ஒருநாள் டைம்.. உடனே "மெயில்" அனுப்புங்க.. சைலேந்திர பாபு போட்ட பரபர உத்தரவு.. தயாரான போலீஸ்!
சென்னை: மண்டல காவல்துறை தலைவர்கள், அனைத்து காவல்துறை ஆய்வாளர்கள் ஆகியோருக்கு டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான உத்தரவு ஒன்றை போட்டுள்ளார்.
கடந்த வருடம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் வெளியானது. பொது மக்களின் பிரச்சினைகளை காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க ஒரு கைபேசி செயலி உருவாக்கப்படும். காவல் நிலைய அதிகாரி விசாரணை அறிக்கை அந்த செயலியில் தரவேற்றம் செய்யப்படும்.
காவல்துறையினரின் நலன்களை பாதுகாக்க காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்ப்படி 800 ரூபாயிலிருந்து 1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் என்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது.

விடுமுறை
இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலான காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும். காவல் ஆளிநர்கள் தற்செயல் விடுப்பு ஒப்புதல் அளிக்கும் மென்பொருள் ( CLAPP ) APP 1 ரூபாய் 10 லட்சம் செலவில் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது காவலர்களின் பல நாள் கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கை தொடர்பான அறிவிப்பு கடந்த முறை வெளியானது. இந்த நிலையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதம் மீண்டும் வரும் மே 9 மற்றும் 10ம் தேதிகள் நடக்க உள்ளது.

பேச உள்ளார்
காவல்துறை மானியக்கோரிக்கை விவாதம் மே 9 மற்றும் 10ம் தேதிகள் நடக்க உள்ள நிலையில் காவலர்களின் கோரிக்கைகள் பல இதில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களுக்கு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்., அதன்படி தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஒருநாள் வார விடுப்பால் எத்தனை பேர் பயன் அடைந்துள்ளனர். எத்தனை பேர் இதில் விடுமுறையை முறையாக பயன்படுத்தி உள்ளனர் என்று கேள்வி கேட்டுள்ளார்.

மெயில்
எத்தனை பேர் விடுமுறை எடுத்துள்ளனர் என்பதை பட்டியலாக எடுங்கள். அதை வைத்து ரிப்போர்ட் தயார் செய்து அதை, தலைமையகத்திற்கு அனுப்புங்கள் என்று சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தலைமையகத்திற்கு உடனே மெயில் அனுப்பும்படி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மண்டல காவல்துறை தலைவர்கள், அனைத்து காவல்துறை ஆய்வாளர்கள் ஆகியோருக்கு சைலேந்திர பாபு மூலம் மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

இன்னொரு கோரிக்கை
உங்கள் துறையில் முதல்வரின் திட்டத்தின்படி காவல்துறையிடம் இருந்து பெறப்பட்ட மனுவில் இருந்தது எந்தெந்த கோரிக்கைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ரிப்போர்ட் தயார் செய்யவும். அதை நாளை மாலைக்குள் தலைமையகத்திற்கு அனுப்புங்கள் என்று சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் மானியக்கோரிக்கை விவாதம் மே 9 மற்றும் 10ம் தேதிகள் நடக்க உள்ளது. இதற்கு ரிப்போர்ட் தயாரிக்கும் வகையில் இந்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications