தாமரையில் நிற்பது ஏன்? தனிச் சின்னம் கேட்காதது ஏன்? பாரிவேந்தர் விளக்கம்!
சென்னை: பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர், தாமரை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தேர்தல் தருணத்தை முன்வைத்துப் பல விசயங்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார். இதுவரை அவர் பெரிய அளவில் ஊடகங்களைச் சந்தித்து எது குறித்தும் விளக்கங்கள் அளித்ததில்லை. அதேபோல் நேர்காணல்கள் அளித்ததில்லை.

ஆனால், இது நாடாளுமன்றத் தேர்தல் காலம் என்பதால் பல ஊடகங்களில் அவரது நேர்காணல்கள் வெளியாகி வருகின்றன. அப்படியான பேட்டி ஒன்றில் தனிச் சின்னத்தில் போட்டியிடாமல் பாஜகவின் தாமரை சின்னத்தில் நிற்பது ஏன் என்பதற்காக விளக்கத்தை அளித்துள்ளார்.
இது தொடர்பாக பாரிவேந்தர் பேசுகையில்,"பெரம்பலூர் என்பது என் தொகுதி. நான் சேலத்துக்காரனாக இருக்கலாம். ஆனால், நான் படித்தது திருச்சியில். அதன்பின்னர் பெரம்பலூரில் எனது மருத்துவ நிறுவனம் இயங்கி வருகிறது. அதற்காகப் பல ஆண்டுகளாக இங்கேதான் இருக்கிறேன்.
என் சொந்த மாவட்டத்தைவிடப் பெரம்பலூர் மக்களுக்கு அதிகமாக உதவிகளைச் செய்திருக்கிறேன். என் நிறுவனங்கள் மூலம் பல நலத்திட்டங்களைச் செய்துள்ளேன். செய்து கொண்டும் இருக்கிறேன்.
ஆகவே பெரம்பலூர் தொகுதியைக் கூட்டணியில் கேட்டுப் பெறுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கேட்டவுடன் பெரம்பலூர் தொகுதியில் நிற்கச் சொல்லிவிட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
அவரிடம், இந்த முறை பாஜக கூட்டணியில் 3 தொகுதிகள் கேட்டிருக்கலாமே? என்று ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு அவர், "முன்பு வேண்டுமானால் அது சாத்தியம். இப்போது உள்ள பாஜகவில் அது சாத்தியமில்லை. பாஜக தமிழ்நாட்டில் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. நான் பாஜகவில் இல்லை. பாஜகவுடன் தோழமை உள்ள ஒரு கட்சி. அதற்கான சில வரையறைகள் உள்ளன. ஆகவே ஒரு தொகுதிதான் கேட்டுப் பெற முடிந்தது.

ஒருவேளை நாங்கள் 2 தொகுதிகள் ஒதுக்கச் சொல்லி அழுத்தம் தந்திருந்தால், கிடைத்திருக்கலாம். இந்த முறை ஒன்றே போதும் என நாங்கள் முடிவு செய்ததால், அதற்கு மேல் சீட் கேட்கவில்லை.
நாங்கள் ஆரம்பத்தில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளைக் கேட்டோம். அதை ஒரு கட்டத்தில் பாஜகவிடம் கேட்டோம். ஆனால், அவர்களுக்கு நிறையப் பேருக்குச் சீட்டு ஒதுக்க வேண்டிய தேவை இருந்தது. அதைப் புரிந்துகொண்டு அழுத்தம் தராமல் விட்டுவிட்டோம்.
திமுகவுடன் நேரடியாக எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் தொடர்ந்து மத்திய அரசை எதிர்த்துக் கொண்டே இருந்தார்கள். அதில் தீவிரம் காட்டினார்கள்.

அந்தப் போக்கு எங்கள் கொள்கைக்கு எதிராக இருந்தது. மத்திய அரசுக்கு ஒத்துழைக்காமல் திமுக இருந்ததே அது ஒருவகையான எதிர்ப்புதான். அது ஒரு வகையான எதிர் புரட்சி.
அவர்கள் மத்திய அரசிடம் அனுசரணையாக்க நடந்து கொண்டிருந்தால், பல திட்டங்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.
சிஏஏ சட்டத்தைக் கொண்டுவந்தது, நீட் பிரச்சினையைக் கையாண்டவிதம் ஆகியவற்றில் திமுக சரியாக நடந்துகொள்ளவில்லை. சிஏஏ சட்டத்தால் எந்த இஸ்லாமியருக்கும் பாதகம் இல்லை. அதை அமித்ஷா விரிவாக விளக்கினார்.
ஆனால், அதை திமுக ஏற்கவில்லை. ஏதோ ஒரு நோக்கத்துடன் மத்திய அரசை அவர்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தார்கள். நான் ஒரு தேசியவாதி. என் கட்சிக்கு இந்தியா முழுமைக்குத் தழுவியே பெயர் வைத்திருக்கிறேன். அதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
திமுகவினர் எதற்கெடுத்தாலும் மத்திய அரசு நிதி தரவில்லை என்று ஒரு புகார் சொல்கிறார்கள். மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்காக நிதிக்குழு உள்ளது. அதில் தமிழ்நாட்டு அமைச்சர்களும் உள்ளனர்.
நிதி ஒதுக்கும்போது அதில் பாரபட்சம் இருந்தால், அங்கேயே கேட்கலாம். முறையிடலாம். ஆனால், அங்கே அமைதியாக இருந்துவிட்டு, வெளியே சத்தம் போடுவதால் என்ன பலன்?
2014இல் ஐஜேகே தாமரை சின்னத்தில்தான் நின்றது. 2019 நாங்கள் பாஜக கூட்டணி இல்லை. திமுகவுடன் நின்றபோதும் உதயசூரியனில் தான் நின்றோம். அதன்பின்னர் இப்போது பாஜக கூட்டணி என வரும்போது அதிக பரீட்சயமான சின்னம் தாமரை.

நான் சின்னம் வாங்கி, அதை மக்களிடம் கொண்டு செல்ல காலம் தேவை. தேர்தல் குறுகிய இடைவெளியில் அறிவிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இன்னும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவில்லை. சின்னம் பெறுவதற்குக் காலதாமதம் ஏற்படும். அதனால் எங்களின் வெற்றி வாய்ப்பும் பாதிக்கப்படலாம்.
அதைவிட, பாஜகவின் கொள்கையும் ஐஜேகே கொள்கையும் ஒன்றுதான். பெரிய வித்தியாசங்கள் இல்லை. எங்கள் கட்சி இன்னும் வளர்ச்சி பெற்ற பின்னர் கட்டாயம் தனிச் சின்னத்தில் போட்டியிடும் முடிவை எடுப்போம். அதுவரை கட்சியை வளர்க்க வேண்டும் என்பது பிரதானம். அதற்காகச் சிலவற்றை விட்டுக் கொடுத்தே செல்ல வேண்டும்" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications