திமுகவா? அல்லது அதிமுகவா? எது 100% கொள்கைக் கூட்டணி? கமலால் ஏற்பட்ட சரிவு?
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணி, கொள்கைக் கூட்டணியாக உருவாகி உள்ளது? அது எது? அதற்கு என்ன மதிப்பெண் தரலாம்?
விளம்பரம் வரும் முன்னே, தேர்தல் வரும் பின்னே என்று ஒரு புதிய பழமொழியை உருவாக்கி விடலாம் போல் இருக்கிறது.

காலையில் வானொலியை ஆன் செய்தால் 'ஏ மோடிக்கே கியாரண்டி' என்று பாஜக தேர்தல் விளம்பரம் பட்டையைக் கிளப்புகிறது. யூடியூப்பை திறந்தால், 'இது கொள்கை கூட்டணி. மோடி திரும்ப ஆட்சிக்கு வரவே கூடாது' என்று திமுக விளம்பரம் இன்னொரு பக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விளம்பரத்தில் மட்டும் அல்ல; சரியாகக் காய் நகர்த்தும் கூட்டணியை உறுதி செய்ததிலும் திமுகதான் முதல் இடத்தில் உள்ளது.

எதிர்க்கட்சியான அதிமுக ஆமை நடையைவிடக் குறைவான நத்தை நடை பழகிவருகிறது. அவர்கள் கூட்டணி முடிவு செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன.
திமுக கூட்டணியில் உள்ள பலரும் 'எங்கள் கூட்டணி கொள்கை' கூட்டணி என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கும் திமுகவுக்கும் பெரிய அளவில் கொள்கை முரண்பாடு ஒன்றும் இல்லை.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பாஜக ரத்து செய்தது. சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது. அதை திமுக எதிர்க்கிறது. காங்கிரசும் எதிர்க்கிறது. உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை திமுக எதிர்க்கிறது. விசிக எதிர்க்கிறது. கம்யூனிஸ்ட் எதிர்க்கிறது. காங்கிரஸ் அதற்கு எந்த எதிர்ப்பும் சொன்னதாகத் தெரியவில்லை.
திமுக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் எதிர்க்கின்றன. திமுக நீட் தேர்வை எதிர்க்கிறது. அதற்குக் காங்கிரசும் உடன்படுகிறது. ஆட்சிக்கு வந்தால் காங்கிரசை உதவியுடன் நீக்கி விடுவோம் என்று திமுக நம்பியது.

ஒரே கையெழுத்தில் நீட் நீக்கப்படும். அந்த ரகசியம் எங்களிடம் உள்ளது என்றார் உதயநிதி. ஆனால், அது இப்போதுவரை சட்டப் போராட்டம் அளவிலே யே உள்ளது. வரும் காலத்தில் அதைக் காங்கிரஸ் ஆதரிக்காது என்று சொல்ல முடியாது.
ஏனெனில் திமுக மகளிருக்கு 1000 கொடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்து வெற்றிபெற்றால், காங்கிரஸ் 2 ஆயிரம் கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்துத் தேர்தலில் வெற்றி பெறுகிறது.
வெற்றிதான் இலக்கு என்றால், காங்கிரஸ் திமுகவின் கோரிக்கையை நிறைவேற்றவே செய்யும்.

மோடி ஆட்சியை நீக்குவது என்பதி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே குரலில் ஒலிக்கின்றன. ராகுல் பேசுகிறார். திருமா பேசுகிறார். வைகோ பேசுகிறார். கம்யூனிஸ்ட்டுகள் பேசுகிறார்கள்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது மாநிலங்களவையில் வைகோ, பேசிய உரை திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமைக்குச் சரியான சான்று.
அதிமுக மக்களவைத் தேர்தல் வரை பாஜகவுடன் நல்ல உறவை வைத்திருந்தது. அதைப்போலத்தான் கடந்த சில ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளையே ஒழிக்க வேண்டும் எனப் பேசி, மோடியை உச்சத்தில் வைத்துப் புகழ்ந்துவந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

பாமக கூட மோடி ஆட்சியை பெரியதாக விமர்சிக்கவில்லை. அதைப்போலத் தான் தேமுதிக. விஜயகாந்த் மறைவின் போது ஒன்றுக்கு 2 முறை வீடு தேடி அரசு மரியாதையைச் செய்து தந்த முதல்வர் ஸ்டாலினை ஒரே வாரத்தில் விமர்சித்தார் பிரேமலதா விஜயகாந்த்.
ஆனால், மக்களுக்கு எதிராக மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எந்தத் திட்டத்தையும் அவர் விமர்சித்து ஒரு வார்த்தை பேசியதில்லை. அவரது கட்சியினர் கூட மோடியை அல்லது பாஜகவை விமர்சித்ததில்லை.

ஆனால், தேர்தல் காலம் என வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி வெளியேறுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி வெளியே வருகிறார். தேமுதிக பாஜக உறவை முறித்துக் கொண்டு அதிமுக பக்கம் வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனியாக நின்றுவிட்டு இப்போது அதிமுகவுடன் வந்து கூட்டணி அமைக்கிறார்கள். தேர்தல் கூட்டணி அப்படித்தான். அரசியலில் இது எல்லாம் சகஜம் என்றாலும் மக்களிடம் பேசக் குறைந்தபட்ச கொள்கையாவது இருக்க வேண்டாமா?
அப்படிப் பார்த்தால் திமுகவில் அதிமுகவைவிடக் கொஞ்சம் கொள்கை இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் முழுமையாக இல்லை. ஏனென்றால், கடந்த முறை காலைவரை பாஜக கூட்டணியிலிருந்து வந்த ஐஜேகே மாலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றது. அதை திமுகவும் ஏற்றுக் கொண்டது.
இந்த முறையும் அப்படித்தான். மிகக் கடுமையாகத் தேர்தல் பிரச்சார விளம்பரத்தில் டிவியை உடைத்து திமுகவுக்கு எதிராக நின்ற கமல்ஹாசன் இப்போது 'இந்தியா' கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளார்.

அவர் திமுக ஆட்சிக்கு எதிராக 17 டிசம்பர் 2020 அன்று ஃபேஸ்புக் பக்கத்தில் போட்ட பதிவை நோண்டி எடுத்து இப்போது அவரை விமர்சித்து வருகிறார்கள். கமல்ஹாசன் அந்தப் பதிவில், "சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்..ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை..அவர் எப்போதும் வால் பிடிப்பார்" என்று கூறியிருந்தார்.
கூடவே 'எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என்று பேசி இருந்தார். அவர் இப்போது திமுக கூட்டணியில் கலந்துள்ளார். இதுவரை கொள்கை கூட்டணியாக மட்டுமே வந்த திமுக அணியில் சின்ன கறை படிந்துள்ளது என்று நெட்டிசன்கள் அல்ல; திமுகவினரே சொல்கிறார்கள்.
அப்போது எது கொள்கை அணி என்றால், திமுக அணிக்கு 80% தரலாம். அதிமுக அணிக்கு எந்தக் கொள்கையை வைத்து மார்க் போடுவது என்றே தெரியவில்லை.












Click it and Unblock the Notifications