சட்டசபை தேர்தல் வியூகத்தை கையில் எடுக்கும் திமுக.. கூட்டணிக்கு இடபங்கீட்டில் இழுபறி ஏன்?
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் சட்டசபை தேர்தல் பாணியில் செயல்பட திமுக திட்டமிட்டுள்ளது. இதனால்தான் இடபங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேயர் பதவி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவியும் இடம் பெற்றுள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உள்ளாட்சிகளில் ஒரு கட்சியின் செயல்பாடுகள் சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பார்கள். அதனால் இந்த தேர்தலில் போட்டியிட்டு வெல்வதற்கு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

காங்கிரஸ்
அந்த வகையில் திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அது போல் அதிமுக தலைமையில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்டவை கூட்டணி அமைத்துள்ளன. இந்த நிலையில் வேட்பாளர்கள் தேர்வு, இட பங்கீட்டில் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

கூட்டணி கட்சிகள்
திமுகவை பொருத்தமட்டில் இன்றுக்குள் கூட்டணி கட்சிகளுடன் இடபங்கீட்டை முடித்துக் கொண்டு நாளை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இடம் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியை பொருத்தமட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களை திமுக ஒதுக்கும் என தெரிகிறது.

விடுதலைச் சிறுத்தைகள்
அது போல் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களை ஒதுக்கவும் திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சென்னையில் மண்டலத்திற்கு ஒரு இடம் வீதம் 15 இடங்களை ஒதுக்குமாறு காங்கிரஸ் கோருவதாக தெரிகிறது. ஆனால் திமுகவோ 4 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என்பதாக கூறப்படுகிறது.

பெரும்பான்மை பலம்
அது போல் மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்றம், சட்டசபை தேர்தலை போல் கூட்டணி கட்சிகளுக்கு அள்ளி கொடுக்காமல் கிள்ளி கொடுத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தனி பெரும்பான்மை பலத்தை கொண்டிருக்க வேண்டும் என திமுக கருதுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல்
பொதுவாக கூட்டணி கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல்களில் தாராளம் காட்டும் தலைமை கட்சிகள், உள்ளாட்சி தேர்தலில் தாராளம் காட்ட முடியாது. அதிலும் ஆளும் கட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உள்ளாட்சி தேர்தலில் முழுக்க முழுக்க ஒரு ஊராட்சியில், நகராட்சியில், வார்டில், மாநகராட்சியில் செல்வாக்கு இருக்கும் சாதாரண நிர்வாகிகள் போட்டியிட்டு வெல்வதாகும். எனவே கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கிவிட்டு உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு பலம் குறைந்துவிட்டால் அது ஆளும் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும். இதனால்தான் இத்தனை கறார்தன்மையும் இழுபறியும் நிலவுகிறது. இன்று நடைபெறும் ஆலோசனையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications