இப்போ வேண்டாம்.. வெயிட்.. காத்திருக்கும் எடப்பாடி.. அதிமுக அலுவலகம் பக்கமே போகாதது ஏன்? பின்னணி
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை அதிமுக அலுவலகத்திற்கு செல்லவில்லை. அவர் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன பின் அதிமுக அலுவலகம் பக்கமே செல்லவில்லை.
அதிமுகவில் பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆன அதே நாள் அதிமுக அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் முன் கடந்த ஜூலை 11ம் தேதி கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சீலுக்கு எதிரான வழக்கில் சென்னைக்கு உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு
அதிமுக அலுவலகத்தை ஆட்களை வைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஓ பன்னீர்செல்வம் மீது உயர் நீதிமன்றம் விமர்சனங்களை வைத்தது. அந்த அலுவலக சாவிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதிமுக அலுவலகத்திற்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்று இதையடுத்து சாவி எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

சீல் அகற்றம்
நேற்று அதிமுக அலுவலக சீல் அகற்றப்பட்டது. எம்பி சிவி சண்முகம் மற்றும் சில நிர்வாகிகள் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர். எடப்பாடி பழனிச்சாமியின் மேனேஜரிடம் இதற்கான சாவி கொடுக்கப்பட்டது. இந்த அலுவலகம் உள்ளே சென்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உள்ளே பல பொருட்களை காணவில்லை என்று புகார் வைத்தனர். ஜெயலலிதாவின் செங்கோல், வெள்ளி வேல் ஆகியவை காணவில்லை என்று எடப்பாடி தரப்பு புகார் வைத்துள்ளது.

ஏன் போகவில்லை
இந்த நிலையில்தான் அதிமுக அலுவலகம் பக்கமே இதுவரை எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் காரணம்.. எடப்பாடி பழனிசாமிக்கு சாவி கொடுக்கப்பட்டாலும், அவர் 1 மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது, என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இப்போது எடப்பாடி பழனிசாமி ஆரவாரமாக அலுவலகம் செல்ல முடியாது.

காரணம்
பொதுச்செயலாளர் ஆன பின் முதல் நாளே கூட்டமே இல்லாமல் அலுவலகம் செல்வதை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது போக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. அதன்படி எடப்பாடி இப்போது போனால் அங்கு ஓ பன்னீர்செல்வம் ஆட்கள் கலவரம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் சட்ட ஒழுங்கை காரணம் காட்டி மீண்டும் அலுவலகம் திறப்பதில் சிக்கல் ஏற்படலாம். எனவே ஒரு மாதம் காத்திருக்க எடப்பாடி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஒரு மாதம்
அவர் 1 மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது, என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் 1 மாதம் கழித்தே எடப்பாடியும் செல்வார் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அடுத்த மாதம் எடப்பாடி வேட்புமனு தாக்கல் செய்வார் என்கிறார்கள். இதற்காக ஆதரவாளர்களுடன் எடப்பாடி ஆரவாரமாக அலுவலகம் செல்வார் என்று கூறப்படுகிறது.

நம்பிக்கை இல்லை
அதோடு அவருக்கு அங்கு உள்ள போலீஸ் தரப்பு மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் கலவரம் நடந்தால் தங்களுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள் என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம். இதனால் இப்போது வேண்டாம். எல்லாம் அடங்கட்டும் என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம். அதுவரை சென்னையில் பெரிதாக இல்லாமல்,. சேலத்தில் சில நாட்கள் தங்கவும், தனது குலதெய்வம் கோவிலில் விருந்து கொடுக்கவும் எடப்பாடி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications