ஆம்ஸ்ட்ராங் யார் தெரியுமா? நரிக்குறவர்கள் படிக்க கட்சி ஆபீசை தந்தவர் ரவுடியா? கதறும் திருநங்கை
சென்னை: சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்த 2 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களுக்கு போராடி நிரந்தர பணி ஆணை பெற்றுத் தந்த ஆம்ஸ்ட்ராங் ஒரு ரவுடியா என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பி இருக்கிறார் திருநங்கை தபு. யார் இவர்? இவருக்கு ஆம்ஸ்ட்ராங்கை எப்படித் தெரியும்?
கடந்த 5ஆம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் ஆம்ஸ்ட்ராங் இருந்தபோது உணவு டெலிவரி செய்ய வருவதைப் போன்ற உடையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாகப் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் இந்தக் கொலை தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான இந்த 15 பேரையும் 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கக் கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில் இக்கொலை சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டவர் என்று போலீஸார் வழக்கறிஞர் அருள் என்பவரைக் கைது செய்தனர். அவரை கொலை நடந்தது எப்படி என்பதற்கான சாட்சியம் அளிப்பதற்காக அழைத்துச் சென்றபோது தப்ப முயன்றதாகக் கூறி காவல்துறையினர் அருளை என்கவுண்டர் செய்தனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடன் கடந்த 7 ஆண்டுகளாகப் பயணித்து வந்த திருநங்கை ஸ்மைலி தபு உணர்வுப்பூர்வமாகப் பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ரவுடி என முத்திரை குத்தப்படும் ஆம்ஸ்ட்ராங் பின்னால் உள்ள மற்றொரு முகத்தை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். வார்த்தைக்கு வார்த்தை ஆம்ஸ்ட்ராங்கை அண்ணன் என்று அழைக்கிறார் தபு. இடையிடையே கண்ணீர் மல்கப் பேசி இருக்கிறார்.
ஒரு யூடியூப் தளத்தில் தபு அளித்த பேட்டியில், "கடந்த 7 வருடங்கள் முன்னால்தான் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்கை நான் சந்தித்தேன். அவருக்கு என்று ஒரு ஊடகப் பிரிவு இருந்தது. அந்தப் பிரிவு சார்ந்து ஒரு கூட்டம் நடக்கும் போது அதில் நாம் அம்பேத்கர் பற்றிப் பேசினேன். எனக்கு அம்பேத்கரைப் பள்ளிப் பருவத்திலிருந்தே தெரியும். எனவே நான் படித்த விசயங்களை வைத்து அங்கே பேசினேன். எனக்குப் பின்னால் ஆம்ஸ்ட்ராங் அண்ணா 45 நிமிடங்கள் பேசினார். அதில் என்னைப் பற்றி குறிப்பிட்டார். 'நீ இங்கே இருக்க வேண்டிய நபர் அல்ல. டெல்லி மக்களவையில் இருக்க வேண்டிய நபர்' என்று சொன்னார்.

இங்கே திருநங்கை என்றால், என்ன பார்வை உள்ளது என நான் சொல்லத் தேவையில்லை. அப்படியான ஒரு சமூகத்தில் வந்த என்னை நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் ஊக்குவித்தார். என்னை கட்சி அலுவலகம் வந்து சந்திக்கச் சொன்னார். நான் போய் பார்த்தேன். அப்போது அவரது கட்சி அலுவலகத்தில் அனிதா அறிவு மையம் என்று ஒரு வகுப்பறையைத் திறந்தார். அங்கே நிறையப் பிள்ளைகள் படித்து வந்தார்கள். இந்த விசயங்கள் பலருக்கும் தெரியாது. ஒரு கட்சி அலுவலகத்தில் அரசியல் சார்ந்த கூட்டங்கள்தான் நடக்கும் இல்லையா? பல்லாவரத்தில்தான் கட்சித் தலைமை அலுவலகம் இருக்கிறது. அந்தப் பகுதியில் நிறைய நரிக்குறவ மக்கள் வசிக்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் படிப்பதற்காகக் கட்சி அலுவலகத்தில் ஒரு வகுப்பறையை உருவாக்கிக் கொடுத்து என்னை ஆங்கிலம் கற்பிக்க வேலைக்கு அமர்த்தினார் ஆம்ஸ்ட்ராங் அண்ணா. நான் அந்தக் குழந்தைகளுக்காக எத்தனையோ வகுப்புகளை எடுத்திருக்கிறேன்.
இன்றைக்கு அதை எல்லாம் யாரும் சொல்வதில்லை. ஆம்ஸ்ட்ராங் என்றால் ரவுடி என்கிறார்கள். அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன், நான் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு பெண். நான் குருவி சேர்ப்பதைப் போல ஒரு லட்ச ரூபாய் சேர்த்து வைத்திருக்கிறேன். அதை ஒருவன் கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடுகிறான். நான் காவல்துறையில் புகார் கொடுக்கிறேன். உயர் அதிகாரிகளைப் பார்த்து முறையிடுகிறேன். யாரும் என் பணத்தை மீட்டுத் தர முன்வரவில்லை. நான் ஆம்ஸ்ட்ராங்கைப் பார்த்து கண்ணீருடன் முறையிடுகிறேன். அவர் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு போனவனிடம் பேசும் விதத்தில் பேசி பணத்தை மீட்டுத் தருகிறார். அவருக்குப் பெயர் ரவுடியா?
ஆம்ஸ்ட்ராங் கவுன்சிலராக வெற்றி பெற்றார். அரசு அதுவரை துப்புரவுப் பணியாளர்களை ஒப்பந்ததாரர்களாகத்தான் வைத்திருந்தது. இவர் முயற்சி எடுத்துத்தான் அவர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றினார். அவர் ரவுடியா? அவரை சந்திக்க வருபவர்களைச் சால்வை போட அனுமதிக்கமாட்டார். யார் பார்க்க வந்தாலும் நோட்டு,புத்தகம், பேனா வாங்கி வரச் சொல்வார். அதைப் பட்டியலின குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குத் தருவார். அப்படி ஒரு மனிதநேயம் மிக்கவர் அவர்.
அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னால் எனக்கு போன் செய்தார். 'பாப்பா உன் குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்டிவிட்டாயா?' என்று கேட்டார். இன்னும் கட்டவில்லை என்று சொன்னேன். உடனடியாக 25 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் போட்டார். 'நீ என்ன கார் ஓட்டுவ?' என்று கேட்டார். நான் காரே ஓட்டத்தெரியாது என்று சொன்னேன். 'நான் ஷோ ரூம்ல இருந்துதான் பேசுகிறேன். உடனே கார் ஓட்ட கற்றுக்கொள்' என்று சொன்னார். நான் இதுவரை கார் ஓட்ட கற்றுக் கொள்ளவில்லை. நான் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக பஸ்ல வருகிறேன் என்பதை உணர்ந்து அதைச் செய்ய முன்வந்தார். பட்டியலின மக்களுக்காக உழைக்கும் தலைவனை இந்தச் சமூகம் ரவுடி என்றுதான் சொல்லும். நாம் இதற்கு முன்னால் எத்தனையோ ரவுடிகள் இறந்துவிட்டதாகச் செய்தியில் பார்க்கிறோம். அவர்களின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் போய் மரியாதை செலுத்தியதைப் பார்த்திருக்கிறீர்களா?












Click it and Unblock the Notifications