மகனுக்கு மீண்டும் சீட் வாங்கிய ஜெயக்குமார்.. யாரிந்த ஜெயவர்த்தன்? 2014 அவர் செஞ்ச சாதனை தெரியுமா?
சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜே. ஜெயவர்த்தன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவிற்கான லோக்சபா தேர்தல் கூட்டணி இன்று இறுதி செய்யப்பட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

அதன்படி,
1 ) வட சென்னை - ஆர்.மனோ
2 ) தென் சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
3 ) காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
4 ) அரக்கோணம் - A.L.விஜயன்
5 ) கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
6 ) ஆரணி - கஜேந்திரன்
7 ) விழுப்புரம் (தனி) - J.பாக்யராஜ்
8 ) சேலம் - P.விக்னேஷ்
10 ) ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11 ) கரூர் - தங்கவேல்
12 ) சிதம்பரம் (தனி) - M.சந்திரகாசன்
13 ) நாகை - சுர்ஜித் சங்கர்
14 ) மதுரை - டாக்டர் P. சரவணன்
15 ) தேனி - V.T.நாராயணசாமி
16 ) ராமநாதபுரம் - பா. ஜெயபெருமாள்
இது போக தேமுதிகவுக்கு லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜே. ஜெயவர்த்தன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு தென்சென்னை தொகுதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஜே. ஜெயவர்த்தன் யார்?: ஜே. ஜெயவர்தன் என்று அழைக்கப்படும் ஜெயக்குமார் ஜெயவர்தன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஆவார். 2014 லோக்சபா தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக சென்னை தெற்கு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், தொழில் ரீதியாக மருத்துவராக உள்ளார்.
டாக்டர் ஜே ஜெயவர்தன் 26 வயதில் தமிழ்நாட்டின் தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் இளைய எம்.பி என்று அப்போது பிரபலம் அடைந்தார்.
இப்போது மீண்டும் இதே தொகுதியில் அவர் 3வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் இதே தொகுதியில் அவர் 3,02,649 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் தமிழச்சி தங்க பாண்டியன் 564,872 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதே தொகுதியில் மீண்டும் தமிழச்சி தங்க பாண்டியன் போட்டியிட வாய்ப்பு உள்ள நிலையில்தான் ஜெயவர்த்தன் களமிறக்கப்பட்டு உள்ளார்.
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் இல்லாத நிலையில் எடப்பாடிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு போதுமான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து எடப்பாடியின் குரலாக இருக்கும் ஜெயக்குமாருக்கு இந்த முறை மீண்டும் ஆதரவு அளிக்கும் விதமாக அவரின் மகனுக்கு எம்பி சீட் வழங்கப்பட்டு உள்ளது.
அதிமுக திணறல்: இதையடுத்து விரைவில் அதிமுக பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான கூட்டணி அமைக்க முடியாமல் அதிமுக திணறி வருகிறது.. லோக்சபா தேர்தலில் அந்த கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளது. 2026 சட்டசபை தேர்தலிலும் கூட அதிமுகவிற்கு இது எதிராக திரும்பலாம் என்று விவாதிகப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலுக்காக பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்புக்கு பின்னர் ராமதாஸ், அண்ணாமலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் என்பது போல உருவான தோற்றம் சட்டென்று உடைந்து, பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்துள்ளது பாமக. அதிமுக தீவிரமாக முயன்றும் கூட பாமக - அதிமுக கூட்டணி உருவாகாமல் பாஜக கூட்டணிக்கு பாமக சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications