ஒன்னும் புரியலையே.. ஸ்டாலின் மட்டும் தனியாக அனுப்பிய கடிதம்.. கூட்டு சேர்ந்த 9 கட்சி.. குழப்புதே!
சமீபத்தில் ஸ்டாலினை சந்தித்த தேஜஸ்வி யாதவிடமோ, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடமோ இதில் கையெழுத்து வாங்கப்படவில்லை.
சென்னை: டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை விடுதலை செய்ய கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் மட்டும் தனியாக கடிதம் எழுதியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா மதுபான கொள்கையை வகுப்பதில் ஊழல் செய்ததால் புகார் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரின் அடைப்படையில் அவர் கைதும் செய்யப்பட்டு உள்ளார்.
இவர் கடந்த 26-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு இவர் கைது செய்யப்பட்டார்.

விடுதலை
நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ள இவரை விடுதலை செய்ய வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், வேறுபட்ட கொள்கைகளும் பல்வேறு அரசியல் கட்சிகளும்தான் இந்திய ஜனநாயகத்தின் இதயத்துடிப்பு என்பதைத் தாங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அதேபோல, சட்டத்தின் ஆட்சியும் தனிமனித சுதந்திரமும் நமது குற்றவியல் நீதிமுறையின் அடித்தளமாகும். அப்படியிருக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி துணை முதலமைச்சராக இருந்த திரு. மணீஷ் சிசோதியா அவர்களை இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்து, அரசியல் சட்டம் உத்தரவாதம் அளிக்கும் தனிநபர் சுதந்திரத்தை மீறி அவருக்கு வலியையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பது வேதனையும் ஏமாற்றமும் அளிக்கிறது.

ஏமாற்றம்
குற்றவியல் நீதிமுறையின் அனைத்து விதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதுடன், வழக்கமான சட்ட நடைமுறைகளும் ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்களின் தனிப்பட மனநிறைவுக்காக மீறப்பட்டிருக்கின்றன. எங்கெல்லாம் ஒன்றிய ஆளுங்கட்சிக்குத் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வரும் நிலையைக் கடந்த ஒன்பது ஆண்டுகளில் காண இயலும். ஈவிரக்கமின்றி மீண்டும் மீண்டும் இந்த விசாரணை அமைப்புகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் ஆயுதமாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் மீது மட்டுமே ஏவப்பட்டு வருகின்றன.
உண்மையில்லாத கலப்படக் குற்றச்சாட்டுகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான கருவிகள் ஆகிவிட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சோதனைகள் நடத்துவது, கட்சித் தாவல் தடைச்சட்டத்தை அப்பட்டமாக மீறித் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பது, எதிர்க்கட்சித் தலைவர்களையும், பா.ஜ.க.வுக்குத் தொந்தரவாக இருக்கும் தலைவர்களையும் கைது செய்யப் புலனாய்வு அமைப்புகளை ஆணவத்துடன் ஏவி விடுவது போன்ற அராஜகங்கள் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக மட்டுமல்லாமல், நெருக்கடிநிலைக் காலத்தை நினைவூட்டுபவையாகவும் அமைந்துள்ளன.

புலனாய்வு
புலனாய்வு அமைப்புகளையும் ஆளுநர் உள்ளிட்ட அரசியல் சட்டப் பதவிகளையும் தவறாகப் பயன்படுத்துவது இந்தியாவின் துடிப்பான மக்களாட்சியை வலுப்படுத்த ஒருபோதும் உதவாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். உரிய சட்ட நடைமுறைகளை மீறி திரு. மணீஷ் சிசோதியா அவர்களைக் கைது செய்த நாளானது ஒன்றிய பா.ஜ.க அரசின் ஆட்சிக்காலத்தின் கருப்பு நாளாகவே நினைவில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, கடந்த ஒன்பது ஆண்டு ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்புகள் மற்றும் குறிப்பாக ஆளுநர் முதலிய அரசியல் சட்டப் பதவிகளுக்கென்று எஞ்சியிருக்கும் மாண்பைக் காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சட்ட நடைமுறைகளையும், 70 ஆண்டு பழமையான நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் கொச்சைப்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோதியாவை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன், குறிப்பிட்டு இருந்தார்.

கடிதம்
இந்த கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் மட்டும் தனியாக எழுதியதுதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் 9 மாநில அரசியல் தலைவர்கள் இதே கோரிக்கையை வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்கள். அதாவது மனிஷ் சிசோடியாவை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருந்தனர், சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் மன், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா, உத்தவ் தாக்கரே, சரத் பவார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் எழுதி இருந்தனர். இதில் ஸ்டாலினின் பெயர் இடம்பெறவில்லை. அவரிடம் இந்த கடிதத்தில் கையெழுத்து பெறப்படவில்லை. காங்கிரஸ், இடதுசாரிகளிடமும் இந்த கையெழுத்து பெறப்படவில்லை.

குழப்பம்
மேற்கண்ட 9 தலைவர்களின் ஒருமித்த கொள்கை கொண்டவர்தான் ஸ்டாலின். ஆனால் அவரிடம் இந்த கடிதத்தில் கையெழுத்து பெறப்படவில்லை. மாறாக அவர் தனியாக கடிதம் அனுப்பி உள்ளார். இதுதான் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஸ்டாலினை சந்தித்த தேஜஸ்வி யாதவிடமோ, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடமோ இதில் கையெழுத்து வாங்கப்படவில்லை. சமீபத்தில் சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் அவர் தன்னுடைய தேசிய அளவிலான திட்டம் குறித்து பேசினார். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக வெற்றிபெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம். இந்த ஒற்றுமை தேசிய அளவில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலே வெற்றி நிச்சயம். அதுதான் இப்போது முக்கியம். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைக்க கூடாது. அப்படியே அமைத்தாலும் அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கூட்டணி
இப்படி எல்லோரும் சேர வேண்டும் என்று ஸ்டாலின் சொன்ன நிலையில், ஸ்டாலின் இல்லாமல் 9 கட்சிகள் கடிதம் அனுப்பி உள்ளன. இந்த கடிதம் பின்வரும் கேள்விகளை எழுப்பி உள்ளது.
காங்கிரசை ஆதரித்து பேசியதால் இப்படி ஸ்டாலினிடம் கையெழுத்து வாங்கவில்லையா?
ஸ்டாலின் ஒருமித்த கொள்கை கொண்டவர், எந்த காரணமும் இல்லாமல். சரியான திட்டமிடல் இல்லாமல் வெறுமனே இருக்கிற தலைவர்களிடம் மட்டும் கையெழுத்து வாங்கி அனுப்பி இருக்கிறார்களா?
காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று மம்தா கூறினார். இதனால் காங்கிரசுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டாலினையும் மற்ற தலைவர்கள் அண்டாமல் இருக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருந்தாலும் சமீபத்தில்தான் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பல தலைவர்கள் கலந்து கொண்டதால் இது வெறுமனே தவறுதலாக நடந்த சம்பவமாக இருக்கலாம் சரியான திட்டமிடல் இல்லாமல் வெறுமனே இருக்கிற தலைவர்களிடம் மட்டும் கையெழுத்து வாங்கி அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications