2 விஷயங்கள்.. "ரூல் 17".. ரவி உரைக்கு எதிராக ஸ்டாலினே தீர்மானம் கொண்டு வந்தது ஏன்? ஆஹா பெரிய மெசேஜ்
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவி நேற்று சட்டசபையில் நிகழ்த்திய உரையை நீக்கும்படி முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததற்கு பின்பாக முக்கிய சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநர் ஆர். என் ரவி நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார்.
ஆளுநர்கள் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே பேச வேண்டும் என்பதுதான் சட்டம். இதுதான் சட்டசபை விதி. ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இந்த விதியை மீறி உள்ளார். ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார்.
ஆளுநர் ஆர். ரவி தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையை வாசிக்காமல் விட்டது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த மொத்த உரை அவை குறிப்பில் இடம்பெற்றது.

ஆளுநர் உரை
ஆளுநர் ஆர். என் ரவி நேற்று சட்டசபையில் நிகழ்த்திய உரையை நீக்கும்படி முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததற்கு பின்பாக முக்கிய சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக சட்டசபை விதி எண் 17 ஐ இதில் தளர்த்தி உள்ளனர். தமிழ்நாடு சட்டசபை விதி எண் 17 என்ன சொல்கிறது என்றால் ஆளுநர் உரை நிகழ்த்தும் முன்பும், பின்பும், உரை நிகழ்த்தும் போதும் அவரின் செயலுக்கு இடையூறு இருக்க கூடாது. அவருக்கு இடையூறாக செயல்பட கூடாது. அவர் அந்த அரங்கத்தை விட்டு வெளியேறும் வரை அவரின் செயலுக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்று விதி சொல்கிறது. இந்த விதி சபாநாயகருக்கும் பொருந்தும், முதல்வருக்கும் பொருந்தும்.

விதி என்ன சொல்கிறது
அதாவது ஆளுநர் உரையாற்றும் அன்று முன்பும், பின்பும், அவரின் உரையின் போது அவருக்கு இடையூறு செய்ய கூடாது என்பதே இந்த விதி. முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆளுநர் உரையை நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இந்த விதியை மீறித்தான் அவர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அங்குதான் முதல்வர் ஸ்டாலின் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட்டார் என்று கூற வேண்டும். ஏனென்றால், முதல்வர் ஸ்டாலின் தனது தீர்மானத்தை படிக்கும் போதே சட்டசபை விதி எண் 17 ஐ தளர்த்தி என்றுதான் தனது தீர்மானத்தை வாசிக்கிறார். சட்டசபை விதி எண் 17ஐ தளர்த்தி தீர்மானம் கொண்டு வருவதாக கூறினார்.

ரூல் 17
அந்த தீர்மானத்தில், ஆளுநர் அவர்களுக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன. நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால் நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை. பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம்.

தீர்மானம்
ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல - அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும். ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை முன் மொழிந்தார்.

துரைமுருகன்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இப்படிப்பட்ட தீர்மானங்களை அவை முன்னவர்தான் பொதுவாக கொண்டு வருவார். அதாவது அமைச்சர் துரைமுருகன்தான் இது போன்ற தீர்மானங்களை அவை முன்னவராக கொண்டு வந்து இருக்கிறார். ஆனால் நேற்று முதல்வர் ஸ்டாலின் களமிறங்கி.. அவரே ஆளுநரை வைத்துக்கொண்டு.. விதியை தளர்த்துங்கள்.. ஆளுநரின் உரையில் இருந்த கூடுதல் பாகங்களை நீக்குங்கள்.. உண்மையான உரையை குறிப்பில் ஏற்றுங்கள் என்று தீர்மானம் கொண்டு வந்தார். அவை முன்னவரை கொண்டு வருவதற்காக அவர் காத்திருக்கவில்லை. இந்த தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வந்ததன் மூலம் ஆளுநருக்கு எதிரான தனது எதிர்ப்பை அவையில் உறுதியாக பதிவு செய்துள்ளார். இது மரபு இல்லை என்றாலும் விதியை தளர்த்தி.. அந்த தீர்மானத்தை வெற்றிபெறவும் வைத்து ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

ஸ்டாலின் மெசேஜ்
நேற்று இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு.. அதன் மீது வாக்கெடுப்பு நடத்தினார். சபாநாயகர்தான் அவைக்குள் உட்சபட்ச அதிகாரம் இருக்கிறது. அதனால் அவர் தீர்மானத்தை ஒப்புக்கொண்ட போதே பாதி விஷயம் முடிந்துவிட்டது. அதன்பின் தீர்மானமும் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதனால் விதி எண் 17 தளர்த்தப்பட்டு, ஆளுநர் உரையின் பத்திகள் நீக்கப்பட்டு, உண்மையான அரசு தயாரித்த உரை அவை குறிப்பில் ஏற்றப்பட்டது. ஆளுநருக்கு எதிரான மோதலில் ஸ்டாலினின் மிகப்பெரிய மெசேஜாக இது பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதல்முறை இப்படி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications