ஒரே பதற்றம்.. குலுங்கிய கோலிவுட்! வரிசையாக குறி வைக்கப்பட்ட தயாரிப்பாளர்கள்! ரெய்டுக்கு என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய சினிமா தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் வீடுகளில் இன்று அடுத்தடுத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
அவர் வீட்டில் இருந்துதான் ரெய்டுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. அவருக்கு சொந்தமாக சென்னையில் அலுவலகங்கள், வீடுகள் உள்ளன.
அதேபோல் அவருக்கு சொந்தமாக மதுரையிலும் அலுவலகம் மற்றும் வீடுகள் உள்ளன. சென்னை மதுரை என்று மொத்தம் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது.
இந்த ரெய்டு காரணமாக மொத்த கோலிவுட்டும் தற்போது பதற்றத்தில் இருக்கிறது.

ரெய்டு
கடந்த முறை 2020ம் ஆண்டில் அன்புசெழியன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அவரின் வீட்டில் இருந்து 77 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு கணக்கில் வராத பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் இவரின் இல்ல திருமண விழாவில் சமீபத்தில் கூட மொத்த திரையுலக பிரபலங்களும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அன்பு செழியன்
இந்த நிலையில்தான் 2 வருடங்களில் மீண்டும் அன்பு செழியன் வீடு மற்றும் அலுவலகங்கள் வருமான வரித்துறை மூலம் குறி வைக்கப்பட்டு உள்ளது. இவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். பெரும்பாலான தயாரிப்பாளர் இவரிடம் கடன் வாங்கி உள்ளனர். சினிமா உலகில் இவரிடம் கடன் வாங்காத ஆட்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு பலர் இவரிடம் கடன் வாங்கி உள்ளனர், இவர் வீட்டில் நடக்கும் ரெய்டால் கோலிவுட்டோ ஆடிப்போய்தான் இருக்கிறது.

யார்?
அங்கு தொடங்கிய ரெய்டு தற்போது மற்ற பைனான்சியர், தயாரிப்பாளர்களிடம் சென்று உள்ளது. கலைப்புலி எஸ் தாணு வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. எஸ் தாணு V Creations மற்றும் Kalaipuli Films International ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் கர்ணன். அசுரன் உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

தாணு
அதேபோல் Studio Green தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவின் உறவினருமான எஸ். ஆர் பிரபுவின் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. சமீபத்தில் சுல்தான், கைதி படத்தை இவர்கள்தான் வெளியிட்டனர். இந்த நிலையில்தான் அங்கும் ரெய்டு நடந்து வருகிறது. இந்த ரெய்டு காரணமாக மொத்த கோலிவுட்டும் தற்போது பதற்றத்தில் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் பலர் பதற்றத்தில் இருப்பதாகவும். தங்கள் வருமான ஆவணங்களை சரி பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

என்ன தொடர்பு
திடீரென கோலிவுட் இப்படி குறி வைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன் 2010ல்தான் இப்படி தமிழ் சினிமா உலக நட்சத்திரங்கள், தயாரிப்பாளர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. அதன்பின் இப்போதுதான் மீண்டும் நடத்தப்படுகிறது. பைனான்சியர் அன்பு செழியன் பலருக்கு பைனான்ஸ் செய்துள்ளார். அவர் வீட்டில் ரெய்டு செய்து அங்கு கிடைத்த இந்த ரெய்டு நடக்கிறதா அல்லது பொதுவாக தயாரிப்பாளர்கள் குறி வைக்கப்பட்டு உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications