கவனிச்சீங்களா? இவ்வளவு பெரிய முடிவை அறிவிக்க.. எடப்பாடி பழனிசாமி வரவில்லையே.. ஏன்? என்னாச்சு?
சென்னை: அதிமுக பாஜக கூட்டணி முறியும் அறிவிப்பை வெளியிட இன்று எடப்பாடி பழனிசாமி வரவில்லை. கூட்டத்திற்கு வந்தவர்.. செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார். அவரின் இந்த செயல் விவாதங்களை ஏற்படுத்த உள்ளது.
பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக 2024 லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்காது, தனித்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்.

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவை அறிவிக்க எடப்பாடி பழனிசாமி வரவில்லை. அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் அவர்தான் முடிவுகளை எடுப்பார்.
அவர் செய்தியாளர் சந்திப்பில் முடிவுகளை அறிவிக்கவில்லை என்றாலும், அறிக்கை மூலம் முடிவுகளை வெளியிடுவார். வேறு யாராவது வந்து அந்த அறிக்கையை படித்து காட்டுவார்கள். அதேபோல் இந்த முறைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்.. கூட்டணி குறித்து முழு முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது.
அதாவது தன்னிச்சையாக முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். முதலில் இளம் நிர்வாகிகள், அதன்பின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையின் முடிவில் கூட்டணியை முறித்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இது அறிக்கையாக எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. அதன்பின் அதிமுகவின் தலைமை கழக அவை தலைவர் தமிழ் மகன் இந்த அறிவிப்பை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். அதிமுக பாஜக கூட்டணி முறியும் அறிவிப்பை வெளியிட இன்று எடப்பாடி பழனிசாமி வரவில்லை. கூட்டத்திற்கு வந்தவர்.. செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார். அவரின் இந்த செயல் விவாதங்களை ஏற்படுத்த உள்ளது.
ஜெயலலிதா பாணியில்.. அவர் அறிக்கை மட்டும் வெளியிட்டுவிட்டு இதை எல்லாம் அறிவிக்க எனக்கு நேரம் இல்லை என்பது போல கிளம்பி விட்டார்.
அறிக்கை: இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது, என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
அதோடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 - திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது., என்றும் அறிவித்துள்ளனர் .












Click it and Unblock the Notifications