அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை மதிக்காத விளைவு.. பாஜக சறுக்கிய பின்னணி!
சென்னை: லோக்சபா தேர்தலில் 350 முதல் 400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெல்லும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது பாஜக பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் பாஜகவின் சறுக்கலுக்கு அதிமுக, சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை அலட்சியம் செய்தது தான் முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 19 முதல் மே 1ம் தேதி வரை 7 கட்டங்களாக 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

லோக்சபா தேர்தலை பொறுத்தமட்டில் ஒரு கட்சி மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஒருவேளை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பிற கட்சியுடன் கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி நடத்தப்படும்.
கடந்த 2014, 2019 தேர்தல்களில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கூட பெரும்பான்மையை விட பாஜக அதிக இடங்களில் வென்றது. 2014ல் 282 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. அதேவேளையில் பாஜக கூட்டணி 336 தொகுதிகளை கைப்பற்றியது. அதேபோல் 2019 தேர்தலில் பாஜக 303 இடங்களிலும், கூட்டணியோடு சேர்த்து 353 தொகுதிகளிலும் வென்றது. இந்நிலையில் தான் இந்த லோக்சபா தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், கூட்டணி கட்சியுடன் சேர்த்து 400க்கும் அதிகமான இடங்களிலும் வெல்ல இலக்கு நிர்ணயித்தது.
இந்நிலையில் தான் கடந்த 1ம் தேதி வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பலவும் பாஜக கூட்டணி 350 முதல் 400 இடங்களில் வெல்லும் என தெரிவித்தது. காங்கிரஸ் கூட்டணி 150 முதல் 160 இடங்களை மட்டுமே வெல்லும் என அந்த கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் இன்றைய ஓட்டு எண்ணிக்கையில் பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. மதியம் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 297 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 227 தொகுதிகளிலும், மற்றவர்கள் 19 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி 297 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது சாதகமாக பார்க்கப்பட்டாலும் கூட பாஜக ஒரு வெற்றி உள்பட 235 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. தனிப்பெரும்கட்சியாக பாஜக உருவாகும்போது அந்த கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்கலாம். இருப்பினும் கடந்த 2014, 2019 ஆண்டுகளில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜகவே வைத்திருந்த நிலையில் அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கூட்டணி கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் பாஜகவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 230 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால் பாஜக கூட்டணி கட்சியினர் அவர்களுடன் சேர்ந்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் கூட நிகழலாம். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் லோக்சபா தேர்தலில் பாஜக சறுக்கலுக்கு கூட்டணியை அலட்சியம் செய்தது தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2019ல் பாஜக, உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜக 23,சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் 4 இடத்திலும் வென்றது.
ஆனால் இந்த முறை உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உடைந்துள்ளது. இதற்கு பாஜக தான் முக்கிய காரணம். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் 2 ஆக உடைந்துள்ளது. சரத்பவார் ஒரு அணியாகவும், சரத் பவார் தனி அணியாகவும் உள்ளார். சரத் பவார் பாஜக கூட்டணியில் உள்ளார். இந்நிலையில் தான் பாஜக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தார்.
அதேவேளையில் காங்கிரஸ், உடைந்த சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது காங்கிரசுக்கு பிளஸ் பாயிண்டாகவும், பாஜகவுக்கு மைனஸாகவும் அமைந்துள்ளது. இதனால் 12 மணி நிலவரப்படி பாஜக 13 தொகுதிகளில், சிவசனோ (ஏக்நாத் ஷிண்டே) 5 தொகுதி, தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) ஒரு இடம் என மொத்தம் 19 இடங்களில் மட்டுமே பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மாறாக காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், சிவசேனா (.உத்தவ் அணி) 10 இடங்கள், சரத்பவாரின் அணி 8 இடங்கள் என மொத்தம் 28 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
அதேபோல் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு பெரிய அடி விழுந்துள்ளது. மொத்தம் 80 தொகுதிகள் உள்ள நிலையில் கடந்த முறை பாஜக 62 இடங்களில் வென்றது. சமாஜ்வாதி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 10 இடங்களிலும், பாஜக கூட்டணி கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றிருந்தது. ஆனால் இந்த முறை பாஜக வெறும் 37 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணியின் ஆர்எல்டி 2 இடங்களிலும், ஏஎஸ்பிகேஆர் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது. மாறாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. சமாஜ்வாதி 33 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணியை பாஜக அலட்சியம் செய்த நிலையில் அங்கு பெரும் பின்னடைவை பாஜக சந்தித்துள்ளது.
அதேபோல் தமிழகத்தில் பாஜகவை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றி இருந்தது. அதன்பிறகு கூட்டணியுடன் சேர பாஜக தலைவர்கள் முயன்றும் அது நடக்கவில்லை. இந்த கூட்டணி முறிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அதிமுக குறித்த விமர்சனம் தான் காரணம். இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டிலும் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்தங்கி உள்ளது. பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா மட்டும் தருமபுரியில் முன்னிலையில் உள்ளார். ஒருவேளை தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி இருந்தால் நிச்சயம் திமுகவின் வெற்றியை இந்த கூட்டணி தடுத்து வாகை சூடியிருக்கலாம்.
இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலில் பாஜகவின் இந்த சரிவுக்கு கூட்டணி கட்சிகளை அலட்சியம் செய்ததும், காங்கிரஸ் கட்சியின் இந்த எழுச்சிக்கு பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளை அரவணைத்து சென்றதும் தான் காரணம். குறிப்பாக உத்தர பிரதேசத்தில் தொகுதி பங்கீட்டில் சமாஜ்வாதியுடன் பிரச்சனை வந்தாலும் கூட காங்கிரஸ் தனது தொகுதிகளை 17 ஆக சுருக்கி கொண்டு சமாஜ்வாதியுடன் கைகோர்த்துள்ளது. காங்கிரஸின் இந்த பெருந்தன்மை பாஜகவுக்கு உத்தர பிரதேசத்தில் பெரிய செக்கை வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications