ஐடி ரெய்டு விட்ட மத்திய அரசை எடப்பாடி கண்டிப்பாரா? திமுகவ வம்புக்கு இழுக்கக்கூடாது - ஆர்.எஸ்.பாரதி
சென்னை: திமுகவை குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி, வருமான வரித்துறை சோதனைவிட்ட மத்திய அரசை விமர்சிக்காதது ஏன் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர்.

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என்று சாடிய அவர், அதிமுக தலைமையகத்தை கைப்பற்றியதை கண்டித்தார். ஆளும் திமுக அரசு ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து செயல்படுவதாகவும், சட்டம் ஒழுங்கை காக்க தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "திமுக யாருடைய அழிவிலும் இன்பம் காண்பவர்கள் அல்ல. அவர்களுக்கும் இருக்கும் சண்டைக்கும் திமுகவுக்கும் சம்பந்தம் இல்லை. வருமான வரித்துறை எங்கள் கையில் இல்லை. ஐடி ரெய்டை நடத்தும் மத்திய அரசை கண்டிக்க அவரால் முடியவில்லை. எதற்கெடுத்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் தாக்கப்பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

5 ஸ்டார் ஹோட்டல்
எடப்பாடி பழனிசாமி எப்படி பொதுக்குழுவை கூட்டினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். காலத்தில் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்களா? கடந்த 2,3 நாட்களாக சென்னையில் 5 ஸ்டார் ஹோட்டலில் இடம் கிடைக்கவில்லை. மொத்தமாக எடப்பாடி பழனிசாமியின் நிறுவனம்தான் அதற்கு பணம் செலுத்தி இருக்கிறது. பல கோடி செலவு செய்து இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறார். வீணாக திமுக வம்புக்கு இழுகக்கூடாது." என்றார்












Click it and Unblock the Notifications