கரூர் வந்தார் முதல்வர் விஜய்.. 10 மாதங்களுக்கு பின் கிடைத்த மாஸ் வரவேற்பு!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்க முதல்வர் விஜய் கரூர் வந்துள்ளார். திருச்சியில் இருந்து கார் மூலமாக கரூர் - சேலம் பைபாஸ் சாலை வந்த விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பின் விஜய் கரூர் பக்கமே வரவில்லை. இந்த நிலையில் 10 மாதங்களுக்கு பின் முதல்வர் விஜய் கரூர் வந்துள்ளார். அவருக்கு கரூர் மாவட்ட மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான இருக்கை, தண்ணீர், ஸ்நாக்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக கருப்பு மற்றும் வெள்ளை நிற கோட் சூட் உடன் வரும் விஜய், இம்முறை நீல நிற சட்டை அணிந்து வந்துள்ளார். இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான அரங்கிற்குள் வந்துள்ள விஜய், தவெக தொண்டர்களிடையே பேச இருக்கிறார். இதன்பின் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்குகிறார். அதுமட்டுமல்லாமல் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மூலமாக கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 13,500 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை முடித்த பின் விஜய் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார். முதல்வர் விஜய்யின் கரூர் வருகையையொட்டி 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விஜய்யின் வாகனம் செல்லும் இடங்களில் எல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
