எடப்பாடி கேட்ட கேள்வி.. வெத்துவேட்டா?.. 'கிரிப்டோ கரன்சி' வரை போனீங்களே.. எகிறிய தங்கம் தென்னரசு
எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்
சென்னை: பட்ஜெட் வெத்துவேட்டாக இருக்கிறது என்று கூறி திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு நச் பதிலை தந்துள்ளார்.
நேற்றைய சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் முழுமைக்கு முன்னாடியே, அதிமுக மொத்த பேரும் வெளிநடப்பு செய்துவிட்டனர்.. வழக்கம்போல், சட்டசபை நுழைவுவாயிலில் நின்று கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் பற்றி சொல்லும்போது, "பட்ஜெட் வெத்துவேட்டாக இருக்கு.. திமுக தேர்தல் அறிக்கையில் எதையுமே நிறைவேற்றவில்லை... கடந்த ஆண்டு பெட்ரோல் மட்டும் 3 ரூபாய் குறைத்தனர்..

வாடகைதாரர்கள்
ஆனால் டீசலுக்கு குறைக்கவில்லை... திமுக அரசின் பட்ஜெட் வார்த்தை ஜால தோரணங்களால் அமைக்கப்பட்ட வாய்பந்தல்... இதனை வாய் வாடகைதாரர்கள் வேண்டுமானால் தங்கள் ஆதாயத்திற்காக பாராட்டலாம்... மக்கள் நலனில் உண்மையில் அக்கறை கொண்ட யாராலும் இந்த மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கையை வரவேற்க முடியாது. இந்த 10 மாத கால ஆட்சியில் எந்த திட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளார்கள்? எங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தை, முடிவுற்ற பணிகளைத்தான் முதல்வர் திறந்து வைத்து வருகிறார்...

எடப்பாடி பழனிசாமி
உள்ளாட்சி தேர்தலில் வேண்டும் என்றே திட்டமிட்டு, அதிமுக எங்கெல்லாம் அதிகம் வெற்றிபெற்றுள்ளதோ அங்கு எல்லாம் தலைவர் தேர்தலையும், துணைத்தலைவர் தேர்தலையும் நடத்தாமல் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தள்ளிவைத்துள்ளார்கள். நேரடியாக அதிமுகவை சந்திக்க திராணியற்ற கட்சி திமுக.. எதிர்க்கட்சியில் உள்ள நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதை எல்லாம் விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான பணியை செய்ய வேண்டும்... அப்படி செய்தால்தான் அடுத்தது நீங்கள் (திமுக) எதிர்க்கட்சியாக உட்கார முடியும்" என்றார்.

தங்கம் தென்னரசு
எடப்பாடியின் இந்த குற்றச்சாட்டுக்கு திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்..உள்ளாட்சி தேர்தலில், தன் கட்சி அடைந்த படுதோல்வியை மறைப்பதற்காக, தன்னுடைய அங்கலாய்ப்புகளை, பழனிசாமி கொட்டி தீர்த்துள்ளார்.. ஜனநாயக ரீதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், அதிமுகவை மக்கள் முழுமையாக நிராகரித்து உள்ளனர் என்பது நிரூபணமாகிவிட்டது.. இந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல், திமுக பெற்ற வெற்றி, முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் என்பதை ஏற்க முடியாமல், மனம் புழுங்கி முறைகேடான வகையில் பெற்ற வெற்றி என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முனைகிறார்.

கிரிப்டோ கரன்சி
அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும் சொல்கிறார்.. அரசு யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை. உப்பை தின்றவர்கள்தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். வேலுமணியாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் சரி, வேறு மணியை நம்பாமல், 'கிரிப்டோ கரன்சி' வரை போயிருக்கின்றனர்.. இது பொது மக்களிடம் அம்பலப்பட்டு இருப்பதை, பொய் வழக்கு போடுவதாக சொல்கின்றனர்" என்றார்.












Click it and Unblock the Notifications