முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாதது ஏன்? நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: தமிழக முதல்வர் விஜய் நேற்று முன் தினம் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமூக வலைத்தள பக்கங்களில் வாழ்த்து எதுவும் தெரிவிக்காதது விவாதப்பொருளானது. இந்த சூழலில் தனது பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்திடம் இது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.
தமிழக முதல்வர் விஜய் கடந்த ஜூன் 22 ஆம் தேதி தனது 52 வது பிறந்த நாளை கொண்டாடினார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வந்த முதல் பிறந்த நாள் என்பதால், விஜய்யின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை
முதல்வர் விஜய்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான கமல்ஹாசன் உள்ளிட்டோரும் விஜய் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியிருந்தனர்.
எனினும், நடிகர் ரஜினிகாந்த், விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி எதுவும் பதிவிடவில்லை. இது சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதப்பொருளானது. இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற தனது பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பினர். முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை என்று சொல்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
ரஜினிகாந்த் கொடுத்த பதில்
இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "அது குறித்து பேசிவிட்டேன்" என்று கூறிவிட்டு சென்றார். முன்னதாக தலைவர் 173 வது படத்தின் டைட்டில் வெளியீடு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், "நம்ம பேசாமால் சும்மா இருந்தால், வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கியா என்று கலாட்டா பண்ணுவார்கள்.. கிண்டல் பண்ணுவார்கள்.. பேச ஆரம்பித்தால், இப்போ பேசு என கூறுவார்கள். மற்றவர்கள் பேசியிருக்க கூடாது என்று சொல்வார்கள்..
ரொம்ப நாள் கழித்து நான் தெரிஞ்சுகிட்டேன். நம்மை பிடிக்காதவர்களுக்கு, நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடிக்கும் என்பதால், நாம் எது செய்தாலும் பிடிக்கும் என நினைப்பதும் முட்டாள் தனம். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று கூறினார். முன்னதாக விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொல்லவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் பெரிதும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த ரஜினி
குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் விஜய் முதல்வர் ஆகியிருக்கிறாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளிக்காமல் கடந்து சென்றார். இது அரசியல் வடடாரத்திலும் பேசுபொருளான நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை வைத்த ரஜினிகாந்த் தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்தார். ரஜினிகாந்த் கூறுகையில், விமான நிலையத்தில் விஜய் பற்றி கேட்ட கேள்விக்கு அவருக்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்றும் விமர்சிக்கிறார்கள்.
தேர்தலில் விஜய் வெற்றி பெற்ற உடனேயே எனது 'எக்ஸ்' தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். சமீபத்தில் பெங்களூர் செல்லும்போது, ஒரு செல்போனை வைத்துக்கொண்டு என்னிடம் ஒருவர் வந்தார். 'விஜய் முதல்வர் ஆகிவிட்டாரே.. என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரைப் பார்த்தால் பத்திரிகையாளர் மாதிரி தெரியவில்லை என்பதால், நான் சிரித்தபடியே கடந்து விட்டேன். உடனே விஜய்க்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று விமர்சிக்கிறார்கள். நான் அரசியலில் இருந்து விலகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
நான் ஏன் பொறாமைப்பட வேண்டும்?
அரசியலில் இல்லாத போது விஜய் மீது நான் ஏன் பொறாமைப்பட வேண்டும்? கமல்ஹாசன் முதல்வர் ஆகியிருந்தால் கூட பொறாமை பட்டு இருப்பேனா என்று தெரியவில்லை. அப்போது கூட எனக்கு பொறாமை வந்து இருக்காது. கிடைப்பது கிடைக்காமல் இருக்காது. கிடைக்காமல் இருக்கிறது கிடைக்காது. விஜய் வெற்றி பெற்றிருப்பது எனக்கு பொறாமை இல்லை. ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான். விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள் எனக் கூறியிருந்தார்.















Click it and Unblock the Notifications