தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஏன் ஆளும் கட்சியாக வரக்கூடாது! சட்டென பேசிய செல்வபெருந்தகை! திரும்பும் திமுக
சென்னை: 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடர்வதை காலமும், கட்சி தலைமையும் தான் முடிவு செய்யும் என்றும், ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை, கோட்பாடு இருக்கும். திமுகவுக்கு திராவிட மாடல் எங்களுக்கு காமாஜர் ஆட்சி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி அச்சத்தில், உளறி வருகின்றார். ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ளது. ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்பார்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 57 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு, தொகுதிக்காக ஒவ்வொரு கட்சியிடமும் கையேந்தும் நிலை உள்ளது.
ஆன்மா மகிழ்ச்சியடைய: நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்கள் தங்களுடைய உயிரை இழந்து கட்சியை வளர்க்க பாடுபட்டார்கள். அவர்களுடைய ஆன்மா மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றால் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறான நிலை இல்லை.
138 ஆண்டுகளாக: தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க கட்சியினர் அனைவரும் உறுதியேற்க வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். 138 ஆண்டுகளை கடந்து ஒரு கட்சி இந்தியாவில் இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி தான். எந்த காலத்திலும் கொள்கை, கோட்பாடு மற்றும் சித்தாந்தங்களை மாற்றி கொண்டது இல்லை.
திமுகவுடன் கூட்டணி தொடருமா?: காங்கிரஸ் கட்சி எல்லா மக்களுக்குமான கட்சி. ஆனால் கோட்பாடுகள், கொள்கைகள், சித்தாந்தங்களை மாற்றி வருபவர் பிரதமர் மோடி. அவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது எதிராக நான் எப்போது பேசினேன் என கூறி வருகிறார். 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடர்வதை காலமும் கட்சி தலைமையும் தான் முடிவு செய்யும்.
காமராஜர் ஆட்சி: ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை, கோட்பாடு இருக்கும். திமுகவுக்கு திராவிட மாடல் எங்களுக்கு காமாஜர் ஆட்சி. கமராஜர் ஆட்சி கொண்டு வருவோம் என்பதால் தோழமை கட்சிகளுக்கு சங்கடம் ஏற்படாது. ராகுல் காந்தி 24 மணி நேரமும் உழைக்கிறார்.
சில நிர்வாகிகள் பொறுப்பு வாங்கி கொண்டு, 20 சதவீதம் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். அவர்களை கட்சிக்காக தியாகம் செய்தவர்களின் ஆன்மா மன்னிக்குமா ? என சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். கட்சிக்காக உயிரிழந்தவர்களின் தியாகத்தை எண்ணி பார்ப்பவர்கள் முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.












Click it and Unblock the Notifications