ஹரியானா வெற்றி இருக்கட்டும்.. அடுத்த 2 மாதம் மோடிக்கு ரொம்ப முக்கியம்.. ஏன் தெரியுமா?
சென்னை: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி முகமும், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலிலும் தோல்வியும் அடைந்து உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப் பேரவையின் 90 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 3 கட்டங்களாக 2024 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தது. வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கே காங்கிரஸ்-தேசிய மாநாட்டு (NC) கூட்டணி 42 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஹரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காலை முதல் முன்னிலை வகித்த காங்கிரஸ் பின்னடைவை சந்தித்த நிலையில் பாஜக முன்னிலையை பெற்று உள்ளது. அங்கே தேர்தல் முடிவுகள் மாறி மாறி வருகின்றன. ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கே மெஜாரிட்டி பெற 45 இடங்கள் தேவை. இந்த நிலையில் பாஜக 47 இடங்களில் முன்னிலை பெற்று கிட்டத்தட்ட அங்கே ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

மோடிக்கு காத்திருக்கும் சவால்: ஹரியானா தேர்தலில் வென்றாலும் கூட .. கேம் ஓவர் அல்லது கேம் சேஞ்சர் என்று சொல்லும் அளவிற்கு முக்கியமான சவால் ஒன்று மோடிக்கு வந்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டி பெற முடியாமல் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது ஹரியானா தேர்தலில் கஷ்டப்பட்டு அந்த கட்சி வென்றுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இப்போது சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உதவியுடன் பாஜக ஆட்சியே நடக்கிறது. மிகப்பெரிய அளவில் வலுவாக இருந்த பாஜக மெஜாரிட்டி கூட பெற முடியாமல் மைனாரிட்டி ஆட்சியை செய்து வருகிறது.
மகாராஷ்டிரா: இப்படிப்பட்ட நிலையில்தான் அடுத்த மாதம் நடக்க உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பாஜகவிற்கு பெரிய சவாலாக இருக்கும். நவம்பரில் தேர்தல் நடக்கும் நிலையில் டிசம்பரில் தேர்தல் முடிவுகள் வெளியே வரலாம்.
இப்போது ஹரியானாவில் வெற்றியும், ஜம்மு காஷ்மீரில் தோல்வியும் அடைந்தாலும் கூட மோடிக்கு அது சிக்கலை ஏற்படுத்தாது. அவருக்கு லேசான சரிவை ஏற்படுத்தும் தவிர மொத்தமாக அவரை பலவீனப்படுத்தாது. மக்களவைத் தேர்தல் முடிவுகளால் அவர் ஏற்கனவே பலவீனமடைந்திருந்தாலும் ஹரியானா வெற்றி, ஜம்மு காஷ்மீரில் தோல்வி மோடியை பெரிதாக பாதிக்காது. ஏனென்றால் 2 மாநிலங்களில் ஒன்றில் பாஜக வென்றுவிட்டது. ஜம்மு காஷ்மீர் தோல்வியால் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படும். அது பெரிதாக அவரை பாதிக்கக்காது. ஆனால் அடுத்த மாதம் நடக்க உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பாஜகவிற்கு பெரிய சவாலாக இருக்கும்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் தேர்தல்கள் நடக்க உள்ளன. குறிப்பாக மகாராஷ்டிராவில் பாஜக தோல்வி அடைந்தால்.. அது மோடி மேஜிக்கின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாஜகவிற்குள் மோடிக்கு எதிராக குரல்கள் நிச்சயம் கேட்கத் தொடங்கும். மோடிக்கு எதிராக கட்சிக்குள் புதிய தலைகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. மோடியின் அரசியல் மூலதனத்தைக் காப்பாற்ற பாஜகவிற்கு மகாராஷ்டிராவின் வெற்றி மிக மிக முக்கியமான தேவையாகும்.. அப்படிப்பட்ட மகாராஷ்டிராவில் பாஜக என்ன செய்யும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications