30 ஆண்டுகள்.. ஸ்டார் ஹோட்டல் சொகுசு, ரூ.0 கட்டணம்: ஆடம்பர ஹோட்டல்களை அலறவிட்ட தூத்துக்குடி நபர்!
சென்னை: 30 ஆண்டுகளாக 300 ஸ்டார் ஹோட்டல்களை ஏமாற்றி தங்கி, பில் தராமல் ஏமாற்றி எஸ்கேப் ஆகி வந்த தூத்துக்குடியை சேர்ந்த 69 வயதான வின்சென்ட் ஜான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலமுறை போலீசின் பிடியில் சிக்கினாலும் தளராமல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு, ஹோட்டல்களில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் இந்த வின்சென்ட் ஜான்.
உலகில் பல வகையான மோசடி பேர்வழிகளை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். எந்தவித ஆயுதமும் இல்லாமல், வெறும் சாதுரியத்தை மட்டுமே வைத்து, நாட்டின் முன்னணி 5 ஸ்டார் ஆடம்பர ஹோட்டல்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி, ஒரு ரூபாய் கூட தராமல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஒரு மனிதனின் கதை தற்போது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 ஆண்டுகளாக
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வின்சென்ட் ஜான். இவருக்கு வயது 69. இவர்தான், நாடு முழுவதும் உள்ள பல ஸ்டார் ஹோட்டல்களில் ஏமாற்றி தங்கி இருந்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், கோவா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், தெலுங்கானா, சத்தீஸ்கர் என பல மாநிலங்களில் 1996 ஆம் ஆண்டு முதல் சொகுசு ஹோட்டல்களில் தங்கி வந்துள்ளார்.
1980களில் டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியாகப் பணியாற்றி வந்துள்ளார் வின்சென்ட் ஜான். அப்போது, ஹோட்டல்களில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். ஒரு ஹோட்டலில் இவரை அவமானப்படுத்தி உள்ளனர். அதற்குப் பழி வாங்குவதற்காக 30 ஆண்டுகளாக ஸ்டார் ஹோட்டல்களை ஏமாற்றி தங்கி வருகிறாராம்.
தில்லுமுல்லு
கண்ணியமான தோற்றம், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் விதம், ஆகியவற்றைக் கொண்டு தன்னை ஒரு யோகா ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் அல்லது சுற்றுலா வழிகாட்டி எனப் பொய் முகமூடியுடன் ஹோட்டல்களில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் வின்சென்ட் ஜான், ஊழியர்களிடம் இனிமையாகப் பேசி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் கில்லாடி.
ஹோட்டலுக்கு வரும்போது இரண்டு பைகளுடன் வரும் இவர், ஒரு பையில் தனது துணிகளையும், மற்றொரு பையில் பழைய செய்தித்தாள்கள் அல்லது தலையணைகளையும் நிரப்பி எடுத்து வருவாராம். தான் ஹோட்டலை விட்டு வெளியில் செல்லும்போது ஊழியர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க, செய்தித்தாள்கள் உள்ள பையை அறையிலேயே விட்டுவிட்டு, தனது துணிப்பை மற்றும் ஹோட்டல் அறையில் இருக்கும் லேப்டாப், விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட்டுகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைத் திருடிக் கொண்டு நைசாக எஸ்கேப் ஆகிவிடுவாராம்.
ஹோட்டலில் இருந்து எஸ்கேப்
கடந்த ஜூன் 25 ஆம் தேதி சத்தீஸ்கரின் ராய்பூரில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் அறை எடுத்து 2 நாட்கள் தங்கிவிட்டு, ஊழியர் ஒருவரை நயமாகப் பேசி ஏமாற்றி ₹1.48 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்பை பெற்றுக்கொண்டதுடன், ரூபாய் 63,755 பில் தொகையைச் செலுத்தாமல் ஜூன் 27 அன்று தப்பியுள்ளார். புவனேஸ்வர் சென்ற அவரை கடந்த 2 ஆம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹோட்டல் நிர்வாகத்தின் புகாரைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புவனேஸ்வரில் வைத்து இவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இவர் மீது டெல்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏமாற்று வழக்குகள் இருப்பதும், 300-க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களில் இதுபோன்று கைவரிசை காட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.
பிடிபட்டும் திருந்தவில்லை
கடந்த சுமார் 30 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள முன்னணி சொகுசு ஹோட்டல்களில் இதே பாணியைப் பயன்படுத்தி அவர் தங்கிவிட்டு, அங்கிருந்து எஸ்கேப் ஆவதை தொடர்ந்து வந்தாராம். சில முறை போலீசில் பிடிபட்டும், இந்த மோசடியை அவர் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications