ஆளுநருக்கு எதிராக " திடீர்" தீர்மானம் எப்படி? துரைமுருகனுக்கு பதில் முதல்வர் கொண்டு வந்தது ஏன்?
சென்னை: ஆளுநர் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் வாசிக்காமல் தான் ஏன் அந்த தீர்மானத்தை கொண்டு வந்தேன் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது விளக்கத்தை திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் வரலாற்றில் முதல்முறையாக நேற்று முன் தினம் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் தேசிய அளவுக்கு சென்றுவிட்டது. அங்கிருந்தும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வருகின்றன.
ஆளுநர் உரையின் போது நடந்த விரும்பத்தகாத விஷயங்கள் குறித்தும் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று நடந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உரையை
ஆளுநர் பேச வேண்டிய உரையை தயாரித்து அவரது ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தோம். அதில் அவர் எந்த வார்த்தைக்கெல்லாம் ஆட்சேபம் தெரிவிப்பார் என நாங்கள் நினைத்தோமோ அதற்கெல்லாம் அவர் ஒன்றுமே சொல்லவில்லை. மாறாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது, அது சமூகநீதிக்கு எதிரானத என குறிப்பிட்டிருந்தது குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டிருந்தார்.

துரைமுருகன்
அதற்கு தேவையான விளக்கத்தை ஐஏஎஸ் அதிகாரி கொடுத்திருந்தார். இதையடுத்து ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இதனால் எதுவும் பிரச்சினை இல்லை என்றே நினைத்தோம். ஆனால் ஆளுநர் உரையை வாசிக்க வாசிக்க சில வார்த்தைகளை தவிர்ப்பது ஒரு பத்தியை வாசிக்காமல் போனது , சிலவற்றை அரசு எழுதி கொடுக்காதவற்றை சேர்த்தது உள்ளிட்டவற்றை செய்தார்.

துரைமுருகன்
அப்போது இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் என்னிடம் சொன்னார். பிறகுதான் அவசர அவசரமாக தீர்மானத்தை ரெடி செய்தோம். பின்னர் 17 ஆவது சட்டவிதியை தளர்த்தி அந்த தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்தோம். முதலில் அமைச்சர் துரைமுருகனை அந்த தீர்மானத்தை முன்மொழிய வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் இதில் ஏதாவது சிக்கல் வந்துவிடும் என நினைத்து முதல்வராகிய நாமே முன்மொழிந்துவிடலாம் என எண்ணி அந்த தீர்மானத்தை வாசித்தேன்.

முன்கூட்டி தயாரிக்கப்படவில்லை
இந்த தீர்மானம் முன் கூட்டியே தயாரிக்கப்பட்டது என சிலர் கூறுகிறார்கள். அவையில் நடந்த நிலைக்கேற்ப தீர்மானத்தை அவையில் இருந்தபடியே தயார் செய்தோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த கூட்டத்தில்தான் ஆளுநருக்கும் நமக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே அவரை தரக்குறைவாகவோ இல்லை தனிப்பட்ட முறையிலோ விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களாக உள்ளவர்களும் அமைச்சர்களாக உள்ளவர்களும் மாவட்டச் செயலாளர்களாகவும் இருப்பதால் அவர்கள் மூலம் தங்கள் மாவட்ட பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்துமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications