விஜயகாந்தை ‘கேப்டன்’ என்று அழைப்பது ஏன்? 100வது படம் நிகழ்த்திய அதிசயத்தின் பின்னணி
சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்த் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார். அதன் பின்னணியில் அவர் நடித்த 100வது படமான கேப்டன் பிரபாகரன் தான் காரணம் என்பது பலருக்கும் தெரியும். அதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
80களில் இருந்த டாப் நடிகர்களாக உள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கே 100வது படம் சரியாக போகவில்லை. ரஜினிகாந்தின் 100 வது படம் ஸ்ரீ ராகவேந்திரர் . 1985ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வெளியானது. இந்த படம் சரியாக போகவில்லை..

இதபோல் கமல்ஹாசனின் 100வது படமான ராஜ பார்வை, இந்த படம் 1981ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் ராஜபார்வை பெரிய ஹிட் அடிக்கவில்லை.. ஆனால் விஜயகாந்திற்கு 100வது படம் கேப்டன் பிரபாகரன் இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இன்றைக்கு விஜயகாந்தை, கேப்டன் கேப்டன் என்று எல்லோரும் அழைக்க இந்த படம் தான் விதை போட்டது. இயக்குனர் ஆர்.கே.செல்வமணி புலன் விசாரணை எடுத்த கையோடு அடுத்ததாக எடுத்த படம் தான் கேப்டன் பிரபாகரன், வீரப்பனை பற்றி கதையான இந்த படம் வீரப்பன் பற்றிய அரசியலை அன்றே பேசியிருக்கும். இதில் விஜயகாந்தின் நடிப்பு வேறலெவலில் இருக்கும்.. கேப்டன் பிரபாகரன் படத்தின் சண்டை காட்சிகள் இன்று வரை பேசப்படுகிறது. 1991ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியான கேப்டன் பிரபாகரன் படம் 200 நாட்களை கடந்து ஓடியது. ஐஎஃப்எஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடித்திருப்பார்.
விஜயகாந்திற்கான இன்ட்ரோ சீனே தரமாக இருக்கும். தங்கையை கெடுக்க முயன்ற போலீஸ்காரரை போலீஸ் ஸ்டேசனிலேயே புகுந்து வெளுத்துவிடுவார். அதற்காக நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகள் அப்ளாஸ் அள்ளும்.. மன்சூர் அலிகான் தான் இதில் வீரபத்திரனாக அதாவது வீரப்பனாக நடித்திருப்பார்.. சாரி.. வாழ்ந்திருப்பார். காடுகளை கேமராக்களில் இப்படியும் காட்ட முடியுமா என்று கேப்டன் பிரபாகரன் பட காட்சிகளை பார்த்து இன்றும் இளம் இயக்குனர்கள் மிரண்டு கொண்டிருக்கிறார்கள்...
ஹீரோக்களுக்கு எப்படியெல்லாம் காட்சிகள் இருந்தால் மக்கள் ரசிப்பார்கள் என்பதை ஆர்கே செல்வமணி பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார். ஹீரோயிசமும், வில்லனுக்கான முக்கியத்துவமும் மிகத்தரமாக இருக்கும். இந்த படத்தில் சுவர்ணலதா குரலில் அமைந்த 'ஆட்டமா தேரோட்டமா' பாடல், குரலில், பின்னணி இசை இன்று வரை கேட்ட உடன் ரசிக்க தூண்டும்..வீரப்பன் மட்டுமல்ல.. வீரப்பன் உருவாக காரணமானவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றுகறார் அரசியலையும் கேப்டன் பிரபாகரன் பேசியிருக்கும். இந்த கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிறகே விஜயகாந்த்தின் ஒவ்வொரு படத்திலும் கேப்டன் என்ற அடைமொழி சேர்ந்து கொண்டது.
கேப்டன் பிரபாகரன் படத்தின் திரைக்கதை மற்றும் அவரது நடிப்பு மட்டுமல்ல, முன்னின்று அவர் செய்த செயல்களும் 'கேப்டன்' என்ற பட்டம் சினிமா துறையில் அவருக்கு ஒட்டிக்கொள்ள காரணமாக இருந்தது. நடிகர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியபோது, திரைப்படம் மட்டுமல்லாது, தொழில் விஷயங்களில் தீவிரமாகப் பங்கேற்றதால், 'கேப்டன்' என்று சினிமா நட்சத்திரங்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். பல இயக்குனர்களை தொழில்துறைக்கு அறிமுகப்படுத்துவதிலும், வடிவேலு மற்றும் விஜய் உட்பட இன்றைய முன்னணி நடிகர்கள் பலருக்கு அவர்களின் ஆரம்ப காலங்களில் ஆதரவளித்ததிலும் விஜயகாந்த் முக்கிய பங்கு வகித்தார்.
பிரபலமான தமிழ் சினிமாவிலும் 'கேப்டன்' என்ற பெயருடன் அவர் அழைக்கப்பட்டார். விஷால் நடிதத் செல்லமே படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் மற்றும் நடிகை மும்தாஜ் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் விஜயகாந்த்தை 'கேப்டன்' என்று குறிப்பிடப்பட்டார்.
இதனிடையே விஜயகாந்திற்கு கேப்டன் என்று பட்டம் தரப்பட்டத்திற்கு எதிராக 2014 ஆம் ஆண்டு, முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எல்லாம் தொடர்ந்தார். இந்த பட்டம் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், நடிகர்களுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார். ஆனாலும் கேப்டன் என்ற பெயர் விஜயகாந்திற்கு நிலைத்தது. விஜயகாந்த், 'கேப்டன் டிவி' என்ற தமிழ் தொலைக்காட்சியை ஆரம்பித்தார். அவருடன் சமகாலத்தவர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் 'சூப்பர் ஸ்டார்', 'உலக நாயகன்' எனப் பெயர் சூட்டப்பட்ட நிலையில், விஜயகாந்த் 'கேப்டன்' என்று அழைக்கப்படுகிறார். கேப்டன் என்றால் அது விஜயகாந்த் தான் என்பது மறையாத புகழாக அவருக்கு மாறியது.












Click it and Unblock the Notifications