மீடியாவை பார்த்தாலே.. ஜன்னலை மூடி! திரும்பி சென்று யூ டர்ன் போடும் விஜய்! பின்னால் உள்ள 10 காரணங்கள்
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தனது மாநில சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று திருச்சியில் இருந்தார். ஆனால், வழக்கம் போல் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார். மக்களின் பிரதிநிதியாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு தலைவருக்கு, இந்த மௌனம் ஒரு பலவீனமாகக் கருதப்படுகிறது.
நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு இரண்டு முறை கிடைத்தது. முதல் முறை அவர் செய்தியாளர்களை பார்த்ததும் நடந்த வழியே திரும்பி போனார், இன்னொரு முறை அவரின் கேரவன் அருகே மீடியா மைக் வந்ததும் ஜன்னலை மூடி, அமைதியானார்.

செய்தியாளர் சந்திப்பைத் தவிர்ப்பது ஏன் ஒரு அரசியல் தலைவருக்குப் பொருத்தமற்றது. அதிலும் மாற்று அரசியல் பேசும் விஜய், மக்களிடம் சென்றடைய வேண்டிய நேரத்தில் இப்படி பேசாமல் இருப்பது விமர்சனங்களை சந்திக்கிறது. மூத்த தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி, சீமான் கூட செய்தியாளர்களை சந்திக்கின்றனர். விஜயின் இந்த செயலுக்கு பின் 10 முக்கிய காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது ஏன்?
துணிச்சல் இல்லாமை: தலைவர்கள் சவாலான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். செய்தியாளர்களைத் தவிர்ப்பதன் மூலம், விஜய தீவிர அரசியலில் இருந்து விலகிச் செல்வது போல் தோன்றுகிறது. அதாவது துணிச்சலாக செய்தியாளர்களை சந்திப்போம்.. பொறுப்பாக பேசுவோம் என்று நினைக்கவில்லை.
சர்ச்சைகளுக்கு அஞ்சுவது: ஒரு உண்மையான தலைவர் சர்ச்சைகளை நேரடியாக எதிர்கொள்வார். விஜய்யின் மௌனம், அவர் சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாம் ஏதாவது பேசி சர்ச்சையாகிவிடுமோ என்று நினைக்கிறாரோ என்று தோன்றுகிறது.
ஊடகங்களுக்கு அவமதிப்பு: செய்தியாளர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். அவர்களைச் சந்திக்காதது, ஜனநாயகத்தில் முக்கியப் பங்காற்றும் பத்திரிகையாளர்களை விஜய் அவமதிப்பதாகும்.
தெளிவான பதில்கள் இல்லை: மக்கள் அவரது அரசியல் திட்டங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், செய்தியாளர்களைத் தவிர்ப்பதன் மூலம், அவர் நேரடியான பதில்களை அளிக்க மறுக்கிறார். இதுவரை அவர் பேசி மக்கள் கேட்டது எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டது.. அதுவும் கூட எப்படி பேச வேண்டும் என்று பயிற்சி கொடுக்கப்பட்டது.
வெளிப்படைத்தன்மை இல்லை: விஜய் கவனமாகத் திட்டமிடப்பட்ட உரைகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்; நேரடி கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. உதாரணமாக.. இப்போது அவரிடம் முல்லை பெரியாறு பற்றி கேட்டால்.. அவர் கேரளாவை எதிர்க்கும் விதமாக பேசினால்.. அவரின் மார்கெட்டிற்கு சிக்கல் ஏற்படும். அதை விஜய் தீவிரமாக தவிர்க்கிறார்.
அரசியலுக்குத் தயாராக இல்லை: சாதாரண ஊடகச் சந்திப்புகளையே அவரால் கையாள முடியாவிட்டால், அரசியலில் வரும் பெரிய சவால்களை அவர் எவ்வாறு சமாளிப்பார்? என்ற கேள்வியும் எழுகிறது.
நம்பிக்கை இல்லை: அவரின் ஆதரவாளர்கள் கூட விஜயின் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறார்கள். செய்தியாளர்களைத் தவிர்ப்பதன் மூலம், வாக்காளர்கள் மற்றும் ஊடகங்களின் நம்பிக்கையை விஜய் இழக்கும் சூழல் ஏற்படுகிறது
சந்தேகம் உருவாக்குதல்: அவரது மௌனம் யூகங்களுக்கு வழிவகுக்கிறது. அவரின் நிலைப்பாடுகள் என்ன என்று தெரியாமல் தொண்டர்களே குழம்பும் நிலை ஏற்படுகிறது.
தொழில்முறை அணுகுமுறை இன்மை: ஒவ்வொரு தீவிர அரசியல்வாதியும் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பார்கள். மூத்த தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி, சீமான் கூட செய்தியாளர்களை சந்திக்கின்றனர். விஜய்யின் இந்த அணுகுமுறை கவனக்குறைவாகவும் அரசியல் அறிவு அற்றதாகவும் தோன்றுகிறது.
தலைமை கேள்விக்குறி: தலைமை என்பது மக்களை, விமர்சகர்களை, மற்றும் ஊடகங்களை எதிர்கொள்வதாகும். செய்தியாளர் சந்திப்பைத் தவிர்ப்பதன் மூலம், விஜய் ஒரு தீவிர அரசியல் தலைவர் என்ற தன் பிம்பத்தைச் இன்னும் உருவாக்காமல் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications