இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!
சென்னை: அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆனால், கூட்டணி கட்சிகள் இரட்டை இலைக்கு பதில், தாமரை சின்னத்தில் போட்டியிட முன்வந்திருப்பது, அதிமுகவின் செல்வாக்கை கேள்வி எழுப்பியிருக்கிறது.
மொத்தமாக அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிருக்கிறது. இதில், கூட்டணி கட்சிகளான பாஜக 27 தொகுதிகளிலும், பாமக (அன்புமணி) 18, அமமுக 11, தமாகா 5, தமுமுக 1, ஐஜேகே 2, புபாக 1 ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தாமரை சின்னத்தில் கூட்டணிகள்
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சில, சொந்த சின்னத்தில் போட்டியிடாமல், உதயசூரியனில் போட்டியிடுகின்றன. இது வழக்கமான ஒன்றுதான் கூட்டணிக்கு தலைமை திமுகதான். என, உதயசூரியனில் சிறு கட்சிகள் போட்டியிடுகின்றன. அதேபோல என்டிஏ கூட்டணியிலும் சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணிக்கு தலைமை அதிமுகதான். இப்படி இருக்கையில் சிறிய கட்சிகள் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன.
எந்தெந்த கட்சிக்கு தாமரை சின்னம்?
என்டிஏ கூட்டணியில் மொத்தம் 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டிருக்கின்றன.
தமாகா: ஜி.கே. வாசன் தலைமையிலான இந்தக் கட்சிக்குத் தனிச் சின்னம் ஒதுக்கப்படாததால், அவர்கள் இந்தத் தேர்தலில் 5 தொகுதிகளில் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.
புதிய நீதி கட்சி: ஏ.சி. சண்முகம் தலைமையிலான இந்தக் கட்சி, நீண்டகாலமாகவே பாஜகவின் சின்னத்திலேயே போட்டியிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இந்த முறையும் அவர்கள் தாமரை சின்னத்தில் களம் காண்கின்றனர்.
தமமுக: ஜான் பாண்டியன் தலைமையிலான இந்தக் கட்சியும் பாஜகவின் சின்னத்தைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
ஐஜேகே: பாரிவேந்தர் தலைமையிலான இந்தக் கட்சியும் தாமரைச் சின்னத்திலேயே தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.
ஏன் தாமரை சின்னம்?
பாஜக தேசிய கட்சி என்பதால், அக்கட்சியின் சின்னத்தில் சிறிய கட்சிகள் போட்டியிடுவதில் சில நன்மைகள் இருக்கின்றன. தேர்தல் செலவுகள் முழுவதும் பாஜகவே ஏற்கும் என்பதால் இப்படி போட்டியிடலாம். மட்டுமல்லாது, பாருங்க.. நாங்களும் தேசிய அளவில் செல்வாக்கு இருக்கும் கட்சிதான் என்கிற பிம்பத்தை காட்டவும் சிறிய கட்சிகள் இப்படி செய்யலாம்.
பிரச்சாரத்திற்கு பிரதமர் தொடங்கி, மத்திய அமைச்சர்கள் பலர் வருவார்கள். எனவே ஈஸியா வேட்பாளரின் முகம் மக்களிடையே சென்று சேரும், இதை வைத்து ஜெயித்துவிடலாம் என்று நினைத்து இப்படி களமிறங்கலாம்.
பாஜகவுக்கு ப்ளஸ் பாயிண்ட்
இருப்பினும் சொந்த சின்னத்தை விட்டுக்கொடுத்து, தேர்தலை சந்திப்பது என்பது, கட்சியின் வளர்ச்சிக்கு துளியும் உதவாது. அதேபோல, இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பாஜக ஒரு தேசியக் கட்சி என்பதால், அதன் சின்னத்தில் மற்ற கட்சிகள் போட்டியிடும்போது, அந்தத் தொகுதிகளில் கிடைக்கும் வாக்குகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கணக்கில் பாஜகவின் வாக்குகளாகவே பதியப்படும். இது சட்டசபையில் பாஜகவின் பலத்தைக் கூட்டிக்காட்ட உதவும் ஒரு தேர்தல் வியூகமாகும்.
செல்வாக்கு சரிந்த இரட்டை இலை
சிறிய கட்சிகள் எல்லாம் தாமரை சின்னத்தில் போட்டியிட முன்வந்திருக்கிறது எனில், அதிமுகவின் செல்வாக்கு கேள்விக்குறியாகியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மறுபுறம் என்டிஏ கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் அன்புமணி தரப்பு பாமக ஆகிய கட்சிகள் தங்கள் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications