எம்எல்ஏ பதவிக்கு முழுக்கு? வானதி, நயினார் போடும் பிளான்.. திமுகவின் பதில் வியூகம்.. அப்போ அதிமுக?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில் பாஜக கட்சி தமிழ்நாட்டில் யாரை போட்டியிட வைக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறதாம். அதேபோல் பாஜகவிற்கு எதிராக திமுக கூட்டணியில் இருந்து யார் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.

கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 5-10 தொகுதிகளில் பாஜக இந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
பிரபலம் இல்லை: தமிழ்நாட்டில் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தயவில் பாஜக 4 இடங்களை வென்றது. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தேர்தலில் வென்றனர். இந்த நிலையில்தான் தற்போது லோக்சபா தேர்தலிலும் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய இரண்டு பேரும் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாமல் இவர்கள் களமிறங்க உள்ளனர். ஒருவேளை இவர்கள் எம்பி ஆகும் பட்சத்தில் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்வார்கள். அதன்பின் அந்த தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல் வரும்.
நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி எம்எல்ஏவாக உள்ள நிலையில் திருநெல்வேலி எம்பி தேர்தலில் இவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாம். அதேபோல் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில், அவர் கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன காரணம்? : தமிழ்நாடு பாஜகவில் பிரபலமான உறுப்பினர்கள் அதிகம் இல்லை. லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பாக அண்ணாமலை, எல் முருகன், கரு நாகராஜன், பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன.
அப்படி இருக்க இன்னும் பிரபலமான முகங்களான நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியரை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாம். ஒருவேளை இவர்கள் எம்பி ஆகும் பட்சத்தில் அமைச்சர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. அதோடு இவர்கள் எம்எல்ஏ பதவிகளுக்கு இடைத்தேர்தல்கள் வரும் வாய்ப்புகளும் உள்ளன.

திமுக பதில் பிளான்: இந்த நிலையில் திமுக சார்பாக இவர்களுக்கு எதிராக பெரிய வேட்பாளர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது கோவை, நெல்லை தொகுதியில் இவர்களை வீழ்த்தும் அளவிற்கு வலுவான பெரிய புள்ளிகளை களமிறக்க திமுக முடிவு செய்து இரண்டு பெயர்களை டிக் செய்துள்ளதாம்.
விரைவில் அவர்கள் பெயர்கள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. இது போக லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது.
மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை போட்டியிட்டதை விட லோக்சபா தேர்தலில் 25- 26 இடங்களில் போட்டியிட திமுக மேலிடம் திட்டமிட்டு உள்ளதாம்.
இதற்கான ஆய்வு பணிகளை செய்து வருகிறதாம். இந்த நிலையில்தான் 2024 லோக் சபா தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் சிலர் ஏற்கனவே டிக் அடிக்கப்பட்டு அவர்களுக்கான தேர்தல் பணிகளும் தொடங்கிவிட்டதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் யார் வேட்பாளர்கள்?: அதன்படி தென் சென்னை மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு கொடுக்கப்படலாம். இவர் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. விருதுநகர் துரை வைகோவிற்கு தரப்படலாம். ஆனால் இவர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் சார்பாக சிவகங்கை கார்த்திக் சிதம்பரத்திற்கும், நாகர்கோவில் விஜய் வசந்த்திற்கும் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ராமநாதபுரம் மாணிக்கம் தாகூருக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கே மோடி போட்டியிட உள்ளதாக பேச்சு வரும் நிலையில், இஸ்லாமிய கட்சிகளுக்கு பதிலாக இங்கே காங்கிரஸ் இறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இது போக, திருச்சி, நெல்லை, திருவள்ளூர், தென்காசி, மதுரை ஆகிய தொகுதிகளுக்கு இந்த முறை திமுக களமிறங்கும் என்று பாராளுமன்ற தேர்தல் திமுக என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கே பூத் கமிட்டி அமைக்கப்பட்டு தேர்தல் சர்வே பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications