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. இதற்கான தீர்வு உரிய விதிகளின் படி விரைவில் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெருநாய்களே இல்லாத நாடு?
இந்தியாவில் மட்டும்தான் இப்படியா? இல்லையா? எல்லா நாடுகளிலும் இப்படித்தான் இருக்கும் என மனதில் எண்ணங்கள் தோன்றலாம். ஆனால், தெருநாய்களே இல்லாத ஒரு நாடும் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் தெருநாய்களே கிடையாது! இதுகுறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நெதர்லாந்தில் நாய்களை கொலை செய்வது மிக தீவிரமான குற்றமாக கருதப்படுகிறது. இதுபோன்ற குற்றங்களை கண்டுபிடிக்க தனிச்சிறப்பு பிரிவு போலீசில் இயங்குகிறது.
கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்தப்படும்
அதேபோல், தெருநாய்கள் என்றே இருக்க கூடாது என்பதற்காக விரிவான திட்டங்களையும் அந்த நாடு வகுத்துள்ளது. தெருநாய்கள் தென்பட்டால் உடனடியாக அவை பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படும், தடுப்பூசி செலுத்தப்படும், பின்னர் பராமரிப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
இந்த மனிதாபிமான அணுகுமுறை நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதோடு அவற்றின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது. இதன் விளைவாக, அங்கு தெருநாய்களே இல்லாத நிலை நிலவுகிறது.
நாய்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு
நாய்களை வாங்குவது மற்றும் தத்தெடுப்பை ஊக்குவிப்பதற்காக, நெதர்லாந்து நாய்கள் வாங்குவதற்கு அதிக வரி விதிக்கிறது. எனவே, பலரும் அடைக்கல மையங்களில் இருந்தே நாய்களை தத்தெடுக்கிறார்கள்.
இதனால் தெருநாய்களாக சுற்றித் திரிந்த நாய்களுக்கு அடைக்கலம் கிடைக்கிறது. மேலும், நாய்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியிலும் சிறப்பு பிரிவு போலீஸ் செயல்படுகிறது. ஏதேனும் துன்புறுத்தல் புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், நாய்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுகின்றன.
பிற நாடுகளில் நிலைமை எப்படி?
* சீனாவில்
ஆக்ரோஷமான மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்கள் கருணைக்கொலை செய்யப்படுகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தால், உரிய உரிமம் மற்றும் தடுப்பூசி போடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்
தெரு நாய்கள் தத்தெடுக்க தயாராக வைக்கப்பட்டு, தங்குமிட வசதியுடன் பராமரிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை தத்தெடுக்க யாரும் வராவிட்டால், அவை கருணைக்கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
* துருக்கி
மக்கள் தெருநாய்களுக்கு அதிகமாக உணவளிப்பதை பார்க்க முடிகிறது. அவைகளின் கழுத்தில், தடுப்பூசி போடப்பட்டதா, கருத்தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை தோன்றும் வகையில் டேக் கட்டப்படுகிறது.
* தென்கிழக்கு ஆசியா
தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் தெருநாய்கள் காணப்படுகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தாலும், எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications