திருப்போரூர் தொகுதியில் நிற்க போவது யார்? யார் யாருக்கு அதிக வாய்ப்பு?
சென்னை: திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சென்னைக்கு மிக அருகில் உள்ள கோயில் நகர தொகுதியாகும். மாமல்லபுரம் அமைந்துள்ள இந்த தொகுதி சுற்றுலா வருமானத்தையும், விவசாய வருமானத்தையும், ஐடி தொழில் வேலைவாய்ப்புகளை கொண்டுள்ளது. இங்கு கடந்த முறை திமுக கூட்டணியில் விசிக சார்பில் எஸ்எஸ் பாலாஜி போட்டியிட்டார். அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஆறுமுகம் போட்டியிட்டார். இதில் எஸ்எஸ் பாலாஜி வென்றார். இந்த முறை திமுக நேரடியாக களம் இறங்குமா.. அதிமுகவும் களம் இறங்குமா.. யார் யார் போட்டியிட அதிக வாய்ப்பு என்பதை பார்ப்போம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள சோழிங்கநல்லூர் தொகுதிக்கு பக்கத்தில் இருக்கிறது. திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் தான் நாவலூர் சிறுசேரி, கேளம்பாக்கம் உள்பட ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகள் அதிகமாக உள்ளன.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கோவளம், முட்டுக்காடு, சிறுசேரி, கேளம்பாக்கம் ஆகிய பகுதிகள் உள்ளன. சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் இருக்கிறது. கேளம்பாக்கம் தொடங்கி திருக்கழுக்குன்றம் வரை நீண்ட தூரம் உள்ள சட்டமன்ற தொகுதியாகும்.. இங்கு சுமார் 2 லட்சத்து 89 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. இங்கு 2019ல் நடந்த இடைத்தேர்தல் உள்பட அதிகபட்சமாக இங்கு திமுக ஏழு முறை வென்றுள்ளது. அதிமுக ஐந்து முறை வென்றுள்ளது. காங்கிரஸ் ஒருமுறையும், பாமக ஒரு முறையும், விசிக ஒரு முறையும் வென்றுள்ளது. இங்கு 2026 சட்டசபை தேர்தலில் யார் யார் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது என்பதை பார்ப்போம்.
கடந்த முறை திமுக கூட்டணி சார்பில் விசிக சார்பில் எஸ்எஸ் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி சார்பில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக ஆறுமுகத்தைவிட சுமார் 1600க்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். எஸ்எஸ் பாலாஜி இந்த முறையும் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். விசிக சார்பில் பொதுதொகுதியில் வெற்றி பெற்றவர்களில் எஸ்எஸ் பாலாஜியும் ஒருவர்.
இதேபோல் திமுக சார்பில் கடந்த 2019 இடைத்தேர்தலில் வென்ற இதயவர்மனும் போட்டியில் இருக்கிறார். கடந்த முறை இவரது குடும்பம் துப்பாக்கிச்சூடு சர்ச்சைகளில் சிக்கியதால் விசிகவிற்கு இந்த தொகுதி போனதாக கூறப்படுகிறது. இந்த முறை போட்டியிட சீட் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் கடந்த முறை திருக்கச்சூர் ஆறுமுகம் என்பவர் போட்டியிட்டார். இந்தமுறை அதிமுக சார்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னாள் எம்பி அம்பேத் ராஜன் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் திமுக கூட்டணியில் விசிகவே இந்த முறை திருப்போரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்றும், எஸ்எஸ் பாலாஜியே மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications