அண்ணாமலை அவசரமாக மன்னிப்பு கேட்டது ஏன்? அதற்குப் பின்னால் நடந்தது என்ன?
சென்னை: அன்னாபூர்ணா உரிமையாளர் விவகாரத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்? அதற்காகக் காரணம் என்ன? நிர்மலா சீதாராமனை ஆதரிக்காமல் அவர் வணிகர்களை ஆதரித்து அறிக்கை விட வேண்டிய தேவை என்ன?
கோவையில் நடைபெற்ற தொழில்முனைவோர் சந்திப்பில் கடந்த 2 நாட்கள் முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன், 'இனிப்புக்கு 5% ஜிஎஸ்டி, காரத்திற்கு 12% ஜிஎஸ்டி எனப் போடுவது வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனே எங்கள் கடைசியில் இனிப்பு சாப்பிட்டுவிட்டு இந்த வேறுபாடு பற்றி கேள்வி எழுப்புகிறார்.

வடநாட்டில் உள்ளவர்கள் இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் ஜிஎஸ்டி குறைவாக போடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உள்ளவர்கள்தான் காரம் அதிகம் சாப்பிடுகிறார்கள். எனவே அதற்கு அதிக ஜிஎஸ்டி போட்டுள்ளார்கள் என்று வானதி சீனிவாசன் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அதை நான் கூட மறுத்தேன். எனவே இந்த வேறுபட்டைச் சரி செய்து கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார். உணவக உரிமையாளர் சீனிவாசனின் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியது. அதன்பின்னர் வேறு ஒரு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 'ஜிஎஸ்டி பற்றி ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு நான் அங்கே பதிலளிக்கவில்லை. உடனே ஊறுகாய் மாமியைப் பதில் கொடுக்கவிடாமல் மடக்கிவிட்டார்' என்று சிலர் பேசுகிறார்கள். இதைப் பற்றி எல்லாம் எனக்குக் கவலையில்லை' என்று கூறியிருந்தார்.
அடுத்த நாள் சீனிவாசன் தனி அறையில் நிதியமைச்சரை சந்தித்து, 'நான் எந்தக் கட்சியையும் சேராதவன். ஆகவே நடத்தை விசயத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது ராகுல்காந்தி வரை சென்றது. உடனே எதிர்க்கட்சியின இதை ஒரு சர்ச்சையாகக் கையில் எடுத்தன. அதை உணர்ந்த அண்ணாமலை பாஜக சார்பாக தான் வெளியான வீடியோவிற்கு மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்திருந்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எதிர்த்துப் பேசியதற்காக வானதி சீனிவாசன் உணவக உரிமையாளரை விமர்சனம் செய்த நிலையில், அண்ணாமலை வணிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளது ஏதோ நெருடலாக உள்ளது என ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அண்ணாமலை மன்னிப்பு கேட்டது ஏன்? அவர் செய்தது சரியா? என்பது பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், "அறைக்குள் நடைபெறும் ஒரு உரையாடலைப் பொதுவெளிக்குக் கொண்டுவருவதற்கு ஒரு வரையறை இருக்கிறது. இதற்குப் பாரதிதாசன் ஒரு இலக்கணம் வகுத்திருக்கிறார். 'அறைதனில் நடந்தவற்றை அம்பலத்தில் இழுத்துப் போட்டு, கறையுளம் தூய்மை செய்வாய், நிறை பொருள் ஆவாய் ஏழை நீட்டிய வெறும் கரத்தே' என்று அவர் ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.

இந்தப் பாட்டின் மூலம் பாரதிதாசன் சொன்னது என்ன? கறைபடிந்த ஒரு காரியத்தைச் செய்தவரைப் பொதுவெளியில் அம்பலப்படுத்தலாம். ஆனால், அது ஏழை மக்களுக்குப் பலன் உள்ளதாக இருக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இந்த ஜிஎஸ்டி சர்ச்சையில் பாதிக்கப்படுபவர் யார்? முதலில் ஏழைகள் மக்கள். அடுத்து வணிகர்கள். சாமானியர்கள் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத்தான் அன்னபூர்ணா உணவக முதலாளி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உணர்த்தினார். அதைத் தொடர்ந்து அவரை தனி அறைக்குள் வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இதுதான் இந்தியா முழுமைக்கும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
கடந்த 3 மாதங்கள் முன்னதாக மகாராஷ்டிராவில் இதேபோல் தொழில்முனைவோர் சந்திப்பு நடந்தது. அதில் ஒரு வணிகர், 'நாங்கள் விற்றாலும் ஜிஎஸ்டி. வாங்கினாலும் ஜிஎஸ்டி. எங்கள் லாபத்திலும் ஜிஎஸ்டி. நாங்கள் முதலீட்டாளர்கள். ஆனால், மத்திய அரசு எங்கள் தொழிலில் பங்குதாரரே இல்லை' என்று சொல்லி இருந்தார். அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், 'நாங்கள் உள்ள சிலீப்பிங் பார்ட்னர்' என்று சொல்லி இருந்தார். அந்த வீடியோ கூட மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
என் கேள்வி என்னவென்றால், ஜிஎஸ்டியில் உள்ள குறைகள் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான் வணிகர்களை நிதியமைச்சர் சந்தித்து கருத்துக் கேட்கிறார். அங்கே அவர்கள் குறைகளைச் சொல்லத்தானே செய்வார்கள். அதைக் கேட்டு முடிவெடுக்க வேண்டியது மத்திய அமைச்சரின் பொறுப்புதானே. குறைகள் சொன்னால், பொறுமையாகக் கேட்டுக் கொண்டு நடவடிக்கை எடுப்போம் எனச் சொல்வதுதானே முறை. அதைப் பற்றி ஒரு பதில் விமர்சனத்தை நிதியமைச்சர் முன்வைப்பது எப்படிச் சரி? அவர் முன்பு பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தார். அப்போது இப்படித்தான் அனைத்திற்குப் பதில் விமர்சனம் தருவார்.
அதேபோல் இப்போதும் அவர் செய்தி தொடர்பாளராகவே இருக்கிறார். மத்திய அமைச்சராக அவர் இன்னும் மாறவில்லை. வணிகர் ஒருவர் முன்வைக்கும் கோரிக்கையைக் கேட்பதுதான் ஒரு அமைச்சரின் கடமை. அதற்காக அவரை தனியாக அழைத்து மன்னிப்பு கேட்க வைப்பது எப்படிச் சரியாகும்? அதை பாஜக ஐடி விங் தான் வீடியோவாக வெளியிடுகிறது. அன்னாபூர்ணா மிகப் பெரிய பிராண்ட். அவரை இப்படியா அசிங்கப்படுத்துவது?
இப்படித்தான் அண்ணாதுரை மறைந்தபோது கிருபானந்தவாரியார் ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, 'கில்லர் வந்துவிட்டால் எந்த மில்லரும் காப்பாற்ற முடியாது' என்றார். டாக்டர் மில்லர் என்பவர்தான் அண்ணாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளித்தவர். ஆகவே வாரியார் பேச்சு சர்ச்சையானது. எம்.ஜி.ஆருக்கு இந்தப் பேச்சு பிடிக்கவில்லை. நேரடியாகச் சொன்னால் பிரச்சினை அதிகமாகும் என உணர்ந்த எம்.ஜி.ஆர் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வாரியாரை அழைத்தார். அவரும் வந்தார். அந்த மேடையில்தான் எம்ஜிஆருக்கு பொன்மனச்செம்மல் பட்டத்தை வழங்கிவிட்டு, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் வாரியார். இது நாசூக்காக நடப்பதைப் போல எம்.ஜி.ஆர் விழாவை ஏற்பாடு செய்தார்.

அப்படி ஒரு நாகரிகம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பாஜக இந்த விவகாரத்தில் அந்த நாகரிகத்தைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டது. இந்தியா முழுவதும் வணிகர்களின் ஓட்டு பாஜக கையில்தான் உள்ளது. கோவை வணிகர்களின் ஓட்டும் பாஜக பக்கமே உள்ளது. இந்த மக்களவை தேர்தலில் கோவையில் போட்டியிட்ட அண்ணாமலைக்கு இது தெரியும். அதிமுகவைவிட அதிக வாக்குகளை அண்ணாமலை வாங்கி இருந்தார். இதைத் தக்கவைக்க வேண்டும் என்று அவர் நினைப்பதும் சரிதான். அதை மனதில் வைத்து வணிகர்களைத் திருப்திப்படுத்தவே அண்ணாமலை மன்னிப்புக் கேட்டுள்ளார்.
பாஜக பல வருடங்கள் முன்பாகவே கோவையில் பலமாக இருந்து வருகிறது. 1998இல் ஜெயலலிதா பாஜகவுக்குக் கோவை மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு சீட்டுகளைக் கொடுத்தார். கோவையில் சிபிஆர் வென்றார். நீலகிரியில் மாஸ்டர் மதன் வென்றார். எனவே அங்கே உள்ள வாக்கு வங்கியை தக்கவைக்கவே ஒரு மாநிலத் தலைவராக அண்ணாமலை வளர்ந்த ஓட்டு வங்கி உள்ள பகுதி மக்களைக் காயப்படுத்த வேண்டாம் என்பதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications