கனிமொழி ஸ்டேட்மெண்ட் விட்டபோதே கள்ளக்குறிச்சி கலெக்டர் மறுத்திருக்கலாமே? எம்எல்ஏவுக்காக விஜய் அமைதி?
சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒரு கலெக்டரே புகார் கொடுக்கத் தயங்கும் நிலை ஏன் ஏற்பட்டது? ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் இது இருந்திருந்தால், இந்த விவகாரத்தை எப்படி கையாண்டிருப்பார் தெரியுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.. முதலமைச்சரின் அமைதி, அரசின் முரண்பட்ட கருத்துகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் மவுனம் என மேலும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.
தமிழ்க்குரல் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் மணி, "ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால், இந்த விவகாரத்தில் முதலில் 3 வெவ்வேறு ஆதாரங்கள் மூலம் உண்மை என்ன என்பதை சரிபார்த்திருப்பார். ஒரு ஆதாரத்தை மட்டும் வைத்து முடிவெடுக்க மாட்டார். 3 தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று தகவல் கிடைத்தால், கலெக்டரை நேரில் அழைத்து முறையாக புகார் கொடுக்க சொல்லியிருப்பார்.

முதலமைச்சரே சொல்லும்போது கலெக்டரும் தைரியமாக புகார் கொடுத்திருப்பார். புகார் கொடுத்த அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். அவர் 10 அல்லது 15 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வந்தால்தான் மற்றவர்களுக்கும் புத்தி வரும்.
விஜய்யின் அமைதி ஏன்
இப்போது விஜய்யிடம் இருந்து மவுனம்தான் பதிலாக இருக்கிறது. முதலமைச்சர் அமைதியாக இருக்கும்போது கலெக்டர் எப்படி தைரியமாகப் புகார் கொடுப்பார்? அதையும் மீறிப் புகார் கொடுக்கிறார் என்றால் அது அரசாங்கத்தின் செயல்பாட்டையே கேள்விக்குள்ளாக்கும்.
ஒருவேளை கலெக்டர் நாளைக்கு வெளிப்படையாக வந்து குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்? அமைச்சர் ஒருவர் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்கிறார். இன்னொருவர் வேறு விதமாகப் பேசுகிறார். தலைமைச் செயலாளரும் அமைதியாக இருக்கிறார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவது அரசாங்கத்துக்கு நல்லதல்ல.
சிங்கப்பெண் திட்டம் எதுக்கு
முதலில் உண்மை என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரியவந்தால், கலெக்டரை முறையாகப் புகார் கொடுக்கச் சொல்ல வேண்டும். புகார் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான புகார் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. கலெக்டர் நேரடியாகப் புகார் அளிக்கலாம். அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்று பதவியேற்பு விழாவிலேயே முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். முதல் கையெழுத்தாக சிங்கப்பெண் திட்டத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் ஒரு மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் அந்தத் திட்டத்தால் என்ன பயன்?
கள்ளக்குறிச்சி விவகாரம்
என்னைப் பொறுத்தவரை அந்தச் சிறப்புப் படையை உருவாக்கியதன் நோக்கம் நல்லதுதான். ஆனால் அனுபவமின்மை காரணமாகத்தான் இந்தப் பிரச்சினைகள் வருகின்றன. ஜெயலலிதாவே தனியாக ஒரு படையை உருவாக்கவில்லை. பெண் போலீஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தினார். பெண் போலீஸாரை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, தனியாக ஒரு சிறப்புப் படையை உருவாக்குவது எதற்காக?
இந்த விவகாரத்தில் அரசியல் கணக்குகளை பார்க்கக் கூடாது. எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகின்றன என்ற வாதம் இருந்தாலும், குற்றச்சாட்டுகள் உண்மையா, இல்லையா என்பதற்குத்தான் முதலில் பதில் சொல்ல வேண்டும்.
மற்ற பிரச்சினைகளில் சமரசம் செய்துகொள்ளலாம். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் சமரசம் செய்ய முடியாது. ஒரு எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று நினைத்தால், அந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய அவசியமே இல்லை.
கலெக்டரின் அமைதி
முதலமைச்சர் இப்போதாவது விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அவருக்கும், அவருடைய அரசாங்கத்துக்கும் நல்லது. தொடர்ந்து அமைதியாக இருந்தால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையும், அதன் நெறிமுறைகளும் பாதிக்கப்படும்.
குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், கலெக்டர் ஏன் அமைதியாக இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. கனிமொழி அன்று அறிக்கை வெளியிட்டதுமே, கலெக்டர் முன்வந்து, "இது தவறான செய்தி. என்னைத் தொடர்புபடுத்தி வெளியாகும் தகவலில் உண்மையில்லை" என்று மறுத்திருக்கலாம்.. ஆனால், கலெக்டர் அப்படி செய்யவில்லை. இன்றுவரை எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தேசிய ஊடகங்களும் பேசுகின்றன. ஆனால் கலெக்டர் மட்டும் அமைதியாக இருக்கிறார். அப்படியென்றால, அது உண்மை என்றுதானே அர்த்தம்?
ஐஏஎஸ் அதிகாரிகள்
இன்னொரு விஷயம், அதிகாரிகள் ஏன் இதில் அமைதியாக இருக்கிறார்கள்? ஐஏஎஸ். அதிகாரிகளுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. . தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குக்கூட முதுகெலும்பு இல்லையா? உங்களுக்கு எதற்காக சங்கம் இருக்கிறது? கலைத்துவிடுங்கள். ராஜேஷ் தாஸ் விவகாரத்துக்கு அன்று குரல் எழுப்பியவர்கள், இப்போது ஏன் அமைதியாக உள்ளார்கள்,
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக அதிகாரிகள் பேச முடியாது. ஆனால் ஒருவருடைய கண்ணியத்துக்கு ஆபத்து வரும்போது அவர் பேச வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications
