புழல் சிறையை முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டது ஏன்? தவாக வேல்முருகனின் எதிர்பார்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டது ஏன்? நீண்டகால சிறைவாசிகளுக்கு விடுதலை கிடைக்குமா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், புழல் சிறையில் மேற்கொண்ட ஆய்வு, சிறையின் நிர்வாகம், பாதுகாப்பு, உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டதோடு நின்று விடக் கூடாது. அந்தச் சிறைக்குள் நீண்டகாலமாக வாடும் சிறைவாசிகளின் நிலை, அவர்களின் விடுதலை மற்றும் மறுவாழ்வு குறித்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் இந்த ஆய்வு வழிவகுக்க வேண்டும்.

velmurugan joseph vijay

ஆண்டுகளைக் கடந்து சிறைக்குள் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் எதிர்காலத்திற்கான முடிவாகவும் இந்த ஆய்வு அமைய வேண்டும்.

சிறைவாசிகளும் இந்தச் சமூகத்தின் மனிதர்கள்தான். குற்றச்சாட்டோ, தண்டனையோ ஒருவரின் மனித உரிமையையும், மீண்டும் சமூகத்தில் வாழ்வதற்கான வாய்ப்பையும் நிரந்தரமாகப் பறித்து விடக் கூடாது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை மற்றும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகளை, எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுதலை செய்வதற்கு தேவையான சட்டரீதியிலான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று, பல ஆண்டுகளாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி வருகின்றது.

விசாரணை முடிவடையாமலேயே பல ஆண்டுகள் சிறையில் கழிப்பது, சட்டத்தின் பார்வையில் விசாரணைக் காவலாக இருந்தாலும், அந்த மனிதரின் வாழ்க்கையில் அது மறைமுகத் தண்டனையாகவே மாறுகிறது.

எனவே, இத்தகைய வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். அதேபோல், நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களின் வழக்குகள் மற்றும் விடுதலைக்கான தகுதிகளைப் பாரபட்சமின்றி மறுபரிசீலனை செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சுயாதீன மறுபரிசீலனை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். ஆதாரங்கள் வலுவற்ற நிலையில் உள்ளவர்கள், நீண்டகால விசாரணைக் காவலில் இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், பல்வேறு வழக்குகளின் கீழ் நீண்டகாலமாக சிறையில் வாடும் ஈழத் தமிழர்களின் நிலையும் மனிதநேயக் கண்ணோட்டத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் அவர்களின் வாழ்க்கையை மேலும் சிறைக்குள் முடக்காமல், நல்லெண்ணத்தின் அடிப்படையில் உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்கள் மீதான வழக்குகளை இரத்து செய்து, அவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக, வயது மூப்பை அடைந்து, உடல் வலிமையை இழந்து, தங்களுடைய அன்றாட தேவைகளை கூட தாங்களே நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கும் சிறைவாசிகளின் நிலை மனிதநேயக் கண்ணோட்டத்தில் உடனடியாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

ஒரு மனிதன் பத்து, பதினைந்து ஆண்டுகளை சிறையில் கழிப்பது என்பது நாட்காட்டியில் கடந்து போகும் காலம் மட்டுமல்ல. அந்தக் காலத்துடன் அவரது இளமை, குடும்ப உறவுகள், குழந்தைகளின் வளர்ச்சி, பெற்றோரின் முதுமை என ஒரு வாழ்க்கையின் பெரும்பகுதியே அவரை விட்டு நகர்ந்துவிடுகிறது.

எனவே, தண்டனையின் நோக்கம் நிறைவேறிய பின்னரும் சிறைவாசத்தை நீட்டிப்பது சரியானதல்ல. சட்டத்தின் வரம்புக்குள் மனிதநேயத்துடன் மீண்டும் சமூகத்தில் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதுதான் நாகரிகமான அணுகுமுறை.

விடுதலை பெறுபவர்கள் சமூகத்தில் கண்ணியத்துடன் மீண்டும் நிலை பெறுவதற்கான வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, குடும்பத்துடன் மீளிணைதல், ஆலோசனை மற்றும் முழுமையான மறுவாழ்வுத் திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

முதலமைச்சர் விஜய் புழல் சிறையில் நேரில் பார்த்த நிலைமைகள், அரசு கோப்புகளில் முடங்கிக் கிடக்கும் எண்ணிக்கைகளாக மட்டும் மாறக்கூடாது. அவை மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசின் முடிவுகளாக மாற வேண்டும்.

எனவே, புழல் சிறை ஆய்வை ஒரு சம்பிரதாய நிகழ்வாகக் கடந்து செல்லாமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் சிறைகளில் வாடும் இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகள், ஈழத் தமிழ்ச் சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட கால சிறைவாசிகளின் விடுதலைக்கான சட்டரீதியான நடவடிக்கைகளின் தொடக்கமாக முதலமைச்சர் மாற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+