எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக
சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு முதலமைச்சர் விஜய் அவர்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசிய நிலையில், எடப்பாடி பழனிசாமியை மட்டும் ஏன் சந்திக்கவில்லை என்ற விவாதம் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.. இதுதான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை அவர் நேரில் சந்தித்துப் பேசினார்..

எடப்பாடி பழனிசாமி - விஜய்
ஆனால், எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இது பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்தது. இது அரசியல் முதிர்ச்சியின்மை என்றும் விமர்சகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் தந்துள்ளார். அதில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பு ஏன் சாத்தியமாகவில்லை என்பது குறித்தம் முக்கியத் தகவலை மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
நிர்மல் குமார் விளக்கம்
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார், "முதல்வர் விஜய் பேசியது, யாருக்கு புரிய வேண்டுமோ, அவர்களுக்கு புரிந்து விட்டது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், தோல்வியை தழுவியவர்கள், அதை குறையாக சொல்கின்றனர். கடந்த 9 ஆண்டுகளாக, அமமுக பொதுச்செயலர் தினகரன் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். திடீரென்று பழனிசாமியை முதல்வர் ஆக்குவேன் எனக்கூறி, கூட்டணி அமைத்தார்.
அவருடன் பயணித்த, 50000 பேரை, நடுரோட்டில் தவிக்க விட்டு, தன்னை காப்பாற்றிக் கொள்ள கூட்டணி அமைத்தார். அவர் இனிமேல், அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவது நல்லது.
முதல்வர் விஜய், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க விரும்பினார். அதன்படி ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டது; அரசியல் சூழ்நிலை கருதி, பழனிசாமி தரப்பில் நேரம் ஒதுக்கவில்லை. இதனால், சந்திப்பு நடக்கவில்லை. இதில், வேறு ஏதும் காரணம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
தவெக பக்கம் நகரம் அதிமுக புள்ளிகள்
எனினும், வந்த சமகால அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முதலமைச்சர் விஜய்யைச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாகவே இருவருக்குமான சந்திப்பு தள்ளிப்போனதே தவிர இதில் வேறு எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர், கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொண்டர்களை நடுரோட்டில் தவிக்கவிட்டுவிட்டு, இப்போது தற்காப்புக்காகப் பழனிசாமியுடன் கூட்டணி அமைத்துள்ள தினகரன் அரசியலை விட்டு ஒதுங்குவதே நல்லது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கணிக்க தவறியதா
ஆனால், அதிமுக தற்போது மிகப் பெரிய நெருக்கடியில் உள்ளது.. பல புள்ளிகள் தவெகவை நோக்கி நகர்வதும் அதிகரித்து வருகிறது.. அப்படியானால் தவெகவை முன்கூட்டியே எடப்பாடி பழனிசாமி சரியாக கணிக்கவில்லையோ? என்ற கேள்விகளும் அதிமுகவுக்குள்ளேயே எழுந்துள்ளன.
இன்னும் சொல்லப்போனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கணக்கீடுகளில் ஏற்பட்ட தவறுகளும், அதை நடிகர் விஜய்யின் தவெக தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட விதமுமே தற்போதைய அதிமுகவின் நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் திமுக எதிர்ப்பு வாக்கு வங்கியைத் தக்கவைக்க, விஜய்யை எப்படியாவது தங்களின் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருந்தார்.
தவெக கூட்டணி
ஆனால், விஜய்யின் அரசியல் வீச்சைச் சரியாகக் கணிக்கத் தவறிய அதிமுக தலைமை, சட்டமன்றத்திலும் தேர்தல் களத்திலும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதோடு, தவெக கூட்டணி அமைந்தால் மட்டுமே அதிமுகவால் வெல்ல முடியும் என்ற தோற்றத்தையும் அறியாமல் உருவாக்கிவிட்டது என்றே சொல்லலாம்.
ஆனால் அதிமுகவின் இந்த எதிர்பார்ப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றிய விஜய் தரப்போ, அதிமுகவை நேரடியாக விமர்சிக்காமல் தவிர்த்துவிட்டு, அக்கட்சியின் வாக்கு வங்கியைக் குறிவைத்து மிகத் தெளிவாகக் காய்களை நகர்த்தியது.
இன்னொருபுறம், அதிமுக தொண்டர்களின் மனநிலையை உணர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிம்பங்களை விஜய் கையாண்ட விதம் ரத்தத்தின் ரத்தங்களை தவெகவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களைத் தன்பக்கம் ஈர்த்ததுடன், இப்போது எடப்பாடிக்கு எதிராகக் கலகக் குரல் எழுப்பியுள்ள சி.வி.சண்முகம் அணியினரை விஜய் சந்தித்துப் பேசியிருப்பது அதிமுகவை மேலும் பலவீனமடையச் செய்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அடுத்த பிளான்
ஆரம்பத்திலேயே விஜய்யின் இந்த மறைமுக அரசியல் உத்தியைக் கணித்து, அதற்கு எதிராக "ஒரே எம்.ஜி.ஆர், ஒரே ஜெயலலிதா, ஒரே அதிமுக" என்ற தத்துவத்தை எடப்பாடி பழனிசாமி கூர்மைப்படுத்தியிருந்தால் இந்த வாக்குச் சிதறலைத் தடுத்திருக்க முடியும் என்பதே அரசியல் திறனாய்வாளர்களின் கருத்தாக உள்ளது..
விஜய்யை கோட் சூட் போட்ட எம்.ஜி.ஆர் என்று அதிமுக தொண்டர்கள் முழுமையாக நம்பத் தொடங்குவதற்குள், வீழ்ந்து கிடக்கும் தங்களின் அரசியல் ஆதிக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்திலும் பெரும் தவிப்பிலும் இப்போது அதிமுக தலைமை தள்ளப்பட்டிருக்கிறது... இதை எடப்பாடி பழனிசாமி எப்படி சரி செய்ய போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications