அதிமுகவிற்கு "நோ" சொன்ன விஜய்.. அடுத்தடுத்து 5 விக்கெட் காலி! விஜய் எடுத்த முடிவால் யாருக்கு சாதகம்?
சென்னை: அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்ற செய்தி உண்மைக்கு முற்றிலும் புறம்பானது முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது என்று தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது .
அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.
எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது.
கூட்டணி யாருடன்: விஜயின் இந்த முடிவால்.. தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே அவரின் மாநாட்டு பேச்சு காரணமாக.. கூட்டணியில் உருவாகும் முன்பே.. உடையும் சூழல் ஏற்பட்டு உள்ளது. 4 கட்சிகள் ஏற்கனவே விஜய்க்கு எதிராக களமாட தொடங்கி உள்ளன.
விசிக எதிர்ப்பு: அதன்படி விஜயுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விசிக விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றது. தங்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகளுக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் கூறி இருந்தார்.
நம்மை நம்பி வந்தவர்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. எனவே ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வழங்கப்படும். எங்களிடம் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும். நாங்கள் தனியாக மெஜாரிட்டி பெறுவோம். தனியாக மெஜாரிட்டி பெற்றாலும்.. எங்களுடன் கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும், என்று விஜய் அறிவித்து இருந்தார். இந்த கருத்தை விஜய் சொன்ன போது.. கண்டிப்பாக விசிக திமுகவிற்கு எதிராக கருத்து சொல்லும். திமுக கூட்டணி உடையும். பதவியில் பங்கு என்று சொன்னால் விசிக போன்ற கட்சிகள்.. திமுக கூட்டணியை விட்டு வெளியே வரும் என்று எல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விஜய் எதிர்பார்க்காத சம்பவங்கள் இதற்கு பின் நடந்துள்ளது. விசிக எம்பி திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ஃபாசிசம் குறித்து அவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஃபாசிசம் என்பது பற்றிய அவரது புரிதல் விளங்கவில்லை. "அவங்க ஃபாசிசம்'னா நீங்க பாயாசமா ?" என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். ஃபாசிச எதிர்ப்பாளர்களைக் கேலி் செய்கிறார். அவர் ஃபாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் ஃபாசிஸ்டுகள் தான் என்கிறாரா? அவர் யாரை நையாண்டி செய்கிறார்? திமுக'வையா? காங்கிரசையா? இடது சாரி கட்சிகளையா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் இயக்கங்களையா? பாஜக - சங்பரிவார்களின் ஃபாசிசத்தை எதிர்க்கும் இவர்கள் அனைவருமே ஃபாசிஸ்டுகள்தான் என்று கிண்டலடிக்கிறாரா?
தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் "ஃபாசிச எதிர்ப்பு" என்பது பாஜக-சங் பரிவார் எதிர்ப்பு தான். இங்கே ஃபாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என்று அவர் கருதுகிறாரா? அப்படியெனில், பாஜக- சங்பரிவார் எதிர்ப்பு வேண்டாம் என கூறுகிறாரா? என்ன பொருளில் அந்த நையாண்டி தொனிக்கும் ஆவேச உரை வெடித்தது ? பிளவு வாதத்தை எதிர்ப்பதாகக் கூறுவதன் மூலம் பாஜகவை எதிர்ப்பதைப்போன்ற தோற்றம் ஒருபுறம். ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு? , என்று திருமாவளவன் குறிப்பிட்டு உள்ளார்.
2வது விக்கெட்: விசிக விக்கெட் காலியாக.. தற்போது சீமானும் விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தாலும்.. நடிகர் விஜயின் அரசியல் வருகையாலும் எனது வாக்குகள் குறையாது என்று தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது ரசிகர்களை சந்தித்துதான் வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்து வந்த நான், மக்களை சந்தித்துதான் அரசியலுக்கு வந்தேன். ஒரு நடிகரைப் பார்க்க கூட்டம் அதிகளவு வரும். ஆனால், கூட்டத்தில் வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே
விஜயின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள், என்று சீமான் தெரிவித்துள்ளார். முன்னதாக மாற்று அரசியல் மாற்று சக்தி இந்த மாதிரி ஏமாத்துற வேலையெல்லாம் செய்ய மாட்டோம்.. அரசியல் மேடை என்றாலே கொந்தளிப்பாக பேசுவது, உலக வரலாறு, கோட்ஸ்களை எம்பி 3 ஆடியோ போல பேசுவது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ளார் நடிகர் விஜய்.
3வது விக்கெட்: இது போக மதிமுகவும் விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை நண்பர் விஜய், மதவாத சக்திகளுக்கு இடமளித்து விடக்கூடாது என்று திருச்சி எம்.பி. துரை வைகோ கூறியுள்ளார்.
4வது விக்கெட்: இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், "இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. எனவே, தவெக உடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை. எங்களுக்குள் சலசலப்பு, சங்கடம் இருந்தால் இந்த கேள்வியைக் கேட்கலாம். ஆனால், எங்கள் கூட்டணிக்குள் அப்படி எதுவும் இல்லை.
நாளைய தினமே வேறு ஒருவர் வந்து கட்சியை ஆரம்பிக்கலாம். அவரும் கூட்டாட்சி என்று சொன்னால்.. அதற்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா. இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. சிந்தாமல் சிதறாமல் அடுத்த தேர்தலைச் சந்திப்போம்.. நாங்கள் தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை, என்றுள்ளார்.
இன்னும் 2 கட்சி: இப்படி 4 விக்கெட் காலியாக.. இன்னும் சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் மட்டுமே இதுவரை பேட்டி அளிக்கவில்லை. இவர்களும் நிலைப்பாடு எடுக்கும் பட்சத்தில் விஜய் தனித்து போட்டியிடும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. விஜய் தனித்து போட்டியிடும் பட்சத்தில் எதிர்க்கட்சி வாக்குகள் பிரிந்து அது ஆளும் திமுகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகளும் உள்ளன.












Click it and Unblock the Notifications