"நோ சான்ஸ்".. கனிமொழி என்ன இப்படி டக்குனு சொல்லிட்டாரே.. ஸ்டாலினுக்கு தெரியுமா.. அப்ப அவ்வளவுதானா?
சென்னை: பூரண மதுவிலக்கு குறித்து கனிமொழி எம்பி சொன்ன கருத்து, தமிழக அரசியல் களத்தில் ஆச்சரியத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
ஒரு குட்டி பிளாஷ்பேக்:
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கோரிக்கை வலுப்பெற்றது.
இதைத் தொடர்ந்து, திமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் அழுத்தமாக தெரிவித்திருந்தன.

500 டாஸ்மாக்
ஆனால், அப்போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்" என்று அறிவிக்கப்பட்டது... அதன்படியே, 2016-ல் அதிமுக ஆட்சி அமைத்தது.. பூரண மதுவிலக்கு அறிவிப்புதான் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்வியடைய காரணமாக அமைந்ததாகவும் அப்போது பரவலாக பேசப்பட்டது. பிறகு, ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியோ, 500 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டார்... இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.. கடந்த சட்டமன்ற தேர்தலை எடுத்து கொண்டால், திமுகவின் தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்புமே வெளியாகவில்லை.. மது விலக்கு அறிவிப்பை திமுக தவிர்த்திருந்தது, மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

கனிமொழி பங்கேற்பு
இப்படிப்பட்ட சூழலில்தான், பூரண மதுவிலக்கு குறித்த கேள்வி ஒன்று எழுந்துள்ளது.. கேள்வியை எழுப்பியவர் ஒருகல்லூரி மாணவர் ஆவார்.. கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கலை கல்லூரியில் மாணவ மாணவியர் திறமைகளை முன்னேற்ற, கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.. இதில், தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டு, மாணவிகளிடம் உரையாடினார். மாணவிகளும், கனிமொழியிடம் நிறைய கேள்விகளை எழுப்பினர். அவைகளுக்கு சளைக்காமல், மிக துல்லியமாகவும், விரிவாகவும் பதில் அளித்தார் கனிமொழி..

மாணவி கேள்வி
அப்போது ஒரு மாணவி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மது காரணமாக பல குடும்பங்கள் சீர்குலைந்து உள்ளதே.. போலீஸ்காரர்களே மது பழக்கத்திற்கு ஆளாகி வருவது வேதனையாக இருக்கிறது.. தமிழகத்தில் மது விற்பனை ஒரேடியாக நிறுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.. இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத கனிமொழி, "திமுக தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு என்று எதுவுமே சொல்லவில்லை.. அதனால், மதுக்கடைகளை மூடுவது என்பது இயலாத விஷயம்.. அதற்கு பதிலாக, அந்த கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்..

கனிமொழி பேச்சு
இந்த பதில் பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. குடியால் எத்தனையோ குடும்பங்கள் சிதைந்து போகும் நிலையில், திமுக அரசு இதற்கான நடவடிக்கையை இனியும் எடுக்காது என்றே தெரிகிறது.. டாக்டர் ராமதாஸ், தன் வாழ்நாளில் அதிக அளவு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறார் என்றால், அது இந்த மதுபான விஷயத்துக்குதான்..

கனிமொழி பதில்
கனிமொழியின் பதில் பலருக்கு அதிர்ச்சியை தந்தாலும், மேலும் சிலர் இதை பற்றி கருத்து சொல்லி வருகிறார்கள். கனிமொழி ஒன்றும் தவறாக சொல்லிவிடவில்லையே, தேர்தல் அறிக்கையில் இருந்து, அதை நிறைவேற்றாமல் இருந்தால் அதை பற்றி கேட்கலாம், ஆனால், இல்லாத ஒரு விஷயத்தை கேட்டால், அவர் அப்படித்தானே பதில் சொல்வார்? கனிமொழி சொல்லியது தவறில்லை" என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. எது எப்படியோ, "பூரண மதுவிலக்கு என்பது இனிமேல் சாத்தியமே இல்லையா?" என்ற ஏக்கக் குரல் தமிழக குடும்பங்களில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது..!

நிதி நெருக்கடி
அதேசமயம், தமிழகத்தின் நிதி நெருக்கடிகளுக்கும் டாஸ்மாக்கையே நம்பி உள்ள சூழல் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.. கடந்த கால அதிமுக ஆட்சியானது, கஜானாவை காலி செய்து வைத்து விட்டு போன நிலையில், தொற்று பரவல் நேரத்தில் டாஸ்மாக்கை பாதுகாப்பாக திறந்து நடத்தும் நிலைமைக்கும் அரசு சென்றதை மறுக்க முடியாது.. எது எப்படியோ, "பூரண மதுவிலக்கு என்பது இனிமேல் சாத்தியமே இல்லையா?" என்ற ஏக்கக் குரல் தமிழக குடும்பங்களில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது..!












Click it and Unblock the Notifications