யார் ரவுடி? ஆம்ஸ்ட்ராங்கா? கட்டப்பஞ்சாயத்து செய்வது யார்? கொந்தளித்த கோபி நயினார்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்னால் இருப்பது ரவுடிச மோதல்கள்தான் காரணமா என்பதைப் பற்றி இயக்குநர் கோபி நயினார் மிக விரிவாக ஒரு விவாதத்தை முன்வைத்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு தலித் இயக்கங்கள் மீது ஒரு ரவுடிச முத்திரை குத்தும் போக்கு அதிகரித்துள்ளது. தலித் கட்சிகள் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்று ஒரு பொதுவான கருத்தை முன்வைக்கின்றனர். ஆனால், இந்த ரவுடிசம் என்பது தனித்து இயங்கவில்லை, அதனுடன் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள் இருக்கின்றன என்று வாதிடுகிறார் இயக்குநர் கோபி நயினார். 'அறம்’ படத்தின் மூலம் அழுத்தமான ஒரு தாக்கத்தை உண்டாக்கியவர் இவர்.

தலித் அடையாளத்தைத் தாண்டி ஒரு பொதுவுடைமை அரசியலை முன்வைப்பவர் கோபி நயினார். அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியைக் கடந்து அதற்குள் இருக்கின்ற சமநிலையற்ற சமூகப் பிரச்சினைகள் பற்றி மிக விரிவாகப் பேசி இருக்கிறார். இது பற்றிக் கோபி நயினார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், “சென்னையில் உழைக்கும் மக்களாக அதிகம் இருப்பவர்கள் யார்? தலித்துகள்தான். அவர்கள்தான் அடிமட்டத்தில் இருக்கின்ற வேலைகளைச் செய்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் கூலிகளாக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் ரிக்ஷா ஓட்டியவர்கள் யார் என்றால் தலித்துகள்தான். இன்று துப்புரவு தொழில் செய்பவர்கள் யார் என்றால் தலித்துகள்தான். காலங்காலமாக இதே நிலை நீடிக்கிறது. தலித்துகள் இடையில்தான் கல்வி அறிவு பெற முடியாத நிலை உருவானது.
குறிப்பாகப் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்த தலித் தலைவர்கள் பலர் அதிகம் படித்தவர்களாக இருந்துள்ளனர். ரெட்டை மலை சீனிவாசன், அயோத்திதாசர் பண்டிதர், எம்.சி.ராஜா போன்ற தலித் தலைவர்கள் கோட் சூட் போடு கொண்டிருக்கிறார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பே தலித் தலைவர்கள் நாகரிகமாக உடை அணிந்துள்ளனர். அவர்கள் யாரும் அறிவு ரீதியாக, கல்வி ரீதியாக பின் தங்கி இருக்கவில்லை. இடையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் தலித் மக்களைக் கல்வி பெறவிடாமல் தடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளிகளைப் போய் பாருங்கள். அதன் நிலை எந்தளவுக்கு அவலமாக இருக்கிறது என்பது தெரியும். வெறுமனே பள்ளிக்கூடம் திறந்து விடுவதால் தலித்துகள் கல்வி அறிவு பெற்றுவிடமுடியாது. மற்ற பள்ளிகளின் தரத்துடன், சுற்றுச்சூழலுடன் ஆதிதிராவிடப் பள்ளிகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அங்கே எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர்? ஊழியர் பற்றாக்குறை எவ்வளவு உள்ளது என்று பாருங்கள். வெறுமனே படி படி என்றால் படித்துவிட முடியுமா? தலித் மாணவர்களின் குடும்பச் சூழலும் பொதுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் குடும்ப பொருளாதார சூழலும் ஒன்றாக உள்ளதா? அப்படி இருக்கும் போது எப்படி நிலை மாறும்? தலித் மாணவர் வீடு இல்லாமல் தெருவில் உட்கார்ந்து படிக்கிறான். அதைப்போலவா பிற மாணவர்களின் நிலை உள்ளது?
இத்தனை நெருக்கடிகளையும் கடந்து யாரோ 2 தலித் மாணவர்கள் படித்து நல்ல மதிப்பெண் எடுத்து முன்னேறிவிடுகிறார்கள் என்றால், அதே போலப் படி என்று மீதமுள்ள 98 மாணவர்கள் மீது ஒரு அழுத்தத்தைப் போடுவது நியாயமா? இந்தச் சூழலை மாற்றாமல் வெறுமனே தலித் முன்னேற்றம் எப்படி நடக்கும்?” என்றவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பந்தமாகப் பேசுபவர்கள் ரவுடிசம் அதிகரித்துவிட்டதாக முன்வைக்கும் வாதம் பற்றியும் பேசியுள்ளார்.
