தங்க தமிழ்ச்செல்வனுக்கு என்னதான் பதவி கிடைக்கும்? தவமாய் தவமிருக்கும் ஆதரவாளர்கள்
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவின் ஓ.பி.எஸ்ஸை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த தங்க தமிழ்ச் செல்வனுக்கு திமுக தலைமை என்ன பதவி தரும்? என பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
டி.டி.வி. தினகரனின் அமமுகவில் அவருக்கு வலதுகரமாக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். தினகரனை விட்டு திமுகவில் சேர்ந்த போது தங்க தமிழ்ச்செல்வனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

ஓபிஎஸ் தவிப்பு
சட்டசபை தேர்தலில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வனை களமிறக்கியது திமுக. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பல நேரங்களில் ஓ.பி.எஸ். பின்தங்கி இருந்து தவித்துப் போய் கடைசியில்தான் வென்றார்.

தங்கத்துக்கு ராஜ்யசபா சீட்?
இதனால் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் தங்க தமிழ்ச்செல்வனும் பரபரப்பாக பேசப்பட்டார். தேர்தலில் வென்ற நிலையில் திமுகவில் தங்க தமிழ்ச் செல்வனுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என ஒரு பேச்சு அடிபட்டது பெரும் நம்பிக்கையுடனும் தங்க தமிழ்ச் செல்வன் தரப்பு காத்திருக்கிறது.

திண்டுக்கல் மேயர் கேளுங்க..
இந்த நிலையில் தங்கம் தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளோ நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. இப்போது, ராஜ்யசபா எம்.பி. கிடைக்காதபட்சத்தில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்கும் போது திண்டுக்கல் மேயர் வாய்ப்பை பெறுங்கள் என்று வலியுறுத்த தொடங்கி உள்ளனராம்.

சொந்த மாவட்டம் போதும்
ஆனால் தங்க தமிழ்ச்செல்வனோ இதை எல்லாம் நினைத்து கூட பார்க்கவில்லையாம். மாவட்டம் விட்டு மாவட்டம் போய் அரசியல் செய்தால் சொந்த மாவட்டம் கைவிட்டுப் போகும்; புதிதாக போய் இன்னொரு மாவட்ட விவகாரங்களில் மூக்கை நுழைத்து அவப்பெயர் நமக்கு வேண்டாம் என எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டாராம். பொறுத்திருந்தே பார்ப்போம் என்பதுதான் தங்க தமிழ்ச்செல்வனின் முகாம் நிலை.












Click it and Unblock the Notifications