தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்?
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன், தொகுதிகளை தேர்வு செய்வதிலும், தேர்வு செய்யப்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்வதிலும் தனக்கேற்பட்ட வலிகளை சமீபத்தில் வெளிப்படுத்தினார். அதே போல எம். பி. யாக இருக்கும் திருமா, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் எடுத்துள்ள திடீர் முடிவுக்கும் இது வரை வெளிவராத சில பின்னணிகள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் சொல்கின்றன.
அதாவது, கடந்த 2021- தேர்தலில் 6 தொகுதிகளைப் பெற்ற விசிக, 4 இடங்களை ஜெயித்தது. அதன்படி, சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷானவாஸ், பனையூர் பாபு ஆகியோர் எம்.எல்.ஏ. ஆனார்கள். இதில், சிந்தனைச் செல்வனை தவிர, மற்ற மூவருக்கும் இந்த முறை சீட் தரவில்லை திருமா. இத்தனைக்கும் திமுகவிடமிருந்து கூடுதலாக 2 தொகுதிகளை பெற்றும் கூட அவர்களுக்கு சான்ஸ் தரவில்லை. இதனால், தங்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை என்று சீட் மறுக்கப்பட்ட அந்த மூவரும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனை அறிந்த திருமா, தொகுதிகளையும் வேட்பாளர்களையும் நான் எப்படி தேர்வு செய்தேன் என்பது குறித்து மனவலியை வெளிப்படுத்தினார்.

வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.க்களில் சிந்தனைச் செல்வனை தவிர மற்ற மூவரும் திமுகவின் ஆதரவாளர்களாக மாறி விட்டனர். மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பளித்து வெற்றி பெற்றால், தனது கன்ட்ரோலில் அவர்கள் இருக்க மாட்டார்கள் என கருதுகிறார். அதற்கேற்ப நிறைய தகவல்கள் அவருக்கு கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து, 'கட்சி தான் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், யாரும் ஆக்கிரமித்து விடக்கூடாது, வெளிப்புற அரசியலால் கட்சி உடைந்து விடக்கூடாது ' என்று நிறைய யோசித்துள்ளார் திருமா. சிலரின் ஆலோசனையும் பெற்றுள்ளார். டெல்லி அரசியலை தவிர்த்து, மாநில அரசியலுக்குத் திரும்பினால் தான் கட்சியை நேரடியாக கட்டுப்படுத்த முடியும் என்றும், தன்னை மீறி நடக்கும் 'அரசியலை' எதிர்கொண்டு அதை தடுக்க முடியும் என்றும், அதற்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனால் தான் சரியாகும் என பல கட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்தார். இந்த பின்னணியில்தான் சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
இதில்லாமல் இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது, நடிகர் விஜய் பிரிக்கும் வாக்குகளில் மிக கணிசமானவை பட்டியல் இனத்தின் வாக்குகள் தான். பட்டியலின இளைஞர்கள் விசிகவில் தான் அதிகம். அவர்கள் பெரும்பாலும் விஜய் ரசிகர்கள். அவர்களின் ஆதரவு, இந்த முறை விஜய்க்குத்தான் கிடைக்கிறது. அதனடிப்படையில், விசிக எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டாலும் வெற்றிக்கு சாத்தியமில்லை . அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தால், அரசியலில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இதை திருமாவுக்கு நேரடியாகவே விவரிக்கப்பட்டுள்ளது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திருமாவளவன், விசிகவின் வாக்கு வாங்கியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை உணர்ந்திருக்கிறார்.
வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளவும், தற்போது திமுகவிடம் பெற்றுள்ள 8 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டியும் தான், சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் திருமா. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், பட்டியலினத்தின் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என நம்புகிறார். ஆக, கட்சியின் எதிர்காலத்தையும், பட்டியல் இனத்தின் வாக்குகள் நடிகர் விஜய்யின் பின்னால் செல்வதை தடுக்கவும் தான் எம். எல். ஏ. வாக நினைக்கிறார் திருமாவளவன்" என்கிறது உளவுத்துறை வட்டாரம்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications