அடம்பிடித்த மா.சு.. யோசித்த உதய்.. ஸ்டாலின் தொடங்க வேண்டிய திட்டத்தை உதயநிதி தொடங்கியது ஏன்? பின்னணி
சென்னை: முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் முயற்சியில் தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களிலும், நடப்போம் நலம் பெறுவோம் எனும் ஹெல்த் வாக் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
இதற்காக 38 மாவட்டங்களிலும் பிரத்யேகமாக 8 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. சென்னையில் இருந்தபடி இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், கடும் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்பட்டதால் ஸ்டாலின் வர இயலாத நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திட்டத்தை தொடங்கி வைத்து விட்டு கொட்டும் மழையில் 8 கி.மீ. நடந்து சென்றார் உதயநிதி. இதற்கு முன்னதாக, கடும் காய்ச்சலால் முதல்வர் அவதிப்படுவதை அறிந்து, திட்டத்தை ஒத்தி வைக்கலாமா? என்று முதல்வரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டிருக்கிறார். ஆனால், முதல்வரோ, திமுக ஆட்சியில் தேதி குறிக்கப்பட்டு அந்த தேதியில் திட்டம் தொடங்கப்படவில்லை ; ஒத்தி வைக்கப்பட்டது என்ற பதிவுகள் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்திய முதல்வர், நீங்களே துவக்கி வையுங்கள் என சொல்லியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தொடங்கியது ஏன்?: அதற்கு மா.சுப்பிரமணியன், நான் வேண்டாம் தலைவரே , உதயநிதியே தொடங்கி வைத்தால் நல்லாயிருக்கும் என்று சொல்ல, அதற்கு ஸ்டாலின் சம்மதித்துள்ளார். அதன்பிறகே உதயநிதியிடம் இதனை மா.சு. சொல்ல, முதலில் உதயநிதியும் தயங்கியிருக்கிறார். குறிப்பாக, உங்களின் சீறிய முயற்சியில் தொடங்கப்படும் திட்டம் இது. தலைவர் (முதல்வர்) வர இயலாத நிலையில் நீங்கள் தொடங்கி வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று உதயநிதி சொல்ல, அதனை ஏற்க மறுத்த மா.சு., நீங்கள்தான் தொடங்கி வைக்க வேண்டும் என அடம்பிடித்ததால் அதனை தட்டமுடியாமல் ஒப்புக் கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி.
சென்னையில் தொடங்கி வைத்ததுடன் தமிழகம் முழுவதுமான இந்த திட்டத்தை காணொளி காட்சி வாயிலாகவும் தொடங்கி வைத்தார். மாவட்ட அளவில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஒரு திட்டம் தொடங்கப்பட்டதில் நடந்துள்ள சுவாரஸ்ய பின்னணி இது என்கிறார்கள் திமுகவினர்.
ஹெல்த் வாக் பின்னணி: தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நிறைய திட்டங்களை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அதை நிறைவேற்றி வருகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சமீபத்தில் அவர் ஜப்பான் சென்றிருந்த போது, முதுமையிலும் பலர் ஆரோக்கியமாக இருப்பதை கண்டார்.
குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரக்கூடிய எந்த ஒரு நோயும் பெரும்பாலான முதியவர்களுக்கு இல்லை என்பதை கண்டறிந்துள்ளார் மா.சு. ! இதற்கான, காரணத்தையும் அறிந்துள்ளார். அதாவது, ஜப்பானில் நடை பாதைகளில் முதியவர்களுக்கென்று 8 கி.மீ. தொலைவிற்கு நடைபயிற்சி நடைபாதை ஒன்றை ஜப்பான் அரசு உருவாக்கியிருப்பதும் அதில் முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதும்தான் என்பதும் தெரிந்து கொண்டிருக்கிறார்.
ஜப்பானில் இது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஜப்பான் மக்களின் ஆரோக்கியத்திற்கு அவர்கள் அதிக தூரம் நடப்பதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதைத்தான் தமிழ்நாட்டிற்கும் கொண்டு வந்துள்ளனர். இதனை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இறங்கிய அமைச்சர் மா.சு., அது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்க, அருமையான திட்டம் என பாராட்டிய முதல்வர், அதற்கு க்ரீன் சிக்னல் தந்திருக்கிறார்












Click it and Unblock the Notifications