இது தான் ஸ்டாலின்.. வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பது ஏன்?
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை 17ம் தேதி சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அங்கு தொடங்கி வைப்பதற்கான காரணத்தை இப்போது பார்ப்போம்.
வங்க கடலில் உருவான மிக்ஜாம்' புயல் ஆந்திராவில் கடந்த டிசம்பர் 5-ந்தேதி கரையை கடந்தது. புயல் சென்னையை கடந்து செல்ல 36 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் தொடர்ந்து அதிகனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4, 5 ஆகிய தேதிகளில் மிக அதிகனமழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு விடாமல் 36 மணி நேரம் மழை கொட்டியது.

ஏற்கனவே நவம்பரில் பெய்த மழை காரணமாக அனைத்து ஏரிகளும் நிறைந்துவிட்ட நிலையில், புயல் காரணமாக கொட்டித்தீர்த்த மழையால் சென்னை வெள்ளக்காடானது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால் 4 மாவட்ட மக்களும் பெரும் துயரத்தை சந்தித்தார்கள்.
மழை ஓய்ந்த பின்னர், வெள்ள பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் , உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கவும், வெள்ளம் வடியவைக்கும் பணிகளையும் செய்ய உத்தரவிட்டார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேரடியாக பல்வேறு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொண்டார்கள்.
இது ஒருபுறம் எனில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தீவிரமாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணியாற்றினார்கள். காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தை பொருட்படுத்தாமல் பணியாற்றினார். மின்வாரிய ஊழியர்கள், தூய்மை பணியாளர்களின் அயராத பணியால் சென்னை வேகமாக வெள்ளத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள், வருமான வரி செலுத்துவோர்கள், சர்க்கரை விரும்ப ரேஷன் அட்டைதாரர்கள் மழை வெள்ள பாதிப்பு விவரங்களுடன், வங்கி கணக்கு எண் விவரங்களை தங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆய்வுக்கு பின்னர் அவர்கள் வங்கி கணக்கில் வெள்ள நிவாரணத்தொகை செலுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை பெற தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அந்த பட்டியல் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியும் தொடங்கி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அச்சிடப்பட்டுள்ள டோக்கனில் ரேஷன் கடையின் பெயர், அட்டைதாரர் பெயர், அட்டை எண் ஆகிய விவரங்களுடன், எந்த தேதியில், எந்த நேரத்தில் நிவாரண தொகை வழங்கப்படும் என்ற விவரங்கள் இடம் பெற்று இருக்கிறது.
இந்த டோக்கன் தரும் பணிகள் நடந்து வரும் நிலையில் து ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணத்தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்க உள்ளார். வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் முதல்வர் ஸ்டாலின் நிவாரணதொகை வழங்கும் பணியினை தொடங்கி வைக்கிறார். வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரை தேர்ந்தெடுக்க காரணம், இந்த முறை வேளச்சேரி தான் வெள்ளதால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.
வேளச்சேரி பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் பகுதிகள் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டன. வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரை பொறுத்தவரை, அது வேளச்சேரி ஏரியின் தெற்கு பகுதியை ஒட்டி உள்ளது. வேளச்சேரி ஏரி நிறைந்த பின்னர் அந்த பகுதிகளில் தான் பாதிப்பு கடுமையாக இருந்தது. மக்கள் மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் அதுவும் ஒன்று. எனவே தான் வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் வெள்ள நிவாரண தொகையை நேரடியாக வழங்கும் நிகழ்ச்சியினை முதல்வர் அங்கு தொடங்கி வைப்பதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications