கிடுகிடுவென உயரும் தங்கம் விலை.. பின்னணியில் 6 மேஜர் காரணங்கள்! இனி எப்போது குறையும் தெரியுமா?
சென்னை: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.160 அதிகரித்து ரூ.64,600க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.8,075க்கு விற்பனையாகிறது. இப்படி நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வருவதற்கு 6 முக்கிய காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் என்னென்ன? இனி தங்கம் விலை எப்போது குறையும் என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு:
தங்கம் விலை என்பது தற்போது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை என்பது உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.8,055-க்கும், ஒரு சவரன் ரூ.64,440-க்கும் விற்பனையானது.

இதையடுத்து இன்றும் தங்கம் விலை என்பது அதிகரித்தது. இன்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,075-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் விற்பனையாகிறது.
இந்த பிப்ரவரி மாதத்தை எடுத்து கொண்டால் கடந்த 25 நாட்களில் சில நாட்களில் மட்டுமே தங்கம் விலை என்பது சரிந்தது. மற்றபடி பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை என்பது உயர்ந்து கொண்டே தான் சென்றன. தொடர்ந்து தங்கம் விலை எகிறி வருவதால் நகை பிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர். ஏழை, எளிய மக்கள் நகை வாங்குவதற்கே யோசிக்கும் நிலையில் உள்ளனர். இப்படியான சூழலில் தான் தங்கம் விலை தொடர்ந்து உயர்வதன் பின்னணியில் 6 முக்கிய காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
முதல் காரணம்
அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு வரி விதித்துள்ளார். அதேபோல் இந்தியாவுக்கும் வரி விதிப்பதாக கூறியுள்ளார். அமெரிக்கா சார்பில் பல்வேறு நாடுகளுக்க வழங்கப்பட்ட நிதி உதவியை நிறுத்தி உள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் மீதான நிலையற்ற தன்மையை உருவாக்கி வருகின்றன. இதனால் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்வதால் விலை என்பது உயர்ந்து கொண்டே செல்கிறது.
2வது காரணம்
நாடுகளின் கரன்சி மதிப்பு என்பது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் பல நாடுகளும் பிரச்சனைகளை சந்திக்கும். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு பலன் அளிக்கும். உலகம் முழுவதும் தங்கத்தின் மீதான கடனுக்கான வட்டி என்பது குறைவாக உள்ளது. அதோடு தங்கத்தை வைத்து எப்போது வேண்டுமானாலும் பணம் பெறலாம் என்பதால் தங்கத்தை அதிகமானவர்கள் வாங்கி குவிக்கின்றனர். இது 2வது காரணமாகும்.
3வது காரணம்
அமெரிக்க டாலரை சார்ந்து தான் தற்போது பல நாடுகளும் வர்த்தகம் செய்து வருகின்றன. ஆனால் டாலருக்கு நிகரான பிற நாடுகளின் கரன்சி மதிப்பு சரிந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்க தொடங்கி உள்ளன. இது தங்கத்தின் விலையேற்றத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
4வது காரணம்
4வது காரணம் என்னவென்றால் ஜியோ பொலிட்டிக்கல். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மற்றும் இஸ்ரேல் - காசா இடையேயான மோதல் உள்ளிட்டவை இப்போது நடந்து வருகின்றன. இதுதவிர அமெரிக்கா - ஐரோப்பா இடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. அதேபோல் அமெரிக்கா - இஸ்லாமிய நாடுகள் இடையே பிரச்சனை ஏற்படும் சூழலும் உள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
5வது காரணம்
தங்கத்தின் மீதான முதலீடு என்பது வர்த்தக நிதிக்கு மாற்றை கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மதிப்பு என்பது உடனடியாக குறையாது. அதேவேளையில் காலத்துக்கு ஏற்ப தேவையை பொறுத்து அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது 5 வது காரணமாகும்.
6வது காரணம்
தற்போது பணவீக்கம் என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல் டாலருக்கு நிகரான கரன்சி மதிப்புகள் சரிந்து வருகின்றன. இதனால் பெரும் பணக்காரர்கள் முதல் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கி குவிக்கின்றன. இது 6வது காரணமாகும்.
நிபுணர்கள் சொல்வதென்ன?
இதுபற்றி MOFSL கமாடிட்டி ரிசர்ச் ஆய்வாளர் மானவ் மோடி கூறுகையில், ‛‛அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி திட்டங்கள் என்பது உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பலரும் பாதுகாப்பான முதலீட்டை விரும்புகின்றன. இதற்கான முதல் சாய்ஸாக தங்கம் உள்ளது.கடந்த வாரம் 2 முறை தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டது. அதோடு ரூ.2,950 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பை காட்டுவதை புரிந்து கொள்ள முடியும்‛‛ என்றார்.
இதுபற்றி ரித்திசித்தி புல்லியன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிருத்வி ராஜ் கூறுகையில், ‛‛கணிக்க முடியாத கொள்கை மற்றும் நிலையற்ற தன்மை உள்ளிட்டவற்றால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விரும்பி வாங்குகின்றனர். மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பு தங்கத்தை அதிகரிக்க தொட்ஙகி உள்ளன. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா டாலரை நம்புவதை விட தங்கத்தை நம்புவது தான். இந்த தங்கம் விலை உயர்வுக்கு புவிசார் அரசியல் பதற்றம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள் தான் காரணம்'' என்றார்.
இனி எப்போது குறையும்?
இதன்மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு குறையை கைவிடுவது, நாடுகளுக்கு இடையேயான மோதல் குறைவது, போர் பதற்றங்கள் இன்றி அமைதியான சூழல் நிலவுவது உள்ளிட்ட மாற்றங்கள் உலகளவில் நடந்தால் மட்டுமே தங்கத்தின் விலை என்பது சரியும். இல்லாவிட்டால் தொடர்ந்து தங்கத்தின் விலை என்பது எகிறி கொண்டே தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications