விஜய்யின் இன்னொரு தளபதி! தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளரான முன்னாள் IRS.. யார் இந்த அருண்ராஜ்?
சென்னை: விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி அருண்ராஜ், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். தவெகவின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி, அருண் ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழ்நாட்டு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டதால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. ஆளும் திமுக தனது கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது. பாஜக - அதிமுக கூட்டணியை உறுதி செய்துள்ளன. அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

தவெக விஜய்
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தல் களத்தில் அடியெடுத்து வைக்க உள்ளதால் அவரது தவெக கட்சியில், அடுத்தடுத்து பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தவெகவில் இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு பணியை அண்மையில் ராஜினாமா செய்த அருண்ராஜ் ஐ.ஆர்.எஸ் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். அருண்ராஜ் கடந்த பல மாதங்களாகவே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஆலோசனை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஐ.ஆர்.எஸ் எனப்படும் இந்திய வருவாய்த் துறை பணியில் உயரதிகாரியாக இருந்ததால் நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். இந்நிலையில் விருப்ப ஓய்வு பெற்ற அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்துள்ளார்.
கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி
தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propagama & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
யார் இந்த அருண்ராஜ்?
அருண்ராஜ், சேலத்தை சேர்ந்த மருத்துவர் ஆவார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வருமானவரி துறை அதிகாரியாக சென்னையில் பணியை தொடங்கினார். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி நண்பர் வீட்டில் ரெய்டு நடத்தி ரூபாய் 70 கோடி பணம் கைப்பற்றிய அதிகாரிகள் குழுவில் இருந்தவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தலின்போது பீகார் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட அருண்ராஜ், அங்கு பாட்னாவில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்தார். மே மாதம் தனது அரசு பணியை ராஜினாமா செய்தார். மத்திய அரசுப் பணி அதிகாரி என்பதால் இவரது விருப்ப ஓய்வுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
சீட் கிடைக்க வாய்ப்பு
இதனையடுத்து தமிழ்நாடு திரும்பி இருக்கும் அருண்ராஜ், தீவிர அரசியலில் களமிறங்குகிறார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் அருண்ராஜ், அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அருண்ராஜ், விஜய்யின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராம். நீண்ட காலமாகவே விஜய்க்கு ஆலோசனைகளை வழங்கி வரும் அருண் ராஜ், 2026 சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications