ஒண்ணுமே இல்லையாம்.. கைக்கு வந்த "உளவு ரிப்போர்ட்".. திமுக - அதிமுக ஒரே முடிவாம்.. அப்போ பாமக கதி?
சென்னை: 2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம்.
2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. இதற்காக இப்போதே திமுக தயாராகி வருகிறது. சில தொகுதிகளுக்கு ஏற்கனவே திமுக ரகசியமாக வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டது. அங்கே களப்பணிகளையும் செய்ய தொடங்கிவிட்டது.

உதாரணமாக தென் சென்னை மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு கொடுக்கப்படலாம். இவர் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. விருதுநகர் துரை வைகோவிற்கு தரப்படலாம். ஆனால் இவர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் சார்பாக சிவகங்கை கார்த்திக் சிதம்பரத்திற்கும், நாகர்கோவில் விஜய் வசந்த்திற்கும் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ராமநாதபுரம் மாணிக்கம் தாகூருக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கே மோடி போட்டியிட உள்ளதாக பேச்சு வரும் நிலையில், இஸ்லாமிய கட்சிகளுக்கு பதிலாக இங்கே காங்கிரஸ் இறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இது போக, திருச்சி, நெல்லை, திருவள்ளூர், தென்காசி, மதுரை ஆகிய தொகுதிகளுக்கு இந்த முறை திமுக களமிறங்கும் என்று பாராளுமன்ற தேர்தல் திமுக என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கே பூத் கமிட்டி அமைக்கப்பட்டு தேர்தல் சர்வே பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
முக்கிய முடிவு: இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம். அதன்படி பாமகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டை திமுக எடுத்துள்ளதாம்.
இதற்கு காரணமாக 3 விஷயங்கள் சொல்லப்படுகிறது. முதல் விஷயம் விசிக உடன் கூட்டணி உடையும், பாமக வந்தால் கண்டிப்பாக விசிக வெளியேறும், இதனால் தலித் வாக்குகள் கிடைக்காத நிலை ஏற்படும். இரண்டாவதாக தற்போது உள்ள வெற்றி கூட்டணியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும், புதிய கூட்டணி இணக்கம் அடைய நாள் தேவைப்படும். மூன்றாவதாக உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று இதற்கு காரணம் என்கிறார்கள்.
கோட்டை வட்டாரத்திற்கு கிடைத்து உள்ள அந்த உளவு ரிப்போர்ட்டில்.. பாமகவிற்கு சுத்தமாக வாக்கு வங்கி இல்லை. நெய்வேலி விவகாரத்திற்கு பின்பு கூட அவர்களின் வாக்கு வங்கி உயரும் அறிகுறி இல்லை. அவர்களுக்கு இடம் கொடுப்பது தேவையில்லாத செலவுதான். அவர்களுக்கு வாக்கு வங்கி 5 சதவிகிதம் கூட அடுத்த முறை இருக்காது. முக்கியமாக வட மாவட்டங்களில் ஆதரவு வெகுவாக குறைந்து வருகிறது, என்று ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டு உள்ளதாம்.
இதனால் பாமக உடன் கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம் திமுக. இன்னொரு பக்கம் அதிமுகவின் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளதாம்.
அதிமுக முடிவு: பாமக கூட்டணியே வேண்டாம் என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அவருக்கு நெருக்கமான அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார் என்று வெளிப்படையாக திமுகவிற்கு ஆதரவாக கூறினார். இதனால் திமுகவோடு பாமக கூட்டணி வைக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் சொன்ன அன்புமணி, திமுகவோடு கூட்டணி இல்லை. அதிமுகவுடனும் கூட்டணி இல்லை. நாங்கள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம், என்று கூறினார்.
பாமக முற்றுப்புள்ளி: அதன்பின் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட.. நாங்கள் அதிமுகவின் கூட்டணியில் இல்லை. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று கூறினார்.
அதிமுகவுடன் இணையும் எண்ணத்தில் பாமக இல்லை. உடைந்த அதிமுகவில் இணைந்தால் பயன் இல்லை என்று நினைக்கிறார். எடப்பாடியும் இன்னும் தான்தான் ஒட்டுமொத்த அதிமுக என்பதை நிரூபிக்கவில்லை. தொண்டர்கள் எல்லோரும் தன் பக்கம் இருக்கிறார்கள். தேர்தலில் நின்றால் வெற்றிபெறுவேன் என்பதை எடப்பாடி நிரூபிக்கவில்லை. இதனால் பாமக இவர்களுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்வி உள்ளது.
எடப்பாடி கோபம்: இன்னொரு பக்கம் பாமக மீது எடப்பாடியும் கோபத்தில் இருக்கிறாராம்.. அவர்கள் சொல்லித்தான் இடஒதுக்கீடு கொடுத்தோம். அது நமக்கே எதிராக போய்விட்டது. இப்போதுவரை தென் தமிழ்நாட்டில் நாம் கால் வைக்கவே முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது.அவர்கள் இப்போது நம்முடன் கூட்டணி இல்லை, பாஜகவுடன்தான் கூட்டணி என்கிறாரக்ள்.
அவர்கள் என்ன சொல்வது.. நாம் சொல்வோம்.. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் இல்லை என்று எடப்பாடி காட்டமாக சொன்னதாக கூறப்படுகிறது. அதோடு பாமகவில் தற்போது அன்புமணி- ராமதாஸ் இடையே கருத்து மோதல் இருக்கிறதாம். இதனால் உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் பாமகவுடன் கூட்டணி வைப்பதெல்லாம் உதவாது என்று எடப்பாடி நினைக்கிறாராம்.












Click it and Unblock the Notifications