கோபம் + துரோகம் + கலக்கம்.. நேற்று மாலை ஓபிஎஸ் வீட்டில் நடந்தது என்ன? அந்த 3 மணி நேரம்! பரபர பின்னணி
சென்னை: அதிமுகவில் நாளை பொதுக்குழு நடக்க உள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு நிமிடத்திற்கு நிமிடம் வலுவிழந்து கொண்டே இருக்கிறது.
அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. நாளை காலை அதிமுக பொதுக்குழு வானகரத்தில் நடக்க உள்ளது.
இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். பொதுச்செயலாளர் பதவியில் பொறுப்பேற்க அவர் தீவிரமாக முயன்று வருகிறார்.

ஓபிஎஸ் முயற்சி
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவை திரட்ட ஓபிஎஸ் தீவிரமாக முயன்றார். ஆனால் அவருக்கு பெரிதாக ஆதரவு கிடைக்கவில்லை. மாவட்ட செயலாளர்கள் ஆதரவு கூட பெரிதாக ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி எப்படியாவது அதிமுக பொதுக்குழுவை தடுக்க வேண்டும் என்று அவர் முயன்று வருகிறார். முதலில் பொதுக்குழுவை நிறுத்த எடப்பாடிக்கு அவர் கடிதம் எழுதினார். ஆனால் எடப்பாடி பொதுக்குழுவை நிறுத்தாததால், இதை பாதுகாப்பு காரணங்களால் தடை செய்ய வேண்டும் என்று போலீசுக்கு புகார் அளித்துள்ளார்.

நிலைமை கைமீறியது
நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட ஓபிஎஸ் கையை விட்டு லகான் நழுவி இருக்கிறது. ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் கூட அவர் பக்கம் பெரிய அளவில் நிர்வாகிகள் இல்லை. 7 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் ஓபிஎஸ்ஸுக்கு நீண்ட கால ஆதரவாளர்களாக இருந்த பலரும் எடப்பாடிக்கு நேற்று ஒரே நாளில் ஆதரவு தந்தனர். நெல்லை மாவட்ட செயாலளர் கணேஷ ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் இருவரும் எடப்பாடி கப்பலுக்கு தாவினர்.

பலர் ஆதரவு
திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுகச் செயலாளர் அலெக்சாண்டர் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவர். அதோடு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று எடப்பாடிக்கு நேரடி ஆதரவு தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் தர்மயுத்தத்தின் போது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த மாஃபா பாண்டியராஜன் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலைக்கு பின் ஓ பன்னீர்செல்வம் தனது வீட்டில் ஒரு சில நிர்வாகிகளுடன் மட்டும் ஆலோசனை செய்துள்ளார்.

ஆலோசனை
அதில்.. மிகவும் கலக்கத்துடன் ஓபிஎஸ் பேசியதாக கூறப்படுகிறது. நெருக்கமாக இருந்த பலர் அந்த பக்கம் சென்றுவிட்டனர். நான் அதிகம் நம்பிய நிர்வாகிகள் துரோகம் செய்துவிட்டனர். நான் பார்த்து வளர்த்துவிட்ட பலர் இப்போது என்னுடன் இல்லை. பதவிதான் முக்கியம் போல என்று ஓ பன்னீர்செல்வம் கொஞ்சம் விரக்தியுடன் நேற்று பேசி இருக்கிறாராம். கோபம் + துரோகம் + கலக்கம் மூன்று உணர்வுகளும் கலந்து சோகமாக அவர் பேசி இருக்கிறார். நேற்று மாலை அவரின் வீட்டிற்கு ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே சென்றனர்.
Recommended Video

3 மணி நேரம்
இரவு தூங்குவதற்கு முன் அவர்களுடன் 3 மணி நேரம் ஓபிஎஸ் பேசி இருக்கிறார். ஆனால் 10 முக்கிய நிர்வாகிகள் கூட அங்கு இல்லையாம். இந்த மீட்டிங்கில், கட்சி கையை விட்டு போய்விடுமோ என்று கலக்கத்துடன் பேசி இருக்கிறார். இன்று நடக்கும் உயர் நீதிமன்ற விசாரணையில் பொதுக்குழுவிற்கு தடை வந்தால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் அவ்வளவுதான் என்று அவரிடம் நிர்வாகிகள் தெரிவித்து இருக்கிறார்களாம். வழக்கு நமக்கு சாதகமாக வருகிறதா என்று பார்ப்போம். இல்லையென்றால் பொதுக்குழுவில் முடிந்த அளவு எதிர்ப்புகளை தெரிவிப்போம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் ஓ பன்னீர்செல்வம்!












Click it and Unblock the Notifications