அச்சம்.. பரிதவிப்பு.. ஓபிஎஸ் வீட்டிற்கு ஓடிய தலைகள்.. 24 மணி நேரத்தில் எவ்வளவு மாறிடுச்சு பாருங்க!
சென்னை: ஓடிடியில் ரிலீசான படத்திற்கு திடீரென தியேட்டரில் கூட்டம் குறைவது போல.. ஓபிஎஸ் வீட்டு வாசலிலும் கூட்டம் சட்டென குறைந்துள்ளது. நேற்று வரை நின்ற பல நம்பர் பிளேட் கார்களை இன்று காணவில்லை. அதிமுக பொதுக்குழு முடிந்த நிலையில் ஓபிஎஸ் தொடர்ந்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். அவர் வீட்டில் என்ன நடக்கிறது?
அதிமுக பொதுக்குழுவில் நேற்று கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆவார் என்று பலரும் யூகித்து இருந்தனர். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் 16 ஏற்கனவே கசிந்த காரணத்தால் இது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இது ஓ பன்னீர்செல்வத்திற்கும் தெரியாமல் இல்லை. பொருளாளர் பதவியில் இருந்தும் தான் நீக்கப்படுவோம் என்பது அவருக்கு தெரிந்தே இருந்தது.

ஆலோசனை
ஆனால் அவர் எதிர்பார்க்காதது என்றால் அது கட்சியில் இருந்தே நீக்கப்பட்டதுதான். அதிமுகவில் தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்படுவோம் என்பதை எதிர்பார்க்கவில்லை. அடையாளமாக தானும் போராடுவேன். நானும் எதற்கும் தயார். எனக்கும் ஆள் சேர்க்க தெரியும் என்பதை நிரூபிக்கவே அவர் நேற்று அதிமுக அலுவலகத்தை கைப்பற்றினார் என்று கூறுகிறார்கள்.

என்ன நடந்தது
இந்த நிலையில்தான் நேற்று அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட பின் ஓபிஎஸ் தனது ஆபிஸிற்கு சென்றுவிட்டு பின்னர் மாலை நேரத்தில் தன் வீட்டிற்கு சென்றார். மாலையில் இருந்து இரவு வரை பல்வேறு நிர்வாகிகளை, ஆதரவாளர்களை, அனுதாபிகளை அவர் சந்தித்தார். அவரை சந்திக்க வந்த பலரும்.. உங்களை நீக்கிவிட்டு கட்சி நடத்த முடியாது அண்ணே. அவங்க பண்ணது தப்பு.

கூட்டம் இல்லை
சட்டம் நம்ம பக்கம்தான் இருக்கிறது என்று அரைமனதோடு ஆறுதல் சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்கள். அதோடு இன்னும் சிலரோ.. எடப்பாடி கூட்டம் என்று கூறி சில வசவுகளையும் சொல்லிவிட்டு கோபமாக விமர்சித்துவிட்டு சென்று இருக்கிறார்கள். ஆனால் நேற்று இரவு வரை இருந்த கூட்டம் இன்று காலை அவர் வீட்டில் இல்லை. கடந்த 1 மாதமாக அதிமுக மோதலால் அவரின் வீடே திருவிழா போல இருந்தது.

ஆறுதல்
இப்போது திருவிழாவிற்கு மறுநாள் பந்தல் கழற்றிய சாலை போல பெரிதாக கூட்டம் இன்றி காணப்படுகிறது. கிட்டத்தட்ட 24 மணி நேரத்தில் பல விஷயங்கள் மாறிவிட்டன. அனைத்தையும் இழந்துவிட்ட பரிதவிப்பில் ஓபிஎஸ் அணி தற்போது இருக்கிறதாம். இந்த நிலையில்தான் நேற்று இரவும் இன்று காலையும் மட்டும் சில முக்கிய தலைகள், நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் அவரின் வீட்டிற்கு சென்றனர். சட்ட ரீதியாக அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் உள்ளனர்.

சட்ட திட்டம்
அதன்படி கோர்ட்டுக்கு செல்வது சரியாகாது. இது பொதுக்குழு விவகாரம். நாம் உடனே தேர்தல் ஆணையம் செல்வோம் என்று முடிவெடுத்து உள்ளனர். இதை தொடர்ந்தே பொதுக்குழுவிற்கு எதிராக நேற்றே ஓ பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தது. அதிமுக விதி மாற்றங்கள் விதிகளை மீறி செய்யப்பட்டுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்டுள்ளது. அதோடு பொதுக்குழு நடத்தப்பட்டதே தவறானது. இதனால் சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் ஓ பன்னீர்செல்வம் முறையிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications