Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டம் காலியா? ‘உடும்பு பிடி’.. ஓபிஎஸ்ஸுக்கு இன்னும் 'செம’ சான்ஸ் இருக்காம்.. சொல்வது எக்ஸ்பர்ட்!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் இன்னும் வாய்ப்பு இருக்கிறது என மூத்த பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : இரட்டை இலை சின்னம் தொடர்பான இடையீட்டு வழக்கு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், ஓபிஎஸ், இடைத்தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்கி இருக்கும் சூழலில், ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? பொதுக்குழு வழக்கு தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்பது பற்றி நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் விளக்கமாகப் பேசியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன்.

டிடிவி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட நிலைகளை ஒப்பிட்டு, எதிர்கால வாய்ப்புகள் குறித்து அலசியுள்ளார் எஸ்.பி.லட்சுமணன்.

மேலும், அதிமுக விவகாரத்தில் பாஜகவின் பங்கு எந்தளவுக்கு உள்ளது என்பது பற்றியும் நமது பேட்டியில் விளக்கியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன் பேட்டி இனி.

 ஓபிஎஸ் என்ன ஆவார்

ஓபிஎஸ் என்ன ஆவார்

கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் இனி என்ன ஆவார்? எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில் : இறுதித் தீர்ப்பு வரவேண்டும். அது ஓபிஎஸ்ஸுக்கு எதிராக வந்தால் அவரது தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகலாம். ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தை அணுகும்போது பாஜக திரைமறைவில் உதவுகிறதா அல்லது கைவிட்டுவிடுகிறதா என்பதை எல்லாம் வைத்துத்தான் அதிமுகவை மையப்படுத்திய அவரது அரசியல் எதிர்காலம் இருக்கும். அதிமுக மீதான தனது உரிமையை நிரூபிக்க வேண்டும் என்றால் வெறுமனே அதற்கு இவர் மட்டும் போதாது. பாஜக ஆதரவு இருந்தால் தான் தனது நகர்வை அவரால் தொடர முடியும். அதனால் தான் அதிமுக விவகாரத்தில் இன்னும் பாஜகவின் கைகள் இருப்பதாக சொல்கிறோம்.

 தினகரனுக்கு நடந்தது

தினகரனுக்கு நடந்தது

கேள்வி : கட்சியை நீதிமன்றத்திலேயே நடத்த முடியாது; தொண்டர்களின் ஆதரவு நிச்சயம் தேவை. தொடர்ச்சியாக தனது நிலைப்பாடுகளில் பின்வாங்கிக் கொண்டே இருப்பவரை நம்பி தொண்டர்கள் எப்படி ஆதரிப்பார்கள்?

பதில் : ஒரு காலத்தில் டிடிவி தினகரனும் தேர்தல் ஆணையம், நீதிமன்றம், அரசு என மாற்றி மாற்றி பந்தாடப்பட்டார். அதை மீறி ஒரு பெருங்கூட்டம் அவரது பின்னால் திரண்டதையும், அவர் ஆர்.கே.நகரில் பெரிய வெற்றி அடைந்ததையும் நாம் பார்த்தோம். கட்சியில் ஒரு விஷயம் சட்டப்படி நடக்கவில்லை என்றால் அவர் நீதிமன்றத்தை நாடித்தான் ஆகவேண்டும். 18 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்தார் அன்றைய சபாநாயகர் தனபால். ஒரு வாக்கெடுப்பு கூட நடக்கவில்லை, அவர்கள் கட்சிக்கு எதிராக வாக்களிக்கவில்லை, ஆனாலும் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றால் நீதிமன்றத்தை நாடித்தான் செல்ல வேண்டும். இதற்கு தொண்டர்களை நோக்கி எப்படிச் செல்ல முடியும்? இந்த விவகாரத்திற்கும் தொண்டர்களுக்கும் என்ன சம்பந்தம்? நீதிமன்றத்தில் அணுக வேண்டிய விஷயத்தை நீதிமன்றத்தை அணுகித்தான் தீர்த்தாகவேண்டும்.

 ஓபிஎஸ்ஸின் வலுவான பிடி

ஓபிஎஸ்ஸின் வலுவான பிடி

கேள்வி : டிடிவி தினகரன் - ஓபிஎஸ்ஸை ஒப்பிடுகிறீர்கள்.. தினகரனுக்கு எதிராக அப்போது ஒவ்வொரு அமைப்பிலும் முடிவுகள் வந்ததை நாம் பார்த்தோம். ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு அப்படியான நிலை இல்லையே..? சாதகமான கதவுகள் திறக்கின்றனவே?

பதில் : தினகரனுக்கு அப்போது பாஜக ஆதரவு இல்லை. இப்போது ஓபிஎஸ்ஸுக்கு மத்தியில் ஆளும் பாஜகவின் ஆதரவு இருக்கிறது. மேலும், தினகரனுக்கு அதிமுக விவகாரத்தில் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று உட்கட்சி தேர்தல் நடத்தி அதன் மூலம் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ்ஸை நீக்குவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதைத்தான் இந்த இழுபறியாகும் பஞ்சாயத்து நமக்குக் காட்டுகிறது. அதிமுகவில் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் சசிகலா, தினகரன் ஆகியோரை விட ஓபிஎஸ்ஸின் பிடி வலுவாக இருப்பதற்குக் காரணம், கட்சி தேர்தல் நடைபெற்று அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் தான். கூடுதலாக, அதிகாரமிக்க பாஜகவின் ஆதரவையும் தக்கவைத்திருப்பதால் தான் வழக்கிலும், களத்திலும் அவரால் நிலைநிற்க முடிகிறது.

 ஓபிஎஸ் காணாமல் போகவில்லை

ஓபிஎஸ் காணாமல் போகவில்லை

கேள்வி : டிடிவி தினகரனுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருந்ததற்கு காரணம் பாஜக அவரை தாக்குகிறது என்ற விஷயம் இருந்தது. ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பாஜக இருப்பதால், தமிழ்நாட்டிலிருந்து அவருக்காக ஒரு கூட்டம் கிளம்புமா?

பதில் : அதை இனிமேல் தான் பார்க்க வேண்டும். இதுவரை ஓபிஎஸ் களத்திற்குச் செல்லவில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. தினகரனுக்கு இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற பொதுத் தேர்தல் என வரிசையாக பரீட்சைகள் அமைந்தன. அதில் தனியாக நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் அமைந்தது. அதை தைரியமாக அவர் எதிர்கொண்டார். ஓபிஎஸ்ஸுக்கு அந்த சூழல் வரவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களம் காண விரும்பினார் ஓபிஎஸ். ஆனால், நீதிமன்ற தீர்ப்பு அதற்கு தடையாக அமைந்தது. நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது ஓபிஎஸ்ஸின் நிலையைப் பார்க்க வேண்டும். கட்சி சட்ட ரீதியாகவும் ஓபிஎஸ் கையை விட்டுப் போய்விட்டதா? அல்லது அப்போதும் சட்டப் பிடிகளை கையில் வைத்திருக்கிறாரா என்பதைப் பொறுத்துத்தான் அவரது எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். இப்போதே ஓபிஎஸ் காணாமல் போய்விட்டார் என்று சொல்ல முடியாது.

 ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பு?

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பு?

கேள்வி : ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இணைவதற்கான வாய்ப்பு இனிமேலும் இருக்கிறதா?

பதில் : அது காலத்தின் கைகளில் தான் இருக்கிறது. பிளவுபட்ட இயக்கங்கள் இணைவது காலத்தின் கட்டாயம். யார் விட்டுக்கொடுத்து, யார் பெருந்தன்மையாக நடந்துகொண்டார், யார் பிடிவாதம் பிடித்தார் என்பதையெல்லாம் பொறுத்துத்தான் இருக்கிறது. காலம் தான் ஒரு இடத்தை நோக்கி நகர்த்திச் செல்லும். இப்போது, சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் ஓரணியில் இணைவதற்கான சூழல் கனிந்து வந்திருக்கிறது. ஆனால், இதையெல்லாம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துப் பார்த்திருப்போமா? காலம் தான் அவர்களை அந்தப் புள்ளியில் நகர்த்திக் கொண்டு வந்தது. அதேபோல ஈபிஎஸ் - ஓபிஎஸ் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 முடிவு கிடைக்கும்

முடிவு கிடைக்கும்

கேள்வி : அரசியல் கட்சிகளில் இவ்வளவு பெரிய பிரச்சனை, பிளவுகள் வந்து இவ்வளவு காலம் நீடித்ததில்லை. ஒன்று பிரிந்து சென்றிருப்பார்கள் அல்லது பிளவுபடுவதற்குள் மீண்டும் சேர்ந்திருப்பார்கள்.. இவ்வளவு சங்கடங்களோடு இந்த உறவு தொடருமா?

பதில் : வைகோ திமுகவில் இருந்து பிளவுபடும்போது பின்னணியில் காங்கிரஸோ வேறு இயக்கமோ அதிகாரத்தில் இருந்து இயக்கும் சூழல் இல்லை. இன்று பாஜக சகல அதிகாரங்களோடு பதவியில் இருக்கிறது. அவர்கள் கூச்சமே இல்லாமல் அதிமுக உள்விவகாரங்களில் தலையிட்டு இருவரையும் நேரத்திற்கு தகுந்தது போல் பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் சூழல் வேறு எப்போதும் நடந்ததில்லை. இப்போது ஊடகங்களின் வளர்ச்சியால் இந்தப் பிரச்சனை தினசரி உயிர்ப்புடன் இருக்கிறது. இதற்கும் நிச்சயம் ஒரு முடிவு வரும்.

 ஓபிஆர் - மோடி

ஓபிஆர் - மோடி

கேள்வி : சமீபத்தில் ஓபி ரவீந்திரநாத், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியபோது, ஓபிஎஸ் தரப்புக்கு அவர் ஒரு உறுதிமொழி தந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே ஓபிஎஸ் முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறதே?

பதில் : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுவிட்டு திரும்பிய பிறகு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நாங்கள் ஓபிஎஸ் தரப்பை வாபஸ் பெறச் சொன்னோம் என்று வெளிப்படையாகவே சொன்னார். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை யூகங்களாக நாம் சொல்ல முடியாது. ஊரறிந்த நிஜம் என்பது எடப்பாடி பழனிசாமி தயங்கித் தயங்கி பாஜகவுக்கு பயப்படுகிறார். ஓபிஎஸ் பாஜகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார். அதுமட்டும் தான் நிஜம், மற்றதெல்லாம் யூகங்கள் தான்.

 திமுகவுக்கு சவால்?

திமுகவுக்கு சவால்?

கேள்வி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் பரபரத்த நிலையில், தற்போது ஒரு நிலைக்கு வந்திருக்கிறது. திமுகவுக்கு எந்தளவுக்கு இந்த இடைத்தேர்தல் சவாலாக இருக்கும்?

பதில் : திமுகவுக்கு ஆட்சி அதிகாரம், பண பலம் இருக்கிறது. சிதையாத கூட்டணி பலம் இருக்கிறது. மக்கள் ஏதாவது குறைகள் சொன்னால் உடனடியாக நிறைவேற்றித் தருகிறோம் எனச் சொல்கும் ஆட்சியின் பலம் இருக்கிறது. அதற்கு நேர்மாறாக அதிமுகவும் பலவீனமடைந்திருக்கிறது, கூட்டணியும் சிதைந்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டி, அந்த வெற்றி அவ்வளவு சுலபம் அல்ல என்பது போல திமுக தொண்டர்களிடையே உற்சாகக் குறைவு நிலவுகிறது. ஆனால், இடைத்தேர்தல் என்பதால், வரும் நாட்களில் தொண்டர்கள் உற்சாகமாகக் களமிறங்குவார்கள் என்றே எதிர்பார்க்கலாம். இயல்பாகவே, ஆளுங்கட்சி என்ற அடிப்படையில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+