“சென்னையில் பலவிதமான தொழில்கள் நடக்கின்றன. அது தொடர்பான கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் உள்ளன. ஒரு தொழிலை இன்னொருவர் எப்படிக் கைப்பற்றுவது என்ற போட்டி நடக்கிறது. அந்தப் போட்டியில் பகை உண்டாகிறது. இந்தப் பகையை சட்டரீதியாகச் சந்திக்க யாரும் முன்வருவதில்லை. காவல்துறைக்கோ, நீதிமன்றத்திற்குச் சொல்வதில்லை. அவர்கள் அரசியல்வாதிகளை வைத்து பஞ்சாயத்து செய்து ஒரு தீர்வை அடைகிறார்கள். அவர்களுக்கு அரசியல்வாதிகள் தேவைப்படுகிறார்கள். அதற்கு ஒரு கட்டப்பஞ்சாயத்துத் தேவைப்படுகிறது.
ரவுடிசம் என்பது ஏதோ தலித் மக்களின் குணம் என்று ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். முதலாளிகள் யாரும் ரவுடிசம் செய்ததே இல்லையா? ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களை வெறுமனே காவல்துறை சுட்டுக் கொன்றதா? எந்தக் காவல் அதிகாரிக்கும் போராட்டக்காரர்களைச் சுடவேண்டும் என்ற நோக்கம் இருக்காது. அவர்களின் நோக்கம் அதுவல்ல. அந்தத் திட்டத்தினைப் போட்டுக் கொடுத்தவர்கள் யார்? ரவுடிசம் மூலம் மட்டுமே படுகொலை நடப்பதில்லை. அதற்குப் பின்னால் கூலிப்படைக்குப் பணம் கொடுப்பவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். வெறுமனே ரவுடிசத்தால் படுகொலை நடக்காது. இங்கே படுகொலைகள் பலவிதமாக உள்ளன. சாதிய படுகை, மதரீதியான படுகொலை, தொழில் ரீதியான படுகொலை, அரசியல் படுகொலை எனப் பல விதங்களில் படுகொலைகள் நடக்கின்றன.
இதில் சாதி, மதம், தொழில் போட்டி என அனைத்தும் சேர்ந்து நடத்துவதுதான் அரசியல் படுகொலை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை அப்படியானதுதான். வடசென்னை இருப்பவன் என்றால் ரவுடிகள் என்று சொல்கிறார்களே அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன், சென்னையில் உள்ள குப்பைகளை எல்லாம் எங்கே கொண்டுவந்து கொட்டுகிறார்கள்? வியாசர்பாடியில் கொண்டுவந்துதான் கொட்டுகிறார்கள். அவ்வளவு துர்நாற்றத்தைச் சமாளித்துக் கொண்டு அங்கே உள்ள மக்கள் வாழ்கிறார்களே அவர்களைப் பார்த்தால் உங்களுக்கு மனிதர்களாகத் தெரியவில்லையா? உங்கள் சமூகநீதி என்பதை அப்போது எங்கே போனது? தலித் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும்? போடக்கூடாது என்பதைப் பேசும் சமூகநீதி, அந்த மக்கள் எந்தளவுக்குச் சுகாதாரமான இடத்தில் வாழவேண்டும் என்பதைப் பற்றிப் பேசவேண்டுமா? வேண்டாமா?
தலித் கட்சிகள் ரவுடிசம் செய்கின்றன என்று சொல்கிறார்கள். தப்பித் தவறி ஒரு தலித் இளைஞன் ஊருக்குள் வந்த குற்றத்திற்காகக் கட்டிவைத்து அடித்தார்களே அது ரவுடிசமா இல்லையா? வேறு சாதிப் பெண்களைத் தலித் இளைஞன் திருமணம் செய்தான் என்பதற்காகக் கொலை செய்தார்களே அது ரவுடிசமா இல்லையா? கீழ் வெண்மணியில் குடிசையில் வைத்துக் கொளுத்தியது ரவுடிசமா இல்லையா? இது எல்லாம் கட்டப்பஞ்சாயத்து இல்லையா? பிரிட்டிஷ் அரசு தலித் மக்களுக்கு நிலம் கொடுத்தது. அதற்குப் பஞ்சமி நிலம் என்று பெயர். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு தலித் மக்கள் கையில் நிலம் இருந்தது. விடுதலைக்குப் பின்னர் அந்தப் பஞ்சமி நிலம் எங்கே போனது என்றே தெரியவில்லை. அந்த ஆவணங்களை அரசு மறைத்துவிட்டது.
நிலங்களைப் பிடுங்கிக் கொண்டு தலித்துகளை வஞ்சித்தது சமூகநீதியா? இதைச் சமூகநீதி பேசும் கட்சி கண்டிக்க வேண்டாமா? இங்கே நீதி கேட்டு நிற்கும் தலித் இளைஞர்கள் மீது ஆளும் மதவாத, நிலவுடைமை அரசியல் சக்திகள் அச்சத்தில் உள்ளன. ஆகவே, அவர்களை ரவுடிகளாக கட்டமைக்க முயற்சி செய்கின்றன. இதே நிலைதான் இஸ்லாமியர்கள் மீதும் இருக்கிறது. அவர்களையும் ஒரு பயங்கரவாத சக்தியாக இங்கே கட்டமைக்க முயற்சிகள் நடக்கின்றன” என்கிறார்.












Click it and Unblock the Notifications